2010-04-03 14:20:14

திருத்தந்தை - புனித வெள்ளி மாபெரும் நம்பிக்கையின் நாள்


ஏப்ரல் 03,2010 புனித வெள்ளி மாபெரும் நம்பிக்கையின் நாள் என்று உரோமை கொலோசேயத்தில் இவ்வெள்ளி இரவு நடைபெற்ற சிலுவைப்பாதையின் இறுதியில் கூறினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

பாலட்டைன் குன்றில் அமைக்கப்பட்டிருந்த சிறிய மேடையிலிருந்த பேசிய திருத்தந்தை, கிறிஸ்து நம்மீது எவ்வளவு ஆழமான அன்பைக் கொண்டிருந்தார் மற்றும் கொண்டிருக்கின்றார் என்பதை சிலுவைப்பாதையின் போது கண்டுணர முடியும் என்று கூறினார்.

மனிதனின் பாவத்தினால் உருக்குலைந்த, முழுவதும் வேதனை நிறைந்த, கேலிசெய்யப்பட்ட மற்றும் அவமதிக்கப்பட்ட இயேசுவின் முகத்தை இந்த இரவில் நாம் தியானித்தோம் என்றுரைத்த அவர், முழுவதும் மகிழ்ச்சியும் ஒளியும் வீசுகின்ற, சுடர்விடுகின்ற அவரது திருமுகத்தை நாளைத் தியானிக்கவிருக்கின்றோம் என்றார்.

மனிதன் தனது சக்தியற்ற இறுதி நிலையைத் தொடும் கல்லறையும் மரணமும் கிறிஸ்து கல்லறையில் வைக்கப்பட்ட அந்த நேரம் முதல் நம்பிக்கையற்ற இடங்களாக இல்லாமல் போனது என்றும் கூறிய திருத்தந்தை, சிலுவையில் உச்சநிலையை அடைந்த புனித வெள்ளி மாபெரும் நம்பிக்கையின் நாளாக அமைகின்றது என்றார்.

இப்புவியில் விழுந்து கிழிக்கப்பட்டு உடைக்கப்பட்டு இறந்த கோதுமை மணியாக இயேசு இருக்கிறார், இதனாலே அந்த மணி மிகுந்த பலனைத் தந்தது என்றும் அவர் தெரிவித்தார்.

கைவிடப்படல், தனிமை, தோல்வி ஆகியவற்றின் அடையாளமாகத் தெரிந்த சிலுவை, இயேசு அதில் உயர்த்தப்பட்ட நேரமுதல் புதிய தொடக்கமாக மாறியது, மரணத்தின் ஆழத்திலிருந்து நித்திய வாழ்வின் வாக்குறுதி உதித்தது, சிலுவையில், உயிர்ப்பு வைகறையின் வெற்றிச்சுடர் ஏற்கனவே சுடர்விடுகின்றது என்றும் திருத்தந்தை கூறினார்.

எல்லாவற்றையும் தகர்ப்பதாகத் தெரிகின்ற நமது தோல்விகளும் கசப்புணர்வுகளும் மாயைகளும் நம்பிக்கையால் ஒளியூட்டப்படுகின்றன, திருச்சிலுவையின் அன்புச்செயல் எல்லாவற்றையும் மாற்றுகின்றது, மறுதலிப்பிலிருந்து நட்பறவும் புறக்கணிப்பிலிருந்து மன்னிப்பும் வெறுப்பிலிருந்து அன்பும் பிறக்கின்றன என்றும் இவ்வெள்ளி இரவு சிலுவைப்பாதைக்குப் பின்னர் ஆற்றிய உரையில் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.