2010-04-02 14:40:51

சிலுவைப் பாதை... அன்றும், இன்றும்...


முன்னுரை:
ஆறில் சாகலாம், நூறில் சாகலாம். ஆனால், இளமையில் சாவது கொடுமை. அதுவும், வாழ்ந்து வந்த முப்பத்து மூன்று ஆண்டுகளில் ஒவ்வொரு நாளும் நல்லதையே செய்து வந்த ஒரு இளைஞன் மேல் பொய் குற்றங்களைச் சுமத்தி, கொலை செய்வது பெரும் கொடுமை. மதத்தின் பெயரால், கடவுளின் பெயரால் செய்யப்பட்ட அநியாயமான அரசியல் கொலை இது.
இயேசுவின் இந்தச் சிலுவைப் பாதையில், சிலுவை மரணத்தில் பங்கு பெற்றவர் பலர்.
தேவதாய், வெரோனிக்கா, சீமோன் போன்ற நல்ல உள்ளங்களின் உதவிகளை எண்ணும் போது மனதில் ஆறுதல் பிறக்கிறது.
ஆனால்... பிலாத்து, ஏரோது, யூத மதத் தலைவர்கள், யூதாஸ், "இயேசு வேண்டாம், பரபாஸ் வேண்டும்..." என்று கூச்சலிட்ட யூதர்கள்... இப்படி பலரை நினைக்கும் போது மனதில் கோபம் எழுகிறது.
இவர்கள் ஏன் இப்படி நடந்து கொண்டார்கள்? இவர்களுக்கு மனசாட்சியே இல்லையா? என்ற பல கேள்விகள் மனதில் எழுகின்றன.

நாம் அன்று இருந்திருந்தால், என்ன செய்திருப்போம்?
தவறான எண்ணங்களுடன், பல மறைமுகமான நோக்கங்களுடன் இயேசுவின் பாடுகளுக்கு, மரணத்திற்கு நாமும் காரணமாக, அல்லது உடந்தையாக இருந்திருப்போம். அல்லது, இயேசுவுடன் வெளிப்படையாக நம்மையே இணைத்துக் கொள்வதற்குப் பயந்து, மறைமுகமாக அவருக்கு உதவி செய்ய முயற்சி செய்திருப்போம்.
அல்லது, இயேசுவுக்குப் பாதகமாகவோ, சாதகமாகவோ நடந்து கொள்ளாமல், 'நமக்கேன் வம்பு' என்று ஒதுங்கி நின்று வேடிக்கைப் பார்த்திருப்போம்.
அல்லது, உண்மைக்காக, நீதிக்காக குரல் கொடுக்கும் வகையில் இயேசுவின் மரணத் தீர்ப்பை எதிர்த்து குரல் கொடுத்து வம்பில் மாட்டியிருப்போம். உரோமைய அரசு இயந்திரம் ஒரு வேளை நம்மையும் சிலுவை மரணத்திற்குத் தீர்ப்பிட்டிருக்கும்.
அன்றைய வரலாற்றுச் சிலுவைப் பாதையில் நாம் கலந்து கொண்டிருந்தால், என்னென்னவோ செய்திருக்கலாம், செய்யாமல் போயிருக்கலாம். அந்தச் சந்தர்ப்பம் நமக்குக் கிடைக்கவில்லை.

இன்றைய நடைமுறையில் சந்தர்ப்பங்கள் நம்மைத் தேடி வருகின்றன. இயேசுவின் சிலுவைப் பாதை இன்றும் தொடர்வதை நாம் உணர்கிறோம். இன்று நம்மால் என்ன செய்ய முடியும்? மனத்தால், சொல்லால், செயலால் இந்த அநியாயமான சிலுவைப் பாதைகள் தொடராமல் இருப்பதற்கு நாம் முயற்சி செய்யலாமே! இயேசுவின் சிலுவைப் பாதையின் சில நிகழ்வுகளில் நாமும் பங்கேற்போம்.


அன்று இயேசு தீர்ப்பிடப்பட்டார்.

பிலாத்து சொல்வதைக் கேட்போம்
நான் என் பதவிக் காலத்தில் எத்தனையோ பேருக்கு மரண தண்டனை கொடுத்திருக்கிறேன். சீசருக்குப் பிடிக்கும் என்று தெரிந்தால், என் பதவிக்கு ஆபத்து வரும் என்று தெரிந்தால், தவறான தீர்ப்புகளை, அநியாயம் என்று மனதார உணர்ந்தும், தந்திருக்கிறேன். என் வாழ்வின் லட்சியம் எல்லாம் பதவிகள் பெற வேண்டும், கிடைத்த பதவிகளைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும், இன்னும் உயர் பதவிகளை அடைவதற்கு மேலதிகாரிகளைச் சந்தோஷமாக வைத்திருக்க வேண்டும்.
இப்படியே வாழ்ந்து பழகி விட்ட நான் இன்று குழம்பிப் போயிருக்கிறேன். நாசரேத்தூரில் பிறந்ததாகச் சொல்லப்படும் இயேசு என்ற இந்த இளைஞனைப் பார்த்ததிலிருந்து, அவனிடம் பேசிய ஒரு சில நிமிடங்களிலிருந்து என் மனசாட்சி என்னைக் குற்றவாளியாக்கியுள்ளது.
என் மனசாட்சி மட்டுமில்லாமல், என் மனைவியும் என்னைக் குழப்புகிறாள். இந்த இளைஞனை எவ்வகையிலும் நான் தண்டிக்கக் கூடாதென்பது அவளது விருப்பம். ஆனால், இதே இளைஞனை அநியாயமாக கொல்லச் சொல்கிறார்கள் மதத் தலைவர்கள். மக்களையும் தூண்டிவிட்டு வேடிக்கைப் பார்க்கிறார்கள்.
இவர்களுடைய ஆவேசமான ஓலங்களை எல்லாம் மீறி என் மனைவியின் வேண்டுகோளுக்கு, என் மனசாட்சியின் குரலுக்கு நான் கீழ்ப்படிய நினைத்தேன். ஆனால், என் பதவிக்கு ஆபத்து வரும் போல் தெரிந்தது. "இவனை நீர் விடுவித்தால், செசாரின் நண்பர் அல்ல..." என்று இவர்கள் சொன்னது என்னை நிலை குலையச் செய்தது. எனக்கு என் பதவிதான் முக்கியம், சுக வாழ்வுதான் முக்கியம். என் மனசாட்சி முக்கியமல்ல. இயேசுவை, இந்த நிரபராதியை நான் சாவுக்கு, சிலுவைச் சாவுக்குத் தீர்ப்பிட்டேன்.

இன்றும் இயேசு தீர்ப்பிடப் படுகிறார்.

போய்யான வழக்குகள், அநியாயமான தீர்ப்புகள்... அடிக்கடி இவற்றைப் பற்றி கேள்விப்பட்டு நாம் கசந்து, நொந்து போயிருக்கிறோம். நம் நாட்டின் நீதி மன்றங்களில், பணமும் பதவியும் பலரது நியாயமான குரல்களை ஒடுங்கச் செய்துள்ளன. மனசாட்சி அடிக்கடி இங்கே விலை பேசப்படுகிறது. எதிர் கேள்வி கேட்கும் பல இளைஞர்கள் பட்டப் பகலில் ஊருக்கு நடுவே வேட்டப்படுகிறார்கள் அல்லது சிறைச் சாலைகளில் காவல் துறையினர் கண் காணிப்பில் இறந்து விடுகின்றனர்.  நம் வாழ்வில், பொய்மைக்கும், அநீதிக்கும் நாம் எத்தனை முறை, எவ்வளவு தூரம் துணை போயிருக்கிறோம்?



அன்று இயேசு தம் தாயைச் சந்தித்தார்
மரியா பேசுவதைக் கேட்போம்:

அன்று தேவதூதன் கொடுத்த அழைப்பிற்கு 'இதோ, இறைவனின் அடிமை' என்று ஏன் சொன்னேன்? இப்படி ஒரு கோலத்தில் என் மகனைச் சந்திக்கவா நான் அந்த சம்மதத்தைத் தந்தேன்?
தலைமுறை தலைமுறைகள் எல்லாம் என்னைப் புனிதவதி என்று போற்றுவது ஒருபுறம் இருந்தாலும், இன்று, இதோ என் மகனை இந்த நிலையில் பார்க்கிறேனே. என்னைப் புண்ணியவதி, பாக்கியவதி என்று எப்படி சொல்ல முடியும்?
இரத்தக் கரையும், புழுதியும் படிந்து அலங்கோலமாய் கிழித்து எறியப்பட்ட கந்தல் துணியைப் போல என் முன் நிற்கும் இவன் என் மகனா? இவனைக் கடவுளின் மகன் என்று எப்படி சொல்ல முடியும்?
கடவுளே, உனக்குப் பிடித்தவர்களை நீ சோதிப்பாய் என்பதைக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், உன் சோதனைக்கு ஒரு அளவு இல்லையா?
என் மகன் பிறப்பதற்கு முன்னும், பிறந்த நேரம் முதலும் அடுக்கடுக்காய் எத்தனை துன்பங்கள்? இறுதியில் என் மகன் ஒரு குற்றவாளி என்று மரண தண்டனை ஏற்று என் முன் இங்கே நிற்கிறானே, இதை என்னால் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? இந்த நிலையில் என் மகனைப் பார்ப்பதற்காகவா நான் இத்தனை காலம் உயிர் வாழ்ந்தேன்?

(சிறிது நேர அமைதிக்குப் பின்)

எனினும் என் மகனின் கண்களில் நான் காணும் ஆழ்ந்த அமைதி எனக்கு உறுதியைத் தருகிறது. பிறந்தது முதல் இவனுக்குப் பாலூட்டி, இறை அன்பு, நம்பிக்கை எனும் பாடங்களும் ஊட்டியவள் நான்தானே. என்னிடம் இவன் கற்றுக் கொண்ட பாடங்களால் தானே இன்று இவனுக்கு இந்த நிலை? நான் சொல்லித் தந்த பாடங்களை இன்று என் மகன் மூலம் நான் மீண்டும் கற்றுக் கொள்கிறேன். உண்மைக்கு, அன்புக்கு, நன்மைக்கு எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் அவை அழியாது. நானும் என் மகனோடு நடக்கப் போகிறேன்.

இன்றும் இயேசுவின் தாயைச் சந்திக்கலாம்.

நாம் அனைவரும் நமது தாய்மார்களை நினைத்துப் பார்க்க இது ஒரு நல்ல நேரம். இவர்கள் நமக்குச் சொல்லித் தந்த வாழ்க்கைப் பாடங்களுக்காக, நமக்கு இவர்கள் பாலூட்டி, உணவூட்டி, நல்ல பாடங்களையும் ஊட்டியதற்காக இறைவனுக்கு நன்றி சொல்வோம்.
வாழ்க்கையில் இந்தத் தாய்மார்கள் சந்தித்துள்ள சிலுவைப் பாதைகளுக்காக, அந்த சிலுவைகளை இவர்கள் சுமந்து, மற்றவர்களும் சுமக்க உதவி செய்யும் வகையில் இவர்கள் ஊட்டிய வீர உணர்வுகளுக்காக மனமார இவர்களைப் புகழ்வோம்.
இதே நேரத்தில் இந்தத் தாய்மார்களை வேதனைப் படுத்திய, சித்ரவதை செய்த நம் கல் நெஞ்சங்களுக்காக, அந்தக் கொடிய நேரங்களுக்காக இறைவனின் சந்நிதியில் நம் ஒவ்வொருவரின் தாயிடமும் மன்னிப்பு கேட்போம்.



அன்று சீமோன் இயேசுவுக்கு உதவினார்.

சீமோன் பேசுவதைக் கேட்போம்
நான் எருசலேம் திருவிழாவ வேடிக்கைப் பாக்க வந்தவன். திருவிழா நேரங்கள்ல சின்னச் சின்ன கலகங்கள் வரும்; ரோமையப் படை வீரன்க வருவான்க, கலகத்தை அடக்குறேன்னு சொல்லி, வெறிபிடிச்சவங்க மாதிரி எல்லாரையும் அடிப்பான்க. வழக்கமா இந்த கலகங்கள்ல அப்பாவி ஜனங்கதான் ரொம்ப அடிபடுவாங்க. கலகம் செஞ்சவங்களும், கலகத்தை அடக்குறவங்களும் அடிபட மாட்டாங்க.
அன்னைக்கும் எருசலேம் திருவிழா நேரத்துல திடீர்னு ஒரு கும்பல். என்னன்னு பாக்கப் போனேன். மூணு கைதிகளை இழுத்துகிட்டு வந்தாங்க. ஊருக்கு வெளிய சிலுவைல அறஞ்சு கொல்றதுக்கு அவங்கள இழுத்துகிட்டு வந்தாங்க. ரெண்டு பேருடைய குத்தம் என்னன்னு தெளிவா தெரிஞ்சுச்சு. ஆனா, மூணாவது ஆளு செஞ்ச குத்தம் என்னன்னு சரியாத் தெரியல. 'யூதரின் அரசன்'னு அவன் சொன்னானாம். அதுக்காக மரணதண்டனையாம்.
மத்த ரெண்டு கைதிகளை விட அந்த ஆளு ரொம்ப பரிதாபமான நிலைல இருந்தான். ரோமைய வீரன்க அந்த ஆளை ரொம்பவே அடிச்சான்க. அந்தப் பரிதாபத்தை நான் ரொம்ப கூர்ந்து பாத்துட்டேன் போல இருக்கு. என்னையையே பாத்துகிட்டிருந்த ஒரு ரோமைய வீரன் என்னைக் கூப்புட்டான். அவனுக கூப்பிட்டப்புறம் என்ன செய்றது? ஒரு கொலை குத்தவாளிக்கு உதவி செய்யப் போனேன். அந்த ஆளு பேரு இயேசுவாம். அந்த ஆளுடைய சிலுவைய கொஞ்ச தூரம் நான் தூக்கிக்கிட்டு போனேன்.
மத்த ரெண்டு குத்தவாளிகளும் வெறுப்போட, வேதனையோட எல்லாரையும் திட்டிகிட்டே போனாங்க. ஆனா, இந்த இயேசு அமைதியா வந்தாரு. அவரப் பாத்தா ரொம்ப நல்லவரு மாதிரி தெரிஞ்சது. ஒரு நல்ல மனுசனுக்குக் கொஞ்ச நேரமாவது உதவி செஞ்சோமேன்னு திருப்தியில ஊருக்கு வந்தேன்.

இன்றும் சீமோன்கள் உதவி செய்கிறார்கள். 
குஜராத், ஒரிஸ்ஸா மாநிலங்களில் இயற்கைப் பேரழிவின் போதும், மதக் கலவரங்களின் போதும், ஒரு சில அடிப்படை வாதக் குழுக்கள் மதத்தின் அடிப்படையில் உதவிகளை விட உபத்திரவங்கள் அதிகம் செய்து வந்த போது, மதத்தைத் தாண்டி மனிதாபிமானத்தின் அடிப்படையில் உதவிகள் செய்த பல நூறு உள்ளங்களைப் பற்றி கேள்வி பட்டோம். மனம் ஆறுதல் அடைந்தது. சுனாமி நம்மை நிலைகுலையச் செய்த போதும் இதே போல் பல உள்ளங்கள் தங்கள் உயிரையும் ஒரு பொருட்டாக எண்ணாமல் உதவிகள் செய்ததும் ஒரு சிலர் அவ்வுதவிகளைச் செய்த போது உயிரிழந்ததையும் கேள்வி பட்ட போது, சீமோன்கள் இன்னும் நம்மிடையே இருப்பதை உணர்ந்தோம். சீமோன்கள் இருப்பதாலேயே உலகில் இன்று நடக்கும் சிலுவைப் பாதைகள் கொஞ்சம் எளிதாகின்றன.
சீமோன்களாக வாழ பல துன்ப நிகழ்வுகள் வழியாய் இறைவன் நம் ஒவ்வொருவரையும் தினமும் அழைத்து வருகிறார்.



அன்று வெரோனிக்கா இயேசுவின் முகத்தைத் துடைத்தார்  
வெரோனிக்கா பேசுவதைக் கேட்போம்
நான் பிறந்து வளர்ந்த யூத சமுதாயத்தில் வெட்கப்பட வேண்டிய பல அம்சங்கள் உண்டு. பொது வாழ்வில், பொது இடங்களில் பெண்களுக்குப் பங்கு இல்லை என்பது அப்படிப்பட்ட அம்சங்களில் ஒன்று.
பெண்களாகிய நாங்கள் பலமற்றவர்கள், பொது வாழ்வுக்கும், பொதுப் பணிகளுக்கும் பயனற்றவர்கள் என்பது ஆண்களின் தவறான ஒரு கணிப்பு. துன்பங்கள், சவால்கள் வரும்போது எங்களைப் போன்ற பெண்களுக்கு உண்டாகும் உறுதியும் வீரமும் உணர்ந்து பார்க்க வேண்டிய உண்மை. சொல்லித் தெரிவதில்லை.
அன்று, எருசலேம் விழாவின் பொது, இயேசு என்ற மகானை சிலுவையில் அறைந்து கொல்ல இழுத்துச் சென்றது ஒரு கும்பல். தூசியும், இரத்தமும் கலந்த அந்த மகானின் முகம் பார்ப்பதற்கு அதிகப் பரிதாபமாய் இருந்தது. அந்த முகத்தைத் துடைத்துவிட என் கைகள் துடித்தன. ஆனால், ஆண்கள் அதிகமாய் கூடி, கொலை வெறியுடன் கூச்சலிட்டுக் கொண்டு வந்த அந்த கும்பலுக்கு நடுவே சென்று அந்த உதவியைச் செய்ய பயந்து நின்றேன். அந்த நேரத்தில், ஊர் பேர் தெரியாத ஒரு அப்பாவியை உரோமைய வீரர்கள் கட்டாயப்படுத்தி இயேசுவின் சிலுவையைச் சுமக்கச் செய்ததைப் பார்த்தேன். அப்போது என் மனதில் உறுதி பிறந்தது.
“மரபுகளையும், வரம்பையும் மீறி நடந்து கொண்டாள் இந்தப் பெண்” என்று அந்தக் கொலை கும்பல் என்னைக் கல்லால் எறிந்து கொன்றாலும் பரவாயில்லை. நல்லவர் ஒருவருக்கு உதவி செய்தோம் என்ற அந்த நல்ல உணர்வு எனக்குப் போதும். கூட்டத்தை விலக்கி முன் சென்றேன். அந்த நல்லவரின் முகத்தைத் துணியால் துடைத்தேன். அந்த மகான் என்னைக் கருணையுடன், அன்புடன் பார்த்த பார்வை என் நெஞ்சில் ஆழமாய் என் வாழ்நாள் முழுவதும் பதிந்து விட்டது.

இன்றும் முகங்கள் அழிக்கப்படுகின்றனஉருவாக்கப்படுகின்றன
மதம், மொழி, சாதி இவைகளால் முத்திரை குத்தப்பட்டு எத்தனை பேர் இன்று முகமிழந்து, முகவரி இழந்துள்ளனர். ஒரு குறிப்பிட்ட சாதியில் பிறந்து விட்ட ஒரே காரணத்தால் பெயர்கள் மறக்கப்பட்டு, சாதியின் பெயர் சொல்லி அவர்களை அழைத்து, அவர்கள் முகங்களை, பெயர்களை, மனிதத் தன்மையை அழித்து வருகிறோம்.
சாதிய சண்டைகளில், கட்சி சண்டைகளில், மதக் கலவரங்களில், காதல் வெறியாகிப் போன நேரங்களில் அமிலங்கள் வீசப்பட்டு முகம் கருகி, முகம் இழந்து வாழும் அப்பாவி மக்களை நினைத்துப் பார்ப்போம். இந்தக் கலவரங்களில் ஒரு தலைவனோ, தலைவியோ முகம் இழந்ததாக வரலாறே இல்லை. முகம் இழப்பது எல்லாம் சாதாரண மக்கள் தாம்.
முகங்களை உருவாக்கும் பணியிலும் நம்மில் பலர் ஈடுபட்டுள்ளனர். சமுதாயத்தில் ஓரம் கட்டப்பட்டு ஒதுங்கி வாழும் இவர்களை மீண்டும் மனித சமுதாயத்தில் முகவரி கொடுத்து, தனித் தன்மை கொடுத்து வாழ வைக்க முயற்சி செய்யும் பல நல்ல உள்ளங்களையும் இப்போது நினைத்து அவர்களுக்காக இறைவனுக்கு நன்றி சொல்வோம்.



அன்று இயேசுவைச் சிலுவையில் அறைந்தனர்
ரோமையர்கள் கண்டுபிடித்த பல்வேறு சித்திரவதைகளுக்கெல்லாம் கொடு முடியாக, சிகரமாக இருந்தது சிலுவை மரணம் தான். சிலுவை மரத்தில் அறையப்பட்டவர்கள் எளிதில் சாவதில்லை. மூன்று ஆணிகளால் உடல் தொங்கும் போது, சரியாக மூச்சுவிட முடியாமல் திணறுவார்கள். மூச்சு விடுவதற்கு அந்த ஆணிகளின் உதவியுடன் மேலே வர வேண்டும். அப்படி உடலை மேலே எடுத்து வரும் போது வேதனை உடல் முழுவதும் பரவும், அந்த வேதனையில் அவர்கள் கதறுவார்கள். இப்படி அணு அணுவாக, விடுகின்ற ஒவ்வொரு மூச்சுக்கும் சித்திரவதை பட்டு சாவார்கள்.
ஒரு சில பேர் இப்படி உயிரோடு போராடி நாட்கணக்கில் மரண ஓலம் எழுப்புவது எருசலேம் நகர் வரை கேட்கும் என்று ரோமைய வரலாறு, விவிலியம் இவற்றில் ஆராய்ச்சி செய்தவர்கள் கூறியுள்ளனர்.
இந்த மரண ஓலத்தில், வேதனைக் கதறலில் அதிகமான குற்றவாளிகள் சொல்லும் வார்த்தைகள் எல்லாம் வெறுப்புடன் வெளிவரும் சாபங்களாய் இருக்கும். தங்களை இந்த நிலைக்குக் கொண்டு வந்த தங்களை, தங்கள் குடும்பத்தினரை, பிறரை, கடவுளைச் சபித்துக் கொட்டும் வெறுப்பு வார்த்தைகளே அங்கு வெடிக்கும்.
அப்படிப்பட்ட ஒரு வேதனையின் கொடுமுடியிலும், தான் விடும் ஒவ்வொரு மூச்சுக்கும் மரண போராட்டமே நிகழ்த்தி வந்த இயேசு, சிலுவையில் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் உன்னதமானது. அவரது மரண சாசனம் அது. அவர் சொன்ன வார்த்தைகள் நம் நெஞ்சத்தின் ஆழத்தைத் தொடட்டும்.

இயேசு மரண வேதனையுடன் பேசுவதைக் கேட்போம்:
 


அன்பு ஒன்றையே உயிர் மூச்சாக்கி, அன்புக்காகவே துடித்து வந்த ஒரு நல்ல இதயம் மூச்சடங்கி, துடிப்பு ஓய்ந்து போனது. சிலுவையில் தொங்கும் இந்த வீரனுக்கு முன் நாம் மனம் திறந்து அமைதியில், உள்ளத்தின் ஆழத்தில் இருந்து வரும் உணர்வுகளை எடுத்துச் சொல்வோம்.


அன்று இயேசுவின் உடலை மரியாவின் மடியில் கிடத்தினார்கள்.

மரியா பேசுவதை மீண்டும் கேட்போம்
என் மகனே, என் மகனே உனக்கு ஏனய்யா இந்த கதி? இந்தக் கைகளால் எத்தனை பேரை நீ தொட்டு குணமாக்கினாய்? இப்போது அந்தக் கைகளை ஆணிகளால் துளைத்திருக்கிறார்களே! எத்தனை பேருக்கு நீ உயிர் பிச்சை தந்திருக்கிறாய். அவர்கள் எல்லாருமே சேர்ந்து உன் உயிரை எடுத்து விட்டார்களே! இன்னும் நீ இவர்களுக்கு என்ன செய்யாமல் விட்டு விட்டாய்? ஏன் உன்னை இந்த வெறியோடு பழி வாங்கியிருக்கிறார்கள்? என்னால் புரிந்து கொள்ள முடியவில்லையே!

(சிறிது நேர அமைதிக்குப் பின்)

என் மகனே, எனக்கு ஓரளவு புரிகிறது. நீ இந்த உலகம் சொன்ன வழியில் போக மறுத்தாய். இவர்கள் எதிர்பார்த்த வழிகளில் நீ நடக்கவில்லை. தந்தை இறைவன் சொன்ன வழியில் மட்டும் நீ வாழ்ந்தாய். அது அவர்களுக்குப் பிடிக்கவில்லை. உன் உடலை அழித்து விட்டால் உன்னையும் உன் வழிகளையும், போதனைகளையும், நீ கனவு கண்டு கட்டி எழுப்பிய இறை அரசையும் அழித்து விடலாம் என்று தப்பாக அவர்கள் நினைத்து விட்டனர்.
எனக்குத் தெரியும் என் மகனே, உனக்கு அழிவு இல்லை. உன் கனவுகளுக்கும், இலட்சியங்களுக்கும் அழிவு இல்லை.
நீ குழந்தையாய் இருந்த போது உன்னைத் தாலாட்டு பாடி தூங்க வைத்தேன். இப்போதும் உன்னை என் மடியில் கிடத்தி தாலாட்டு பாடுகிறேன். ஆனால், இந்த தாலாட்டு நீ தூங்குவதற்கு அல்ல. மீண்டும் நீ உயிர் பெற்று வருவதற்கு. என் செல்வ மகனே, உன்னைப் பெற்றதால், நான் பெரிய பாக்கிய சாலி.

இன்றும் வீரத் தாய்களைச் சந்திக்கிறோம் 
அன்பு உள்ளங்களே, தங்கள் பிள்ளைகளை இறை அரசு பணிகளுக்கோ, அல்லது நீதிப் பணிகளுக்கோ தியாகம் செய்துள்ள வீரத் தாய்களை இப்போது நினைத்து பார்த்து இறைவனுக்கு நன்றி சொல்வோம். இப்படி தியாகம் செய்யப்பட்டவர்களில் பலர் இந்தப் பணிகளில் உயிரும் துறந்திருக்கலாம், அவர்களுக்காகச் சிறப்பாக இறைவனுக்கு நன்றி சொல்லும் நேரம் இது.


அன்று இயேசு அடக்கம் செய்யப்பட்டார்; உயிர்த்தெழுந்தார்.

இன்றும் இயேசு புதைக்கப்படுகிறார்; உயிர்த்தெழுகிறார்
'போராளி புதைக்கப்படுவத்தில்லை; மாறாக விதைக்கப்படுகிறான்'. இத்தகைய வீர வசனங்கள் நம் உள்ளத்தைத் தொட்டிருக்கலாம். உலகத்தின் எல்லா நாடுகளிலும் நீதிக்காக உயிர் துறந்த, இன்றும் உயிர் துறக்கும் தியாகிகளை நினைத்துப் பெருமைப் படுவோம். இதோ, நாம் இந்த சிலுவைப் பாதையை மேற்கொண்ட இந்த ஒரு மணி நேரத்தில் எத்தனையோ வீரர்கள், வீரப் பெண்மணிகள் நீதிக்காக கொலை செய்யப் பட்டிருக்கிறார்கள். இவர்களில் பலருக்கு அடக்கம் என்ற இறுதி மரியாதை கூட கிடைப்பதில்லை. பலர் சிறைச் சாலைகளில் கொலை செய்யப்பட்டு, ஆழ் கடலிலும், காடுகளிலும், தெருவோரங்களிலும், தூக்கி எறியப்படுகிறார்கள்.

இயேசுவுக்கு  இந்தக் கல்லறை உயிர்ப்பின் கோவிலாக மாறியது. அதேபோல் அனாதைகளாக, புதைக்கப்படாமல் வீசி எறியப்பட்டு உருக்குலைந்து போகும் பல வீர உயிர்கள் உண்மையில் புதைக்கப்படுவதில்லை, விதைக்கப்படுகிறார்கள்.
இவர்களுடைய வாழ்வும், நீதியின் தாகமும் நம்மில் உயிர் பெறும் என்ற நம்பிக்கை தான் இந்த வீர உள்ளங்களைச் சாவு வரைக்கும் இட்டுச் சென்றுள்ளது. இனியும் இட்டுச் செல்லும்.

எங்கள் பேரில் தயவாயிரும்...
 இறுதி செபம் இறைமகன் இயேசுவே, எங்களில் ஒருவராகப் பிறந்தீர். வாழ்வின் எல்லா நிலைகளிலும் வாய்ப்புகள் மறுக்கப்பட்டு துன்புறுத்தப்படும் மக்களோடு நீர் உம் வாழ்வை இணைத்தீர். நீதிக்கும் இறை அரசுக்கும் நீர் குரல் கொடுத்ததனால் ஒரு குற்றவாளி என்று அநியாயமாய் தீர்ப்பிடப்பட்டு கொலை தண்டனையையும் ஏற்றீர்.
இவை அனைத்திற்காகவும் உமக்கு நன்றி செலுத்துகிறோம். உம் வாழ்வை, பாடுகளைச் சிந்திக்கும் நாங்கள் உமது வாழ்வை, வழிகளை ஓரளவாகிலும் பின்பற்றி வாழ நல் எண்ணத்தையும், மன உறுதியையும் தந்தருளும்.

துன்பத்தில் புடமிடப்பட்டு
இன்று வாழ்வுக்கே இலக்கணமாய் மீண்டும் உயிர் பெற்று
என்றும் எங்களுக்கு வாழ்வாக, வழியாக் விளங்கும்
கிறிஸ்துவே உம்மை வேண்டுகிறோம். ஆமென்.







All the contents on this site are copyrighted ©.