2010-03-31 16:14:58

மாஸ்கோ சுரங்க இரயில் கட்டமைப்பில் குண்டு வெடிப்பில் பலியானவர்களுக்குத் திருத்தந்தை செபம்


மார்ச் 31,2010 மாஸ்கோ சுரங்க இரயில் கட்டமைப்பில் இத்திங்கள் மாலை இடம் பெற்ற குண்டு வெடிப்பில் பலியானவர்களுடனான தமது ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவித்துள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

இரஷ்ய அரசுத்தலைவர் திமித்ரி மெட்வதேவுக்கு (Dimitri Medvedev) திருத்தந்தை அனுப்பியுள்ள அனுதாபத் தந்திச் செய்தியில், கொடூரமான இந்த வன்முறைத் தாக்குதல்கள் குறித்து தான் மிகவும் வருந்துவதாகவும், அதேவேளை அவற்றைக் கடுமையாகக் கண்டிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இத்தாக்குதல்களில் இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கானத் தமது செபத்தையும், அவர்களுடனானத் தனது தோழமையையும் தெரிவித்துள்ளார் திருத்தந்தை.

இந்தத் தற்கொலைப் படையினரின் இரண்டு குண்டு வெடிப்புத் தாக்குதல்களில் 39 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் எழுபதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மேலும் பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

இது குறித்து மாஸ்கோவில் இச்செவ்வாயன்று துக்க நாளும் கடைபிடிக்கப்பட்டது. ஏராளமான பொதுமக்கள், மெழுகுவர்த்தி ஏற்றியும், மலர் வளையங்கள் வைத்தும் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன், அமெரிக்க ஐக்கிய நாட்டு அதிபர் ஒபாமா உட்பட பல தலைவர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.








All the contents on this site are copyrighted ©.