2010-03-31 16:20:07

நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் ஆபத்தான பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஐ.நா.பொதுச் செயலர் வாழ்த்து


மார்ச் 31,2010 தங்கள் வாழ்வைப் பணயம் வைத்து, தைரியமுடன் நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் ஆபத்தான பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்குத் தனது வாழ்த்தைத் தெரிவித்துள்ளார் ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன்.

ஏப்ரல் 4ம் தேதி கடைபிடிக்கப்படும் நிலக்கண்ணி வெடிகள் குறித்த சர்வதேச விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு செய்தி வெளியிட்டுள்ள பான் கி மூன், நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் பணி, அறுபதுக்கும் அதிகமான நாடுகள் மற்றும்பிற இடங்களில் செய்யப்பட்டு வருவதாகக் கூறியுள்ளார்.

இந்தப் பணி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மணி நேரமும் இடம் பெற்று வருவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், தாறுமாறாக வைக்கப்படும் இவ்வெடிகள் சண்டைகள் முடிந்த பின்னரும் அந்நாடுகளின் சமூக, பொருளாதார மற்றும் வளர்ச்சி நடவடிக்கைகளுக்குத் தடைகளாக இருக்கின்றன என்று குறை கூறியுள்ளார்.

ஆப்கானிஸ்தான், சூடான், கம்போடியா, காங்கோ ஜனநாயக குடியரசு ஆகிய நாடுகளில் சாலைகளில் செல்வதற்கும் லாவோஸ், காசா நேபாளம் ஆகிய நாடுகளில் பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளுக்குச் செல்வதற்கும் இவை பிரச்சனைகளாக இருக்கின்றன என்றும் பான் கி மூனின் செய்தி கூறுகிறது.








All the contents on this site are copyrighted ©.