2010-03-31 16:13:52

திருத்தந்தையின் புதன் பொது மறை போதகம் – அருட்பணியாளர்கள், அமைதி மற்றும் ஒப்புரவு செய்தியை அறிவிப்பவர்கள்


மார்ச் 31,2010 அன்பர்களே, இந்நாட்களில் உரோமையில் சிறார்கள், இளையோர், வயது வந்தோர், முதியோர் எனத் திருப்பயணிகளின் கூட்டம் நிரம்பி வழிகிறது. இவர்களில் பெரும்பாலானவர்கள், திருத்தந்தை நிகழ்த்தும் இந்தப் புனிதவாரத் திருவழிபாடுகளில் கலந்து கொள்வதற்கு வந்திருக்கிறார்கள் என்று சொல்லலாம். இப்புதன் காலை வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தை நிறைத்திருந்த ஏறத்தாழ முப்பதாயிரம் திருப்பயணிகளுக்கு இந்தப் புனித வாரத்தின் புனித வியாழன், புனித வெள்ளி, புனித சனி ஆகிய மூன்று முக்கிய தினங்களின் சிறப்புக்களை விளக்கினார் திருத்தந்தை.

RealAudioMP3 அன்புச் சகோதர சகோதரிகளே, திருச்சபையானது, இவ்வியாழனன்று முக்கிய மூன்று நாட்கள் திருவழிபாட்டுக் கொண்டாட்டங்களைத் தொடங்குகிறது. நம் ஆண்டவரின் திருப்பாடுகள், மரணம் மற்றும் அவரது உயிர்ப்புப் பேருண்மையை அமைதியான செபத்திலும் தியானத்திலும் செலவழிப்பதற்கென இந்நாட்களில் நேரம் ஒதுக்குகின்றது. இந்த நாட்களின் திருவழிபாடுகள், கிறிஸ்துவின் மீட்பளிக்கும் தியாகத்தையும், புதிய வாழ்வுக்கான அவரின் உறுதியையும் ஆழமாகத் தியானிக்க நம்மை அழைக்கின்றன. அருட்பணியாளர்கள் தங்களது குருத்துவத் திருநிலைப்பாட்டின் போது கொடுத்த வாக்குறுதிகளைப் புதுப்பிக்கும் திருஎண்ணெய் மந்திரிக்கப்படும் புனித வியாழன் திருப்பலி இந்த அருட்பணியாளர்கள் ஆண்டில் சிறப்பான முக்கியத்துவம் பெறுகின்றது. எல்லா இடங்களிலும் இருக்கின்ற அருட்பணியாளர்கள் நம்பிக்கை, ஒப்புரவு, அமைதி ஆகிய கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவிப்பவர்களாக, அவரோடு மிக நெருக்கமாக வாழ்வார்களாக என்று வேண்டுகோள்விடுத்து, ஆங்கில மொழியில் ஆற்றிய தனது மறைபோதகத்தை மேலும் தொடர்ந்தார் திருத்தந்தை.

RealAudioMP3 புனித வியாழன் மாலையில் நிகழ்த்தப்படும் ஆண்டவரின் இறுதி இரவு உணவு திருப்பலி, திருநற்கருணை மற்றும் குருத்துவத் திருவருட்சாதனங்கள் ஏற்படுத்தப்பட்டதை நினைவுபடுத்துகின்றன. கிறிஸ்துவின் மீட்பளிக்கும் மரணத்தின் பேருண்மைக்குள் நம்மை இட்டுச் செல்லும் புனித வெள்ளி திருவழிபாடு, ஆண்டவரின் இறுதி இரவு உணவுக்கும், கல்வாரித் தியாகத்திற்கும் இடையே இருக்கும் ஆழமான உறவைத் தியானிப்பதற்கு நம்மை அழைக்கிறது. புனித சனிக்கிழமையின் ஆழ்ந்த அமைதியைத் தொடர்ந்து, உயிர்ப்புத் திருவிழிப்பு திருவழிபாடு கிறிஸ்துவின் உயிர்ப்பையும் பாவம் மற்றும் மரணத்தின் மீதான அவரது வெற்றியையும் பறைசாற்றுகிறது. நம் ஆண்டவர் மரணத்திலிருந்து வாழ்வின் நிறைவுக்குக் கடந்து வந்த பாஸ்கா பெரும் நிகழ்வுகளைக் கொண்டாடுவதற்குத் தயாரித்து வரும் நமது இதயங்கள், இப்பொழுதே அவரின் உயிர்ப்பின் மகிழ்ச்சியால் நிரப்பப்படுவதாக

இவ்வாறு புதன் பொது மறைபோதகத்தை நிறைவு செய்த திருத்தந்தை 16ம் பெனடிக்ட், உனிவ் கருத்தரங்கில் கலந்து கொள்ளும் மாணவர் குழுக்கள் உட்பட அங்கு கூடியிருந்த அனைவர் மீதும் கடவுளின் மகிழ்ச்சியும் அமைதியும் நிறைந்த திருவருள் பொழியப்படுமாறு செபித்து தமது அப்போஸ்தலிக்க ஆசீரையும் வழங்கினார்.

RealAudioMP3







All the contents on this site are copyrighted ©.