2010-03-31 16:16:58

இலங்கையில் ஊடகத்துறை மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு ஆயர்கள் கண்டனம்


மார்ச் 31,2010 இலங்கையில் ஊடகத்துறை மீது நடத்தப்படும் தாக்குதல்கள் குறித்தத் தங்களது வன்மையான கண்டனத்தை வெளியிட்டுள்ளனர் அந்நாட்டு ஆயர்கள்.

Sirasa Media மீது நடத்தப்பட்டுள்ள கல்லெறித் தாக்குதல்கள் குறித்து அதிர்ச்சியடைந்துள்ளதாகத் தங்கள் அறிக்கையில் குறிப்பி்டடுள்ள இலங்கை ஆயர்கள், பொதுச்சொத்தை அழிக்கும் வன்செயல்கள், சட்டவிதிகளை மீறும் ஒழுங்கற்ற நடத்தையை வெளிப்படுத்துவதாக இருக்கின்றன என்று குறை கூறியுள்ளனர்.

இலங்கையில் வருகிற ஏப்ரல் எட்டாம் தேதி பொதுத் தேர்தல் இடம்பெறவுள்ள வேளை, இத்தகைய செயல்கள் இளைய தலைமுறைகளுக்குத் துர்மாதிரிகையாய் இருக்கும் என்றும் ஆயர்களின் அறிக்கை கூறுகிறது.

மனச்சான்றின் சுதந்திரம், அஹிம்சை, நீதி ஆகியவை காக்கப்பட்டால் மட்டுமே வருகின்ற தேர்தல் நியாயமானதாகவும் சுதந்திரமாகவும் நடைபெற முடியும் என்றும் ஆயர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Sirasa Media எதிர்க்கட்சியின் குரலாக இருப்பதாக ஊடகச் செய்தி ஒன்றில் கூறப்பட்டுள்ளது.

இலங்கை மக்களவையின் 225 இடங்களுக்கு 7,500க்கு மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.








All the contents on this site are copyrighted ©.