2010-03-31 16:22:21

இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி ஏப்ரல் 1 துவங்குகிறது


மார்ச் 31,2010 இந்தியா முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி இவ்வியாழனன்று துவங்க உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து டில்லியில் நிருபர்களிடம் பேசிய மத்திய உள்துறைச் செயலர் ஜி.கே.பிள்ளை, மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணி, இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் முதல் கட்டமாக, ஏப்ரல் முதல் ஜூலை மாதம் வரையிலான காலத்தில், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வீடுகளின் அடிப்படையில் பூர்வாங்க கணக்கெடுப்பு பணி துவங்குகிறது என்றார்.

அசாம், மேற்கு வங்கம், புதுடில்லி, மேகாலயா, கோவா ஆகிய மாநிலங்களில் இந்தப் பணி இவ்வியாழன் முதல் துவங்குகின்றது. பீகார் மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய இரண்டு மாநிலங்கள் மட்டுமே, இதற்கான தேதியை இன்னமும் அறிவிக்கவில்லை என்று அவர் தெரிவித்தார்.

இரண்டாவது கட்டமாக, அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் முதல் மக்களிடம், அவர்களின் செல்லிட தொலைபேசி பயன்பாடு, கணனி பயன்பாடு, இணையதள பயன்பாடு, தண்ணீர் மற்றும் வங்கி சேவைகளின் பயன்பாடு ஆகியவை குறித்த விரிவான தகவல்கள் சேகரிக்கப்பட உள்ளன என்றும் ஜி.கே.பிள்ளை தெரிவித்தார்.

இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு மூலம் சேகரிக்கப்படும் தகவல்கள், 12வது ஐந்தாண்டு திட்டத்திற்குச் சிறப்பாகத் திட்டமிட உதவும் என்ற நம்பிக்கை உள்ளது. மேலும், இதன் முதல் கட்ட தகவல், இவ்வாண்டு டிசம்பர் மாதம் தேசிய தனி அடையாள எண் ஆணையத்திற்கு அனுப்ப திட்டம் உள்ளது. இந்தப் பணியில் 25 இலட்சம் பேர் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என்றார் அவர்.

தனி அடையாள எண்ணுடன் வழங்கப்படவுள்ள பயோ மெட்ரிக் அடிப்படையிலான அடையாள அட்டை, பாமர மக்களுக்கு பல வழிகளில் உதவும். இந்த அடையாள அட்டை மூலம் தனியார் அல்லது அரசு சேவை பெற எளிதாகும் என்றும் ஜி.கே.பிள்ளை கூறினார்.

இது இந்தியா சுதந்திரம் பெற்ற பின், ஏழாவது முறையாக நடத்தப்படும் கணக்கெடுப்புப் பணியாகும். கடந்த 1872ம் ஆண்டு முதல் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை, தொடர்ந்து மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணி நடக்கிறது.








All the contents on this site are copyrighted ©.