2010-03-30 15:10:25

மாஸ்கோவில் நடந்த தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் குறித்தத் தங்கள் கவலையைத் தெரிவித்துள்ளனர் மாஸ்கோ கிறிஸ்தவ சபைத் தலைவர்கள்


மார்ச்30,2010 இரஷ்யத் தலைநகர் மாஸ்கோவின் சுரங்க இரயில் கட்டமைப்புக்குள் நடந்த இரண்டு தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் குறித்தத் தங்கள் வேதனையையும் கவலையையும் தெரிவித்துள்ளனர் மாஸ்கோ கத்தோலிக்க மற்றும் ஆர்த்தாடாக்ஸ் கிறிஸ்தவ சபைத் தலைவர்கள்.

இத்திங்கள் மாலை உள்ளூர் நேரம் மாலை 5 மணிக்கு இடம் பெற்ற இத்தாக்குதல்களில் குறைந்தது 38 பேர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 60க்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இந்தத் தாக்குதல்கள் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள மாஸ்கோ கத்தோலிக்கப் பேராயர் Paolo Pezzi மற்றும் ஆர்த்தாடாக்ஸ் பிதாப்பிதா Kirill, இந்த நேரத்தில் மக்கள் அமைதி காத்து, பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான அரசின் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுள்ளனர்.

அதேசமயம் இதில் இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பங்களுடனானத் தங்களின் ஒருமைப்பாட்டுணர்வையும் செபத்தையும் அத்தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்துக் கருத்து தெரிவித்த இரஷ்ய பாதுகாப்பு அதிகாரிகள், இவற்றை நடத்தியதாக அறியப்பட்டுள்ள இரண்டு பெண் தற்கொலை குண்டுதாரிகள் இரஷ்யாவின் வடக்கு காகஸஸ் (Caucasus) மாநிலத்தைச் சேர்ந்த ஆயுதக் குழுக்களுடன் தொடர்புடையவர்கள் என்று சந்தேகிக்கப்படுவதாகத் தெரிவித்தனர்.

Caucasusவிலுள்ள மலைப்பகுதியை முன்னிட்டு இரஷ்யாவுக்கும் Chechnya வுக்கும் இடையே ஏறத்தாழ இருபது வருடங்களாக இடம் பெறும் மோதல்களில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்ப்டடுள்ளனர் மற்றும் ஐந்து இலட்சம் செசன் மக்கள் புலம் பெயர்ந்துள்ளனர். செச்சன்யாவில் (Chechnya) முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர்.

உயிர்ச் சேதத்தின் அளவு அதிகமாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கூட்டம் நிரம்பி வழியும் நேரத்தில் இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கின்றன என்று சொல்லப்படுகிறது.








All the contents on this site are copyrighted ©.