2010-03-30 16:37:01

மார்ச், 31 தவக்காலச் சிந்தனை


RealAudioMP3
பேரரசன் சீசரைக் கொன்றவர்களில் ஒருவர் அவரது நெருங்கிய நண்பர் ப்ருட்டஸ். நமது முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அவரது மெய்காப்பாளர் ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். சதாம் உசேனின் மறைவிடம் அவருக்கு நெருங்கிய ஒருவரால் அமெரிக்க அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டதென்று சொல்லப்படுகிறது. வரலாற்றில் காட்டிக்கொடுக்கப்பட்ட நிகழ்வுகள் பல உள்ளன. இன்றைய நற்செய்தியில் இயேசுவைக் காட்டிக் கொடுக்க யூதாஸ் செய்த முயற்சி சொல்லப்பட்டுள்ளது.
வீட்டைச் சுற்றி தீ கொழுந்து விட்டு எரிகிறது. வீட்டுக்குள் குடும்பம் ஒன்று சிக்கிக்கொண்டது. அந்தக் குடும்பம் உண்மையிலேயே பாசமான, அன்பான குடும்பம் என்றால், ஒன்று அந்த ஆபத்திலிருந்து எல்லாரும் தப்பிக்க முயல்வர். அப்படி தப்பிக்க ஒரு வழியும் இல்லாத போது, அந்தக் குடும்பம் ஒரு சேர அந்த விபத்தில் இறக்கும்.
கொள்கைப் பிடிப்புடன் ஒன்று சேர்ந்து வரும் எந்த ஒரு குழுவுக்கும் இந்தத் தீயைப் போல எதிர்ப்புகள் வரும். எதிர்ப்பு என்ற தீ அவர்களைச் சுற்றி வளைத்து நெருக்கும் போது, அந்தக் குழுவில் அனைவரும் சேர்ந்து தப்பிக்கும் வழிகளைத் தேடுவர், அல்லது அந்த எதிர்ப்புத் தீயில் அனைவரும் பலியாவர். அப்படி ஒரு நம்பிக்கை அங்கு உருவாகியிருக்கும். இந்த நம்பிக்கையை அழிக்கும் ஒரு வழி... ஒருவரை மற்றொருவர் காட்டிக் கொடுப்பது.இயேசுவுக்கு ஏற்பட்ட உடல் வேதனையை விட இந்த வேதனை மிக ஆழமாக அவரைப் பாதித்திருக்கும் என்பதில் ஐயமில்லை. குழுவின் நலனைக் காட்டிலும், குடும்ப நலனைக் காட்டிலும் சுய நலன் மனதை ஆக்ரமிக்கும் போது, காட்டிக் கொடுக்கப்படும் முடிவுகள் எடுக்கப்படும். சுயநலத்தால் நாம் மற்றவர்களை அல்லது நாம் விரும்பித் தேர்ந்த கொள்கைகளைக் காட்டிக் கொடுத்திருக்கிறோமா? சிந்திப்போம், இந்த புனித வாரத்தில்.







All the contents on this site are copyrighted ©.