2010-03-29 14:15:15

நீதிக் குரல்களை அடக்க முடியுமா?


மார்ச்29,2010 அது 1980ம் வருடம். மார்ச் 24ம் நாள். சான் சால்வதோர் நகரக் கத்தோலிக்கப் பேராலயத்தில் பலிபீடத்தில் இரண்டு பக்கங்களிலும் மெழுகுதிரிகள் எரிந்து கொண்டிருந்தன. ஏழை மக்கள் புழு பூச்சிகளாய் நசுக்கப்படுவதைக் கண்டு கொதித்தெழுந்த குரல் ஒன்று திருப்பலியைத் தொடங்கியது. அந்தத் திருப்பலி மறையுரையில் ஆளும் அரசுக்கும் அடாவடி இராணுவத்திற்கும் வேண்டுகோள்களை வீரமுடன் முன்வைத்தது அந்தக் குரல் Voice archbp Romero

“அன்பார்ந்தவர்களே, இறைவார்த்தைகள் போதிக்கப்படும் இந்தப் புனித இடத்தில் நம் மக்களின் சமூக, அரசியல் மற்றும் பொருளாதார நிலை பற்றிப் பேசுகிறேன் என்று யாரும் புண்பட வேண்டாம். அரசியலுக்காக நற்செய்தியைப் பயன்படுத்துகிறேன் என்று பலர் அதிர்ச்சியடைவீர்கள், ஏன், குறைகூறவும் விரும்புவீர்கள் என்பதை அறிவேன். ஒவ்வொரு வாரமும் நம் நாட்டில் மக்களின் அழுகுரல்களைக் கேட்கிறேன். அவர்கள் எதிர்நோக்கும் கொடுமைகளிலிருந்து அடையும் வேதனைகளை அறிகிறேன். எவ்வளவு ஒழுக்கக்கேடான வன்முறைகள் நடக்கின்றன. துன்புறும் இம்மக்களைத் தேற்றவும் வன்முறைகளைக் கண்டிக்கவும், அவற்றை நடத்துவோரை மனமாற்றத்திற்குத் திரும்புமாறு அழைப்பு விடுக்கவும் இறைவா, எனக்குச் சரியான வார்த்தைகளைத் தாரும் என்று ஒவ்வொரு வாரமும் செபிக்கிறேன். எனது குரல் பாலைவனத்தில் ஒலிப்பதாக இருக்கலாம். ஆனால் திருச்சபை தனது பணியை நிறைவேற்ற முயற்சி எடுக்கிறது என்பதை அறிவேன். இன்று எல் சால்வதோர் நாடு தனது சொந்த விடுதலைப் பயணத்தில் வாழ்கின்றது. மக்களே, நாம் மிகவும் கொடுமை நிறைந்த வாரத்தில் வாழ்ந்திருக்கிறோம். இந்த ஆலயத்தில் நுழைந்த சமயம் சர்வதேச மனித உரிமைகள் கழகம் நம் நாட்டைப் பற்றி வெளியிட்ட அறிக்கை பற்றி எனது காதில் போடப்பட்டது. நான்கு நாட்களுக்குள் 83 அரசியல் கொலைகள் இடம் பெற்றுள்ளன. எனதன்புக் கிறிஸ்தவ மக்களே, நம் மக்களை உண்மையாகவே விடுவிப்பவர்கள் கிறிஸ்தவர்களிடமிருந்து, கடவுளின் மக்களிடமிருந்து உருவாக வேண்டும்”.

இப்படி மறையுரையாற்றிக் கொண்டிருந்த அந்தத் துணிச்சல் குரலுக்குச் சொந்தமானவர் பேராயர் ஆஸ்கார் ரொமெரோதான். மத்திய அமெரிக்காவில் குட்டிநாடாக இருக்கும் எல் சால்வதோரில் 1972 மற்றும் 1977ம் ஆண்டுகளில் நடைபெற்ற அரசுத்தலைவர்க்கான தேர்தல் ஊழல்களையடுத்து புரட்சி வெடித்தது. இது உள்நாட்டுப் போராக வடிவெடுத்தது. 1979ல் புதிய அரசு பதவியேற்ற போது இராணுவமும், உபஇராணுவப் படைகளும் பெருமளவான மனித உரிமை மீறல்களை நடத்தி வந்தன. புதிய அரசுக்கு அமெரிக்க ஐக்கிய நாடு, இராணுவ உதவியும் அளித்து வந்தது. இதையெல்லாம் கண்டித்துப் பேசிய, அந்நாட்டுத் தலைநகர் சான்சால்வதோர் பேராயர் ஆஸ்கார் ரொமெரோ, அப்போதைய அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்ட்டருக்கு 1980ம் ஆண்டு பிப்ரவரியில் கண்டனக் கடிதம் ஒன்று எழுதினார். அதில் அமெரிக்காவின் இவ்வுதவி, தங்களின் அடிப்படை மனித உரிமைகளுக்காக ஒருங்கிணைந்து போராடும் அப்பாவிமக்களை அடக்கி ஒடுக்குவதற்குப் பயன்படுத்தப்படும் என்று குறை கூறியிருந்தார். 1980ம் ஆண்டில் உள்நாட்டுப் போர் உச்ச கட்டத்தை எட்டியது. அவ்வாண்டு மார்ச் 14க்கும் 17ம் தேதிக்கும் இடைப்பட்ட நாட்களில் பல கிராமங்களில் இராணுவத் தாக்குதல்கள் பெருமளவாக நடத்தப்பட்டிருந்தன. ஏழைகள் மத்தியில் உழைத்து வந்த இயேசு சபை குரு Rutilio Grande என்பவர் உட்பட குழந்தைகள், பெரியவர்கள் எனப் பல ஏழை விவசாயிகள் கொல்லப்பட்டிருந்தனர். கிராமங்கள் சூறையாடப்பட்டு எரிக்கப்பட்டிருந்தன. நல்லது செய்வோர் மற்றும் ஒன்றும் அறியாத அப்பாவிகள் எதிர்நோக்கிய இந்த வன்கொடுமைகள் கண்டு நெஞ்சு பொறுக்காத பேராயர் ரொமெரோ, மார்ச் 24ம் தேதி இப்படியொரு திருப்பலி மறையுரையை நிகழ்த்தினார். அந்த மறையுரையின் இறுதியில் வன்முறைகளை நடத்துவோருக்கு, குறிப்பாக தேசிய பாதுகாப்பில் முக்கிய பொறுப்பிலிருந்த காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினருக்குச் சிறப்பான அழைப்பு ஒன்றை விடுப்பதாகக் கூறினார்.

“சகோதரர்களே, நீங்கள் நம் சொந்த மக்களிலிருந்து வந்தவர்கள். உங்களின் சொந்த சகோதர விவசாயிகளைக் கொல்லுகின்றீர்கள். எந்த ஒரு மனிதக் கொலையும், “கொலை செய்யாதே” என்ற கடவுளின் சட்டத்தை மீறுவதாகும். கடவுளின் சட்டத்திற்கு முரணான எந்த ஒரு கட்டளைக்கும் எந்த ஒரு படைவீரரும் கீழ்ப்படிய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அறநெறிக்குப் புறம்பான சட்டத்திற்கு யாரும் பணியக் கூடாது. நீங்கள் பாவமான கட்டளைக்குப் பணிவதைவிட, உங்கள் மனசாட்சிகளைப் பரிசோதித்து அவற்றுக்குப் பணிவதற்கான தக்க நேரம் வந்து விட்டது. கடவுளின் விதிமுறைகளை, அதாவது மனித மாண்பையும் மனிதனையும் காக்க வேண்டுமென்ற அவரின் சட்டத்தைப் பாதுகாக்கும் திருச்சபை, இத்தகைய வன்முறைகளைக் கண்டு மௌனமாக இருக்காது. இவ்வளவு இரத்தம் சிந்தி கொண்டுவரப்படும் சீர்திருத்தங்கள் மதிப்பற்றவை என்ற உண்மையை அரசு உணர வேண்டுமென்று விரும்புகிறோம். கடவுளின் பெயரால், ஒவ்வொரு நாளும் மிகவும் சப்தமாக விண்ணை நோக்கி அழுது புலம்பும் துன்புறும் மக்களின் பெயரால் உங்களைக் கெஞ்சிக் கேட்கிறேன், மன்றாடிக் கேட்கிறேன். கடவுளின் பெயரால் உங்களுக்குக் கட்டளையிடுகிறேன். இந்த அடக்குமுறையை நிறுத்துங்கள்.”

இவ்வாறு பேராயர் ரொமேரோ பலிபீடத்தில் முழங்கி முடிக்க அவரது உயிரும் துப்பாக்கிச் சூட்டில் அடங்கியது. அன்பர்களே, எல்சால்வதோர் அரசின் ஆதரவுடன் இயங்கிய மரணப்படைகள் என்ற அமைப்பினரின் துப்பாக்கிக் குண்டுகள் பேராயரின் உயிரைப் பறித்தன. 62 வயதான பேராயரின் அடக்கச் சடங்கு 1980, மார்ச் 30ம் தேதி நடைபெற்றது. இதில் 2,50,000த்துக்கு அதிகமானோர் கலந்து கொண்டனர். சால்வதோர் நாட்டு வரலாற்றில், ஏன் தென் அமெரிக்க வரலாற்றில் இவ்வளவு பெரிய அளவில் மக்கள் ஓர் அடக்கச் சடங்கில் கலந்து கொண்டது இதுவே முதன்முறை என்று சொல்லப்படுகிறது. இது நடந்து இச்செவ்வாயோடு முப்பது வருடங்கள் நிறைவாகி விட்டன. இந்த முப்பதாம் ஆண்டு நிறைவையொட்டிப் பேசிய அந்நாட்டு அரசுத்தலவைர் ஃபூனெஸ், திருச்சபையிடமும் பேராயரின் குடும்பத்தினரிடமும் மன்னிப்புக் கேட்டுள்ளார். பேராயர் ரொமெரோ சட்டத்துக்குப் புறம்பே சுட்டுக் கொல்லப்பட்டார் என்று வெளிப்படையாக அறிவித்துள்ளார்.

எல் சால்வதோர் நாட்டில் 12 ஆண்டுகள் அதாவது 1992ம் ஆண்டு வரை உள்நாட்டுப் போர் நடை பெற்றது. இதில் 80,000 ஆயிரத்துக்கு மேற்பட்ட அப்பாவி பொது மக்கள் கொல்லப்பட்டனர். பல்லாயிரக்கணக்கானோர் சித்ரவதை செய்யப்பட்டனர். சுமார் 1,29,000 பேர் புலம் பெயர்ந்தனர். அந்தச் சமயத்தில் மூன்று வருடங்களுக்குள் ஐம்பதுக்கும் மேற்பட்ட குருக்கள் தாக்கப்பட்டனர், அச்சுறுத்தப்பட்டனர் மற்றும் கொல்லப்பட்டனர். பலர் பல்வேறு சித்ரவதைகளை அனுபவித்து நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்டனர். உயர்மறைமாவட்ட வானொலி நிலையம், கத்தோலிக்க கல்வி நிறுவனங்கள் மற்றும் அருட்சகோதரிகளின் இல்லங்கள் தொடர்ந்து தாக்கப்பட்டன. 1989ம் ஆண்டு நவம்பர் 16ம் தேதி ஆறு சேசு சபைக் குருக்களும் அவர்கள் இல்லத்தில் சமையல் வேலை செய்த இருவரும் வலதுசாரி அரசுப் படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சேசு சபைக் குருக்கள், சால்வதோரில் புகழ்பெற்ற பல்கலைகழகத்தை நடத்திய அதிபர், உதவி அதிபர் உட்பட ஆறுபேர் ஆவார்கள். இவர்களை மறைசாட்சிகள் என்று அழைக்கிறார்கள். இவர்கள் அனைவரும் ஏழைகளின் உரிமைகளுக்காக உரக்கக் குரல் எழுப்பியவர்கள். அநீதியை எதிர்த்துப் போராடியவர்கள். தங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் என்று தெரிந்தும் தொடர்ந்து செயல்பட்டவர்கள். இவர்கள் கொல்லப்பட்டு பத்தாண்டுகள் கழித்து அந்நாட்டு இராணுவம் தனது செயலுக்காக மன்னிப்புக் கேட்கத் தயார் என்று அறிவித்தது.

இந்த சால்வதோர் நாட்டில் மட்டுமல்ல, இரண்டாம் உலகப் போரில் ஹிட்லரின் நாத்சி அடக்குமுறைக்கு 108 பேரும் ஸ்பானியக் கலவரத்தில் 498 பேரும் மறைசாட்சிகளாகி இருக்கிறார்கள். பாகிஸ்தானில் கிறிஸ்தவர்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரோடு எரிக்கப்படும் செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. துருக்கியில் பங்களாதேஷில், இந்தியாவில் எனப் பல நாடுகளில் கிறிஸ்தவர்கள் கொல்லப்படுகின்றனர், நசுக்கப்படுகின்றனர். உலகில் தற்சமயம் 10 கோடி கிறிஸ்தவர்கள் தங்கள் விசுவாசத்திற்காகத் துன்பங்களை எதிர் நோக்கி வருகின்றனர் என்று ஒரு புள்ளி விபரம் கூறுகிறது.

அன்பர்களே, கிறிஸ்தவர்கள் தொடங்கியுள்ள இப்புனித வாரம், இயேசுவின் திருப்பாடுகள், மரணம் மற்றும் உயிர்ப்பைச் சிறப்பாகத் தியானிக்க அழைக்கின்றது. இயேசு இவ்வுலகிற்குத் தீயை மூட்டவே வந்தேன் என்று சொன்னவர். அதிகாரவர்க்கத்தின் அநீதிகளைச் சாடியதாலும் ஏழை எளியோரின் சார்பாக நின்றதாலும் சிலுவை மரணம் அவருக்குப் பரிசாகக் கிடைத்தது. சான் சால்வதோர் மறைசாட்சி பேராயர் ரொமெரோ உட்பட அனைத்து மறைசாட்சிகளின் வீரத்துவமான வாழ்வுக்கு அடிப்படையாக இருப்பவர் இயேசு கிறிஸ்து. இந்தப் புரட்சி வீரரின் போதனைகளும் செயல்பாடுகளுமே அவர்களுக்கு உள்ளூக்கம் தந்தன. இந்தக் குருத்தோலை ஞாயிறு திருப்பலியில் திருத்தந்தை 16ம் பெனடிக்டும், “நமக்கு சக்தி இறைவனிடமிருந்தே கிடைக்கிறது. இயேசு கிறிஸ்துவின் மீதான விசுவாசம் ஒரு கண்டுபிடிப்பு அல்ல, அது உண்மையிலே நிகழ்ந்த நிகழ்வில் அடிப்படையைக் கொண்டது. இயேசுவின் பாதையைப் பின்செல்வதன் மூலம் மிகுந்த மகிழ்ச்சியோடும் உறுதியான உள்உறுதியோடும் நம் வாழ்வை நடத்த முடியும்” என்று கூறினார். Pope Voice

"அநீதிக்கெதிரான போராட்டமும் உண்மையைக் காக்க வேண்டுமென்ற விடாஉறுதியும் ஒன்றையொன்று பிரிக்க முடியாதவை. இவற்றில் ஒன்றைப் பிரித்து மற்றொன்றுக்காக யாராலும் உழைக்க முடியாது" என்பதே இன்றைய நிகழ்ச்சி நமக்குச் சொல்லித் தரும் பாடம். அநீதிகளை எதிர்த்து உண்மையைக் காக்கப் போராடுகின்றவர்கள் இறந்தும் வாழ்கிறார்கள். இவர்களால்தான் இலட்சியங்களுக்கு இறப்பே இல்லாமல் இருக்கின்றது. ஏற்றத்திற்கான மாற்றம் செய்யாதவன், புதியனதிற்கானப் புரட்சி செய்யாதவன் கனமான பாவம் செய்கிறான். ஏனெனில் வரலாற்றைச் சாகடிக்கிறான். அவன் வரலாற்றிக்கே சாவாகிறான் என்பதே எமது எண்ணம்.








All the contents on this site are copyrighted ©.