2010-03-27 15:41:14

ஞாயிறு சிந்தனை


RealAudioMP3 போன வருடம், இதே நாள்... சரியாக பத்து வருடங்களுக்கு முன்னால், இதே நாள்... என்றெல்லாம் ஆரம்பித்து வாழ்வில் நடந்த சம்பவங்களை அசை போடுகிறோம்.
அறுபது வருடங்களுக்கு முன்னால், இதே நாள், இதே கிழமை இதே நேரம் என்று வரலாற்று நிகழ்வுகளைப் பற்றி பேசும்போது, நாள், கிழமை, நேரம் இவைகளெல்லாம் பொருந்தி வருவதை நாம் சுட்டிக் காட்டும்போது நமது கூற்றுகளில் அழுத்தம் அதிகம் இருக்கும்.
Numerology, நாள், நட்சத்திரம் இவைகளில் பிடிப்பு உள்ளவர்களுக்கு இதுபோன்ற பேச்சுக்கள் இன்னும் ஆழமாக, அர்த்தமுள்ளதாகத் தெரியும். எனக்கு இவைகளில் ஈடுபாடு, நம்பிக்கை இல்லை.
இன்று நாம் கொண்டாடும் குருத்து ஞாயிறு பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தபோது, தற்செயலாக ஒரு வரலாற்றுப் பதிவைப் பார்த்தேன். அந்தத் தலைப்பு என் எண்ணங்களை ஆரம்பிப்பதற்கு உதவியது. அதை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். மற்றபடி நாள், நட்சத்திரம் பற்றி பேசுவதாக எண்ண வேண்டாம்.
தற்செயலாக நான் பார்த்த அந்த வரலாற்றுப் பதிவின் தலைப்பு: The Palm Sunday Tornado 1920 அதாவது, குருத்து ஞாயிறு சூறாவளி 1920. சரியாக 90 ஆண்டுகளுக்கு முன்னால் அமெரிக்காவின் Georgia, Indiana, Ohio பகுதிகளில் குருத்து ஞாயிறன்று சூறாவளிக் காற்று, மழை, புயல் இவைகளால் ஏறக்குறைய 400 பேர் இறந்தனர். 1200 க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இதில் இன்னொரு பொருத்தம் என்னவென்றால், 1920ஆம் ஆண்டு குருத்து ஞாயிறு வந்த தேதி - மார்ச் 28. இதேபோல், 1965 ஆம் ஆண்டும் குருத்து ஞாயிறன்று, ஆனால் வித்தியாசமான ஒரு தேதியில் (ஏப்ரல் 11), சூறாவளி வீசியது என்று சொல்லப்பட்டுள்ளது.
எண்கள், நாள், நட்சத்திரம் பற்றிய எண்ணங்களை ஒதுக்கிவிட்டு, நான் சொல்ல வந்த மையக் கருத்திற்கு வருவோம். மார்ச், ஏப்ரல் மாதங்களில் சூறாவளிகள் ஏற்படுவது அமெரிக்காவின் வானிலை அறிக்கைகளில் அடிக்கடி வரும் ஒரு செய்திதான். சூறாவளி வரும் மாதங்களில் தான் குருத்து ஞாயிறும் வருகிறது. குருத்து ஞாயிறு... சூறாவளி... இவை இரண்டையும் இணைத்து சிந்திப்பதற்குத்தான் இந்த வரலாற்றுப் பதிவுகளைப் பற்றி பேசினேன்.

முதல் நூற்றாண்டில், முதல் குருத்து ஞாயிறு நடந்த போதும் சூறாவளி ஒன்று எருசலேம் நகரைத் தாக்கியது. சூறாவளி என்ன செய்யும்? சுழற்றி அடிக்கும், மரங்களை, வீடுகளை வேரோடு சாய்க்கும், பொதுவில் எல்லாவற்றையும் தலைகீழாகப் புரட்டிப் போடும்.
இந்தக் கோணத்தில் பார்க்கும் போது, முதல் குருத்து ஞாயிறு நிகழ்வுகள் எல்லாவற்றையும் தலை கீழாக மாற்றின. வழக்கமாய், எருசலேமில் நடத்தப்படும் வெற்றி ஊர்வலங்கள் அரசு அதிகாரிகளால், அல்லது மதத் தலைவர்களால் ஏற்பாடு செய்யப்படும். குருத்து ஞாயிறன்று நடந்த இந்த ஊர்வலமோ மக்களால் எதேச்சையாக, மானசீகமாக ஏற்பாடு செய்யப்பட்டது. “ஏற்பாடு செய்யப்பட்டது” என்பதை விட “தானாகவே ஏற்பட்டது” என்று சொல்வதே மிகவும் பொருந்தும். திருவிழா நாட்களில் எருசலேமில் இப்படி தானாகவே ஏற்படும் கூட்டங்கள், கொண்டாட்டங்கள் மதத் தலைவர்களுக்கும், ரோமைய அரசுக்கும் பலவித பயங்களை உருவாக்கும். இயேசுவைச் சுற்றி எழுந்த இந்த ஊர்வலமும் அதிகார வர்க்கத்தை ஆட்டிப் படைத்திருக்க வேண்டும். அவர்களது உலகத்தைத் தலைகீழாக்கியிருக்க வேண்டும். இந்த நிகழ்வைக் கூறும் நற்செய்தி இதோ:
மத்தேயு நற்செய்தி 21: 6-11
சீடர்கள் போய் இயேசு தங்களுக்குப் பணித்த படியே செய்தார்கள். அவர்கள் கழுதையையும் குட்டியையும் ஓட்டிக் கொண்டு வந்து, அவற்றின் மேல் தங்கள் மேலுடைகளைப் போட்டு, இயேசுவை அமரச் செய்தார்கள். பெருந்திரளான மக்கள் தங்கள் மேல் உடைகளை வழியில் விரித்தார்கள். வேறு சிலர் மரங்களிலிருந்து கிளைகளை வெட்டி வழியில் பரப்பினர். அவருக்கு முன்னேயும் பின்னேயும் சென்ற கூட்டத்தினர், தாவீதின் மகனுக்கு ஓசன்னா! ஆண்டவர் பெயரால் வருகிறவர் போற்றப்பெறுக! உன்னதத்தில் ஓசன்னா!என்று சொல்லி ஆர்ப்பரித்தனர். அவர் எருசலேமுக்குள் சென்றபோது நகரம் முழுவதும் பரபரப்படைய, “இவர் யார்?” என்னும் கேள்வி எழுந்தது. அதற்குக் கூட்டத்தினர், “இவர் இறைவாக்கினர் இயேசு; கலிலேயாவிலுள்ள நாசரேத்தைச் சேர்ந்தவர்என்று பதிலளித்தனர். 
இயேசு தன் பணி வாழ்வை ஆரம்பித்ததிலிருந்து, யூத மதத் தலைவர்களுக்கு எல்லாமே தலைகீழாக மாறியது போல் இருந்தது. இந்தத் தலைகீழ் மாற்றங்களின் சிகரம் இந்த குருத்து ஞாயிறு. இதைத் தொடர்ந்து, இயேசு அந்த மத குருக்களின் அரணாக இருந்த எருசலேம் கோவிலில் நுழைந்து, அங்கிருந்த அமைப்பையும் தலை கீழாக்கினார். எனவே, இந்த குருத்து ஞாயிறு அதிகார அமைப்புகளைப் பல வழிகளிலும் புரட்டிப் போட்ட ஒரு சூறாவளிதானே!

இந்த குருத்து ஞாயிறு துவங்கி, உயிர்ப்பு ஞாயிறு வரை உள்ள இந்த எழுநாட்களையும் தாய் திருச்சபை புனித வாரம் என்று அழைக்கிறது. வருடத்தின் 52 வாரங்களில் இந்த வாரத்தை மட்டும் ஏன் புனித வாரம் என்று அழைக்க வேண்டும்? இயேசுவின் உலக வாழ்வின் இறுதி நாட்களை நாம் நினைவு கூறுகிறோமே. அதனால்... அந்த இறுதி நாட்களில் நடந்தவைகள் பலவற்றில் புனிதம் எதுவும் காணப்படவில்லையே! நம்பிக்கைக்குரிய நண்பர் காட்டிக் கொடுத்தார். மற்றொரு நண்பர் மறுதலித்தார். மற்ற நண்பர்கள் ஓடி ஒளிந்து கொண்டனர். மனசாட்சி விலை போனது. பொய்சாட்சிகள் சொல்லப்பட்டன. வழக்கு என்ற பெயரில் அரசியல் சதுரங்கம் விளையாடப்பட்டது. இயேசு என்ற இளைஞன் நல்லவர், குற்றமற்றவர் என்று தெரிந்தும் தவறாகத் தீர்ப்பு சொல்லப்பட்டது. இறுதியில் அந்த இளைஞனை அடித்து, நொறுக்கி ஒரு கந்தல் துணி போல் சிலுவையில் தொங்க விட்டனர்.
நான் இப்போது பட்டியலிட்டவைகளில் புனிதம் எங்காவது தெரிந்ததா? புனிதம் என்பதற்கே வேறொரு இலக்கணம் எழுத வேண்டியுள்ளதே. ஆம், வேறொரு இலக்கணம் தான் எழுதப்பட்டது. கடவுள் என்ற உண்மைக்கே மாற்று இலக்கணம் தந்தவர் இயேசு. கடவுள் துன்பப்படக் கூடியவர்தான். அதுவும் அன்புக்காக எந்த துன்பத்தையும் எவ்வளவு துன்பத்தையும் ஏற்பவரே நம் கடவுள் என்று கடவுளைப் பற்றி வித்தியாசமான ஓர் இலக்கணத்தை இயேசு அந்தச் சிலுவையில் சொன்னாரே, அதேபோல் இந்த வாரம் இயேசுவின் வாழ்வில் நடந்த எல்லா நிகழ்வுகளும் புனிதத்தை இந்த பூமிக்குக் கொண்டு வந்த கால்வாய்கள் என்று நம்மை உணரவைத்தார் இயேசு.
இயேசு என்ற சூறாவளி எப்படி அதிகார வர்க்கத்தைப் புரட்டிப் போட்டதோ, அதேபோல் புனிதம், கடவுள் என்ற இலக்கணங்களையும் புரட்டிப் போட்டது. வேறு பல தலைகீழ் மாற்றங்களையும் இந்த நாளில், இந்த வாரத்தில் நாம் கற்றுக் கொள்ள முடியும். கற்றுக்கொள்ள முயல்வோம்.

போட்டிகளில், போரில் வெற்றி பெற்று வரும் வீரர்களுக்கு குருத்து வழங்குவது ரோமையர்களின் பழக்கம். யூதர்கள் மத்தியிலோ குருத்து சமாதானத்தை, நிறைவான வளத்தைக் குறிக்கும் ஒரு அடையாளம். வெற்றி, அமைதி, நிறைவு எல்லாவற்றையும் குறிக்கும் ஓர் உருவமாக இயேசு எருசலேமில் நுழைந்தார்.
வரலாற்றில் எத்தனையோ மன்னர்கள், வீரர்கள் வெற்றி பெற்றுள்ளனர். அவர்கள் வெற்றி பெற்றது ஒரு போட்டியின் வழியாக, போரின் வழியாக. போட்டியில் ஒருவர் வெற்றி பெற்றால், மற்றவர்கள் தோற்க வேண்டும். பிறரது தோல்வியில் தான் இந்த வெற்றிக்கு அர்த்தமே இருக்கும். போரில் வெற்றி என்றால், பல உயிர்கள் இறக்க வேண்டும்.
போட்டியின்றி, போரின்றி அனைவருக்கும் வெற்றியைப் பெற்றுத் தரும் மன்னன், வீரன் இயேசு. போரில் வெற்றி பெற்ற மன்னர்கள் வரலாற்றில் புகழோடு வாழ்ந்து மறைந்துள்ளனர். ஆனால் இந்த ஒரு இளைஞனோ வாழ்ந்தார். மறையவில்லை. இன்னும் வாழ்கிறார். இந்தக் கருத்துக்களை நான் சொல்லவில்லை, ஒரு பேரரசர் சொல்லியிருக்கிறார். ஆம் அன்பர்களே, வரலாற்றில் புகழுடன் வாழ்ந்து மறைந்த பேரரசன் நெப்போலியன் போனபார்ட் இயேசுவைப் பற்றி சொன்ன கூற்று சிந்திக்க வேண்டியதொன்று:

"மனிதர்களை எனக்குத் தெரியும். இயேசு சாதாரண மனிதர் அல்ல. அலெக்சாண்டர், சீசர், சார்ல்மேய்ன் (Charlesmagne), நான்... இப்படி பலரும் பேரரசுகளை உருவாக்கியிருக்கிறோம். இவைகளை உருவாக்க நாங்கள் படைபலத்தை நம்பினோம். ஆனால், இயேசு அன்பின் பலத்தை நம்பி தன் அரசை உருவாக்கினார். இத்தனை நூற்றாண்டுகள் ஆன பிறகும், அவருக்காக உயிர் துறக்க கோடிக்கணக்கானோர் இன்னும் இருக்கின்றனர்." 
ஒரு பேரரசர் மற்றொரு பேரரசரைப் பற்றி இவ்வளவு உயர்வாகப் பேசியுள்ளது வியப்புக்குரியது தான்.
வரலாற்றில் கத்தியோடு, இரத்தத்தோடு உருவான பல ஆயிரம் அரசுகள் இன்று நமது வலாற்று ஏடுகளில் மட்டுமே உள்ளன. அந்த அரசர்களுக்கும் அதே கதிதான். ஆனால், கத்தியின்றி, தன் இரத்தத்தால் இயேசு என்ற மன்னன் உருவாக்கிய அந்த அரசு மக்கள் மனங்களில் இன்றும் வாழ்கிறது.
அந்த அரசைப் பறைசாற்ற திருச்சபை நமக்கு அளித்துள்ள ஒரு வாய்ப்பு இந்த குருத்து ஞாயிறு. புனிதம், வெற்றி, அரசு என்பனவற்றிற்கு புது இலக்கணம் வகுத்து, இறுதியில் கடவுளுக்கும் புது இலக்கணம் சொன்ன இயேசு, இந்த தவக்காலத்தின் இறுதி வாரத்தில் தொடர்ந்து புது பாடங்களை நமக்குச் சொல்லித்தர வேண்டுமென மன்றாடுவோம்.

இறுதியாக ஒரு சிந்தனை: இயேசு என்ற இந்த எளிய மன்னன் எருசலேமில் நுழைவதை குறித்து இறைவாக்குரைத்த செக்கரியாவின் வார்த்தைகளைக் கேட்போம்.

செக்கரியா 9: 9-10
மகளே சீயோன்! மகிழ்ந்து களிகூரு: மகளே எருசலேம்! ஆர்ப்பரி. இதோ! உன் அரசர் உன்னிடம் வருகிறார். அவர் நீதியுள்ளவர்: வெற்றிவேந்தர்: எளிமையுள்ளவர்: கழுதையின்மேல், கழுதைக் குட்டியாகிய மறியின்மேல் ஏறி வருகிறவர். அவர் எப்ராயிமில் தேர்ப்படை இல்லாமற் போகச்செய்வார்; எருசலேமில் குதிரைப்படையை அறவே ஒழித்து விடுவார்; போர்க் கருவியான வில்லும் ஒடிந்து போகும். வேற்றினத்தார்க்கு அமைதியை அறிவிப்பார்: அவரது ஆட்சி ஒரு கடல்முதல் மறு கடல் வரை, பேராறுமுதல் நிலவுலகின் எல்லைகள்வரை செல்லும்.

போர்க்கருவிகள் எல்லாம் அழிக்கப்பட்டு, போரே இல்லாமல் போகும் புத்தம் புது பூமி ஒன்று உருவாக நாம் இப்போது கனவுகள் கண்டு வருகிறோம். இதே கனவுகள் அன்றும் காணப்பட்டன. அந்தக் கனவை நனவாக்க இறைமகன் இயேசு எருசலேமில் நுழைந்தார். இன்று மீண்டும் அவர் அமைதியின் அரசராய் நாம் வாழும் இல்லங்களில், ஊர்களில், நகரங்களில், இந்த உலகத்தில் நுழைய வேண்டுவோம்.







All the contents on this site are copyrighted ©.