2010-03-25 15:16:27

நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டுள்ள சிலி மக்களுக்கென மரியாவின் திரு உருவத்தை திருத்தந்தை அர்ச்சித்தார்


மார்ச்25,2010 அன்னை மரியா நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டுள்ள உங்களுடன் பயணம் செய்வாராக என்ற நம்பிக்கைச் செய்தியுடன் திருத்தந்தை 16ஆம் பெனெடிக்ட் இப்புதன் பொது மறை போதகத்திற்கு பின் சிலி மக்களுக்கென மரியாவின் திரு உருவத்தை அர்ச்சித்தார்.
பிப்ரவரி 27 நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட சிலி நாட்டு மக்கள் தங்களது விடுதலையின் இரண்டாம் நூற்றாண்டைக் கொண்டாடும் இவ்வேளையில், அவர்களுக்கென மரியாவின் திரு உருவத்தை சிறப்பாக அர்ச்சித்து வழங்குவதாக திருத்தந்தை கூறினார்.
சிலி ஆயர் பேரவைத் தலைவர் கர்தினால் Francisco Javier Errazuriz Ossaவின் தலைமையில் இப்புதனன்று வத்திக்கான் வந்திருந்த ஆயிரக்கணக்கான சிலி நாட்டு திருப்பயணிகளை வாழ்த்திய திருத்தந்தை, அந்நாட்டில் ஏறத்தாழ 9000 பேர் இணைந்து கைப்பட எழுதிய விவிலியத்தின் பிரதிகளையும் அர்ச்சித்தார்.
ஏப்ரல் மாத துவக்கத்தில் திருப்பீடச் செயலர் கர்தினால் Tarcisio Bertone திருத்தந்தையால் அர்ச்சிக்கப்பட்ட மரியாவின் திரு உருவத்தை சிலி நாட்டுக்கு எடுத்துச் சென்று அங்கு நிகழும் ஒரு கூட்டுத் திருப்பலியில் ஆயர்களிடம் ஒப்படைப்பார் என்று செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
திருத்தந்தையால் அர்ச்சிக்கப்பட்ட மரியாவின் திரு உருவமும், விவிலியப் பிரதிகளும் அந்நாட்டில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆரம்பித்து நாட்டின் பல இடங்களுக்கும் எடுத்துச் செல்லப்படும் என்று அச்செய்திக் குறிப்பு மேலும் கூறுகிறது.மேலும் இவ்வெள்ளியன்று ரோமையில் உள்ள புனித Mary Major பசிலிக்காவில் கர்தினால் அவையின் தலைவர் கர்தினால் Angelo Sodano தலைமையில் சிலி மக்களுக்கென சிறப்புத் திருப்பலி ஒன்று நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.







All the contents on this site are copyrighted ©.