2010-03-25 15:17:17

ஒரிஸ்ஸாவில் பாதிக்கப்பட்ட கிறிஸ்துவர்களில் 90 விழுக்காடு மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளனர் - இந்தியத் துறவற அவை அங்கத்தினர்கள்


மார்ச்25,2010 ஒரிஸ்ஸாவில் 2008ஆம் ஆண்டு கிறிஸ்துவர்களுக்கு எதிராக எழுந்த வன்முறைகளில் பாதிக்கப்பட்டவர்களில் 90 விழுக்காடு மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளனர் என்று அப்பகுதியில் பயணம் மேற்கொண்ட இந்தியத் துறவற அவை அங்கத்தினர்கள் கூறினர்.
கலவரம் நிகழ்ந்த பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக பயணம் மேற்கொண்ட இக்குழு, அங்குள்ள மக்களிடம் மீண்டும் நம்பிக்கை திரும்பியிருப்பதை உறுதி செய்தனர்.
அரசும், திருச்சபை சார்ந்த நிறுவனங்களும் இணைந்து மக்கள் குடியிருப்புகளையும் அவர்கள் வாழ்வுக்கான ஆதாரங்களையும் கட்டியெழுப்பும் முயற்சி நல்ல திட்டங்களுடன் செயல்படுகிறது என்று இந்தியத் துறவற அவையின் செயலர் அருட்சகோதரர் Mani Mekkunnel கூறினார்.
மூன்று கிராமங்களில் உள்ள இந்துக்கள் தங்கள் பகுதியில் கிறிஸ்தவர்கள் மீண்டும் குடியேறுவதைத் தடுத்து வருவதால், அந்தக் கிராமத்து கிறிஸ்தவர்களை வேறொரு இடத்தில் குடியமர்த்தும் முயற்சிகள் நடந்து வருவதாகவும் அருட்சகோதரர் Mekkunnel கூறினார்.இந்த வன்முறைகளில் பாதிக்கப்பட்ட குழந்தைகளை மீண்டும் பள்ளிகளில் சேர்க்கும் முயற்சியிலும், வேலைகளை இழந்த இளையோருக்கு தொழில் கல்வி அளிக்கும் முயற்சியிலும் இந்தியத் துறவற அவை ஈடுபட்டிருப்பதாக செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.