2010-03-25 15:15:58

உலக மறைபரப்பு ஞாயிறுக்கென திருத்தந்தை வெளியிட்டுள்ள செய்தி


மார்ச்25,2010 அனைத்துலக திருச்சபையின் ஐக்கியத்தைக் கட்டியெழுப்புவதே முக்கியப் பணி என்ற அழைப்புடன் வரும் அக்டோபர் மாதம் சிறப்பிக்கப்படவுள்ள உலக மறைபரப்பு ஞாயிறுக்கென தன் செய்தியை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை 16ம் பெனெடிக்ட்.
எருசலேம் திருவிழாவுக்கு வந்த கிரேக்கர் சிலர் சீடர் பிலிப்புவிடம் வந்து இயேசுவைக் காண விரும்புவதாகக் கூறியதைத் தன் செய்தியில் எடுத்துரைத்துள்ள பாப்பிறை, இந்த எக்கமானது நம் உள்ளங்களிலும் எதிரொலித்து, நற்செய்தியால் உருவாக்கப்பட்ட சமூகங்களின் உண்மையான உறவுகளுடன் கூடிய வாழ்வைப் புதுப்பிப்பதற்கு ஊக்கமளிப்பவர்களாக மாற நமக்கு அழைப்பு விடுக்கிறது எனக் கூறியுள்ளார்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய இந்த கிரேக்க திருப்பயணிகளைப் போல், இக்கால மனிதர்களும் இயேசுவைப் பற்றிப் பேசமட்டுமல்ல, அவரைக் காணவும் ஆவல் கொண்டுள்ளார்கள் என்பது ஒவ்வொரு கிறிஸ்தவரும் தன் திருமுழுக்கின்போது பெற்ற நற்செய்தி அறிவிப்புக்கான அழைப்பை நினைவுப் படுத்த நிற்கின்றது என தன் செய்தியில் கூறியுள்ளார் திருத்தந்தை.நற்செய்தி அறிவிப்புப் பணியில் ஒருவர் தன்னை ஈடுபடுத்த, முதலில் ஆழமான மனமாற்றம் தேவைப்படுகின்றது என்ற அழைப்பையும் முன் வைத்துள்ள பாப்பிறை, நற்செய்தியானது விடுதலை மற்றும் அமைதியின் ஆதாரமாகவும் உள்ளது என்பதையும் மறைபரப்பு ஞாயிறுக்கான தன் செய்தியில் சுட்டிக் காட்டியுள்ளார்.







All the contents on this site are copyrighted ©.