2010-03-24 15:05:50

மார்ச்24-சர்வதேச காச நோய் தினம்


மார்ச்24,2010 தற்போது உலகில் காச நோயால் இறப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வந்தாலும் இந்நோய் தடுப்புக்கான முயற்சிகள் குறைந்துவிடக் கூடாது என்று ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் கூறியுள்ளார்.
மார்ச் 24 இப்புதனன்று கடைபிடிக்கப்பட்ட சர்வதேச காச நோய் தினத்திற்கென செய்தி வெளியிட்டுள்ள மூன், அரசுகளும் அரசு சாரா அமைப்புகளும் இந்நோயை ஒழிப்பதற்கு எடுத்து வரும் நடவடிக்கைகளால் 1995ம் ஆண்டிலிருந்து 3 இலட்சத்து 60 ஆயிரம் பேர் குணப்படுத்தப்பட்டுள்ளார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஏறத்தாழ 60 இலட்சம் பேரின் வாழ்வு காப்பாற்றப்பட்டுள்ளது என்றும் கூறும் அவரின் செய்தி, டிபி, எலும்புறுக்கி என்றும் சொல்லப்படும் இந்தக் காச நோயால் உலகில் யாரும் இறக்கக்கூடாது என்று கேட்டுள்ளார். கடந்த ஆண்டில் காச நோயால் 18 இலட்சம் பேர் இறந்துள்ளனர்.
இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்கா, நைஜீரியா மற்றும் இந்தோனேசியா உள்ளிட்ட 22 நாடுகளில் 'இந்நோயால்' புதிதாக பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. உலக சுகாதார நிறுவனம் 'டிபி தடுக்கும் திட்டம் 2006-2015' என்பதை உலகம் முழுவதும் செயல்படுத்திவருகிறது. பெர்லினில் 1882ம் ஆண்டு மார்ச் 24ல் டாக்டர் ராபர்ட் கோச் என்பவர், 'டிபி' க்கு காரணமான நுண்கிருமிகளை கண்டுபிடித்து அறிவித்தார். அச்சமயத்தில் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் 7 பேரில் ஒருவர் 'டிபி'யால் உயிரிழந்து வந்தனர். இவரது கண்டுபிடிப்பு தினத்தை உலக சுகாதார நிறுவனம் 1996ம் ஆண்டில் உலக காச நோய் தினமாக அறிவித்தது.







All the contents on this site are copyrighted ©.