2010-03-23 14:58:00

புனித பூமியில் அமைதிக்கான அர்ப்பணம் குறைந்துக் காணப்படுவதாக கவலையை வெளியிட்டுள்ளார் பேராயர்.


மார்ச் 23. புனித பூமியில் வாழும் கத்தோலிக்கர்கள் தங்களின் மன்னிக்கும் மற்றும் ஒப்புரவு முயற்சிகளுக்காக பிறரால் கேலிச் செய்யப்பட்டாலும் அவர்கள் அதில் உறுதியாக நின்று தொடர்வதாகத் தெரிவித்தார் யெருசலேமின் லத்தீன் ரீதி பிதாப்பிதா ஃபாவுத் துவால்.

ஒப்புரவின் உறுதியான படிகளை கைக்கொள்ள அமைதி மற்றும் நம்பிக்கையின் விதைகளை விதைக்க வேண்டிய நிலை இருக்க, சிலரோ பொறுப்பற்ற மனநிலைகளுடன் எதிர்மறைக் கொள்கைகளைக் கைக்கொண்டுச் செயல்படுவதாகவும் குற்றம் சாட்டினார் பேராயர்.

மன்னிப்பை உள்ளடக்கிய தலத்திருச்சபையின் மேய்ப்புப்பணித் திட்டம் சிலரால் போராட்டத்திற்கான அர்ப்பணத்தை உள்ளடக்காத திட்டமாக நோக்கப்படுவதாகவும் கவலையை வெளியிட்டார் அவர்.

பகைமையை ஊக்குவிக்கும் அண்மை கால புனித பூமி வன்முறைகள் குறித்தும் கவலையை வெளியிட்ட பேராயர் துவால், யூதம் இஸ்லாம் என்ற இரு மதங்களிடையே, இரு கலாச்சாரங்களிடையே, இரு அரசியல் கூறுகளிடையே, கிறிஸ்தவர்கள் ஒரு பாலமாகச் செயல்படவேண்டும் என்பதை தலத்திருச்சபை வலியுறுத்தி வருவதையும் சுட்டிக்காட்டினார்.

பாலஸ்தீனப் பகுதியின் கிறிஸ்தவர்கள் வேலைவாய்ப்பின்மையால் துன்பங்களை அனுபவிப்பதாகவும் இதனால் அவர்கள் வேறு இடங்களுக்கு குடிபெயர வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் கவலையை வெளியிட்டார் அவர்.








All the contents on this site are copyrighted ©.