2010-03-22 12:55:04

வாரம் ஓர் அலசல் – தண்ணீரா? கண்ணீரா?


மார்ச்22,2010 எனது தாத்தா ஆற்றில் நீரைப் பார்த்தார்.

எனது தந்தை கிணற்றில் நீரைப் பார்த்தார்.

நான் குழாயில் நீரைப் பார்த்தேன்.

என் பிள்ளைகள் பாட்டில்களில்-பாக்கெட்டுகளில் நீரைப் பார்க்கின்றனர்.

என் பேரப் பிள்ளைகள்....?

இப்படி ஒரு நாடோடி தெருவில் பாடிக் கொண்டே சென்றார். அட! அர்த்தமுள்ள பாட்டாக இருக்கிறதே என்று நினைத்து அவரை இடைமறித்து, ஐயா, பெரியவரே என்ன புலம்பல் இது? பல இடங்களில் வெள்ளங்களில் ஆயிரக்கணக்கில் மக்கள் இறந்து கொண்டிருக்கின்றனர், அப்படியிருக்க ஏன் இந்தப் புலம்பல் என்று கேட்டோம். இயற்கை சீற்றம் கொண்டு பூமிஅதிர்வுகளும் வெள்ளப் பெருக்குகளும் ஏற்படுவது உண்மைதான். அதேசமயம் நான் பாடியதும் உண்மை என்று நமது வாயை அடைத்தார். “உலகில் அடுத்து போர் என்று ஒன்று வந்தால் அது நீருக்கானப் போராகத்தான் இருக்கும். 1990ம் ஆண்டிலேயே ஜோர்டன் மன்னர் உசேன், இஸ்ரேலுடன் போர் மூண்டால் அது தண்ணீருக்காகத்தான்” என்று சொன்னார். இந்நாளைய ஊடகச் செய்தியையும் கேளுங்கள் என்றார்.

இன்று உலகில் 100 கோடிக்கு மேற்பட்ட மக்களுக்குச் சுத்தமான நீர் வசதி கிடையாது. உலகில் இடம் பெறும் இறப்புகளுக்கு நீர் தொடர்புடைய நோய்க் கிருமிகளே முதன்மைக் காரணமாக இருக்கின்றன. ஆண்டுதோறும் வயிற்றுப்போக்கு நோய்களால் ஏறத்தாழ 18 இலட்சம் பேர் இறக்கின்றனர். இவர்களில் 90 விழுக்காட்டினர் ஐந்து வயதுக்குட்பட்ட சிறார். இவர்கள் பெரும்பாலும் வளரும் நாடுகளைச் சேர்ந்தவர்கள். இந்த வயிற்றுப்போக்கு நோய்களில் 88 விழுக்காட்டுக்கு பாதுகாப்பற்ற நீர் விநியோகமே காரணம். ஒவ்வோர் ஆண்டும் சுமார் 13 இலட்சம் பேர் மலேரியாவினால் இறக்கின்றனர். இவர்களில் 90 விழுக்காட்டினர் ஐந்து வயதுக்குட்பட்ட சிறார். எனினும் நீர் வளங்கள் நன்றாக நிர்வகிக்கப்பட்டால் மலேரியா மற்றும் ஒட்டுண்ணி புழுக்கள் பரவுவதைத் தடுக்கலாம். ஆறு பேருக்கு ஒருவர் வீதம் அசுத்தமற்ற குடிநீரும், ஐந்து பேருக்கு இருவர் வீதம் சுகாதார வசதியும், பத்து பேருக்கு நால்வர் வீதம் கழிப்பறை வசதியும் இல்லாமல் இருக்கின்றனர். இந்தச் சத்தமில்லா மனிதாபிமான நெருக்கடியால் தினமும் சுமார் 3,900 சிறார் இறக்கின்றனர். 2025ம் ஆண்டுக்குள் உலக மக்களுள் ஏறக்குறைய மூன்றில் இரண்டு பகுதியினர் நீர் தொடர்புடைய நெருக்கடிகளில் வாழ்வர். சுமார் நூறு கோடிப் பேர் கடும் நீர்ப் பற்றாக்குறையை எதிர்நோக்குவர். இந்தப் புள்ளி விபரங்கள் இப்போதைக்குப் போதும். மீண்டும் வருவேன்

என்று சொன்ன அந்த நாடோடி, நம்மைத் திரும்பி பார்த்து,

மார்ச் 22 இத்திங்கள் உலக நீர் தினம், அதை நினைத்துத்தான் தெருத் தெருவாகப் பாடிக் கொண்டு செல்கிறேன்

என்று சொல்லிவிட்டு தனது விழிப்புணர்வு பணியைத் தொடர்ந்தார்.

அன்பர்களே, ''நீர் இன்றி இவ்வுலகு அமையாது'' என்றார் வள்ளுவர். ஆனால் நீர் குறித்த பிரச்சனை, நாடுகளில் பெருங்கவலையை ஏற்படுத்தியிருக்கின்றது. பல்வேறு நாடுகள் மற்றும் மாநிலங்கள், தங்களின் எல்லைப் பகுதிகளில் இருக்கும் நீரை எவ்வாறு பயனுள்ள விதத்தில் பங்கிடுவது, அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது இக்காலத்தின் கட்டாயமாக அமைகின்றது. எனவே ஐக்கிய நாடுகள் நிறுவனம், 1992ம் ஆண்டு, பிரேசில் நாட்டின் Rio de Janeiro வில் நடத்திய “சுற்றுச்சூழலும் வளர்ச்சியும்” என்ற உலக மாநாட்டில் “உலக நீர் தினம்” கடைபிடிக்கப்பட வேண்டும் எனத் தீர்மானித்தது. 1993ம் ஆண்டு ஐ.நா.வின் பொது அவை மார்ச் 22ம் தேதியை “உலக நீர் தினமாக” அறிவித்தது. அன்றுமுதல் இவ்வுலக தினம் ஆண்டுதோறும் மார்ச் 22ம் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. “நலமான உலகுக்கு சுத்தநீர்” என்ற தலைப்பில் இவ்வாண்டில் இத்தினம் அனுசரிக்கப்படுகின்றது. “வாழ்வுக்கான நீர் 2005-2015: சர்வதேச பத்தாண்டுகள் திட்டம்” என்ற தலைப்பில் ஐ.நா.வும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இதன் ஒரு கட்டமாக, இத்திங்களன்று நியுயார்க்கிலுள்ள ஐ.நா.தலைமையகத்தில், “நீரும், மில்லேனேய வளர்ச்சித்திட்ட இலக்குகளும்”; “நீரும், உலக அமைதியும், பாதுகாப்பும்”; “நீரும், வெப்பநிலை மாற்றமும் இயற்கைப் பேரிடர்களும்”; ஆகிய தலைப்புகளில் ஒருநாள் கருத்தரங்கு நடைபெற்றது.

உலகின் 263 ஏரிகள் மற்றும் நாடுகடந்து ஓடும் ஆறுகள் 145 நாடுகளை இணைக்கின்றன. இது உலகின் மொத்த நிலபரப்பில் ஏறத்தாழ பாதியாகும். உலகிலுள்ள மக்களில் சுமார் 40 விழுக்காட்டினர் இருநாடுகளால் பங்கு போட்டுக்கொள்ளப்படும் ஆற்றுப் பள்ளத்தாக்குகளில் வாழ்கின்றனர். இவ்வாறு பங்கு போட்டுக்கொள்ளப்படும் ஆறு அல்லது ஏரிப் பள்ளத்தாக்குகள் ஆப்ரிக்காவில் மட்டும் 57 உள்ளன. மத்திய கிழக்குப் பகுதியில் இந்நிலை அதிகம். அப்பகுதியில் நைல், யோர்தான், யூப்ரடீஸ்-டைகிரிஸ் ஆகிய முக்கிய நதிகள் பாய்கின்றன. 6700 கிலோ மீட்டர் நீளம் கொண்ட நைல்நதி ஆப்ரிக்கக் கண்டத்தின் பத்தில் ஒரு பகுதிக்கு நீரை வழங்குகிறது. எனவே நீரை சமாதான முறையில் பிரித்துக் கொள்வது உலகின் எதிர்கால அமைதிக்கு மிக முக்கியமானது. உலகில் கடந்த அறுபது ஆண்டுகளில் 200க்கும் அதிகமான நதிப்பங்கீடு குறித்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியிருக்கின்றன என்று சொல்லப்படுகிறது. 1977ம் ஆண்டின் “கங்கைநதி நீர்” பற்றிய இந்தியா-வங்க தேச ஒப்பந்தம், 43 வருடப் பழமை கொண்ட “சிந்துநதி நீர்” குறித்த இந்தியா-பாகிஸ்தான் ஒப்பந்தம் போன்றவைகளை நாம் இங்கு குறிப்பிட்டே ஆக வேண்டும். ஆனாலும் இந்திய மாநிலங்கள், குறிப்பாக நீருக்காக அண்டை மாநிலங்களைச் சார்ந்து நிற்கும் தமிழகத்தின் இன்றைய நிலை நாடறிந்த உண்மை. அன்பர்களே, நாம் இவ்வாறு விவரித்துக்கொண்டிருந்த போது மீண்டும் அந்தப் பக்கம் வந்த நாடோடி சொன்னது என்னவெனில்,

இந்த வாரப் பத்திரிகை செய்திகளைச் சொல்கிறேன். முல்லை பெரியாறு அணைக்குச் செல்லும் நீர் ஆதாரங்களில் ஒன்றான செண்பகவல்லி அணைக்கட்டு, மலைப்பகுதியில் ஐந்தாயிரம் அடி உயரத்தில் இருக்கிறது. 1733ம் ஆண்டின் ஒப்பந்தப்படி, இங்கிருந்து ஒரு பகுதிநீர் முல்லை பெரியாறுக்கும், மற்றொரு பகுதி தமிழக எல்லைக்கும் கொண்டுசெல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. சில வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட பெருவெள்ளத்தில் தமிழகத்துக்கு தண்ணீர் வரக்கூடிய கால்வாய் சேதமடைந்து விட்டது. எனவே அங்கிருந்து தமிழகத்துக்குத் தண்ணீர் வரக்கூடிய நீர் முழுவதும் கேரளப் பகுதிக்கே போய்க் கொண்டிருப்பதாக ஓர் ஆய்வுக் குழு சொல்லியிருக்கிறது. மேலும், பெரியாறு அணை நீரை நம்பி, கம்பம் பள்ளத்தாக்கில் 14 ஆயிரத்து 707 ஏக்கர் நிலப்பரப்பில் இரு போக நெல் சாகுபடி செய்யப்படுகிறது. முதல் போக சாகுபடியில் தாமதம் ஏற்பட்டு இரண்டாம் போக நடவுப் பணியும் தாமதம் ஏற்பட்டதால் நெற்பயிர்கள் நீர் பற்றாக்குறையால் கருகுகின்றன.

உலகிலுள்ள நூறு விழுக்காட்டு நீரில் 97.2 விழுக்காடு கடல் நீராகும். மீதமுள்ள 2.8 விழுக்காட்டு நீரில் 0.1 விழுக்காடு, குளம், கண்மாய் மற்றும் ஆறுகளில் உள்ளது. நிலத்தடியில் 0.6 விழுக்காடு நீர் உள்ளது. மீதி நீர் பயன்படுத்த முடியாத நிலையில் அழுக்காக உள்ளது. இந்த 0.6 விழுக்காட்டு நிலத்தடி நீரில் 0.025 விழுக்காடுதான் குடிப்பதற்கு உகந்தது. ஒரு லிட்டர் நீரில் ஒரு தேக்கரண்டி அளவு நீர்தான் நல்லநீர். ஆறுகள், அணைகள், ஏரிகள் ஆகியவற்றிலுள்ள நீரில் 40 விழுக்காடு பிரேசில், கானடா, அமெரிக்க ஐக்கிய நாடு, சீனா, இந்தியா ஆகிய ஆறு நாடுகளுக்குள் இருக்கிறது. உலகுக்கு ஒரு நாளைக்குத் தேவைப்படும் பத்திரிகை காகிதத்தை உற்பத்தி செய்ய 1,400 கோடி லிட்டர் நீர் தேவை. நான்கு கார் டயர்கள் செய்ய 9,400 லிட்டர் நீர் தேவை. ஒருபால்மாடு ஒரு லிட்டர் பால் கொடுக்க, ஒருநாளைக்கு 4 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். இவ்வாறு நீர் மேலாண்மை குறித்த ஒரு கருத்தரங்கில் கூறப்பட்டது.

நீரைப் பற்றிய மேலும் சில உண்மைகளை நாம் தெரிந்து கொள்வோம். ஒருவர் உணவின்றி ஒருமாதம் உயிர் வாழலாம். ஆனால் நீரின்றி ஒரு வாரத்திற்கு மேல் உயிர் வாழ முடியாது. மனிதர் தோலில் சுமார் 70 விழுக்காடு நீர் அடங்கியுள்ளது. ஒரு சராசரி மனிதன் தினமும் இரண்டரை லிட்டர் நீரை உடலிலிருந்து வெளியேற்றுகிறான். எனவே மனிதன் சுத்தமான நீரை குடித்துக் கொண்டே இருக்க வேண்டும். தினமும் காலையில் எழுந்தவுடன் பல் தேய்ப்பதற்கு முன்னமே ஒன்றரை லிட்டர் நீர் குடிப்பது நல்லது. இதனால் இருமல், ஆஸ்துமா, சிறுநீரகக் கற்கள், சிலவகைப் புற்று நோய்கள், மலச்சிக்கல், தலைவலி, சர்க்கரை நோய், கண் நோய்கள் உட்பட பல நோய்கள் குணமாகும். தண்ணீர் குடிப்பதற்கு ஒருமணி நேரத்திற்கு முன்பும், குடித்தபின் ஒருமணி நேரமும் எந்த உணவும் உண்ணக் கூடாது. ஒவ்வாமை, ஆஸ்துமா போன்ற நோய் உள்ளவர்களுக்கு உடலில் ஏற்படும் பிராணவாயு குறைபாட்டை, அவர்கள் குடிக்கும் தண்ணீர் தீர்த்து விடும். உடல் எடையைக் குறைப்பதற்கு நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். இவ்வாறு “தண்ணீர் மருத்துவம்” பற்றிச் சொல்லும் டாக்டர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

அன்பர்களே, ஒரு நாட்டின் உண்மையான செல்வம், நீர்வளமும் நிலவளமும்தான். நீர் என்பது மனிதருக்கும் பிற உயிர்களுக்கும் அடிப்படை உரிமை. எனவே குறைந்தபட்சம் தேவையான தண்ணீராவது அனைவருக்கும் கிடைப்பதற்கு உத்தரவாதம் வழங்கப்பட வேண்டும். இந்த அடிப்படை உரிமையான நீரை, வருங்காலத் தலைமுறையினருக்கும் கிடைக்குமாறு செய்வது நம் ஒவ்வொருவரின் கடமையாகும். ''நீர் விலைமதிக்க முடியாத ஒன்றாக உள்ளது. அதை அனைவரும் வீணாகாமல் பயன்படுத்த வேண்டியது இக்காலத்தின் கட்டாயமுமாகும்''. வாழ்வின் ஆதாரமான நீர் ஓர் இலவசக் கொடை. அதைப் பொறுப்போடு பயன்படுத்த வேண்டும். அது சமமாகப் பகிரப்பட வேண்டும். அது அனைவராலும் பாதுகாக்கப்பட வேண்டும். இதுவே உலக தண்ணீர் தினம் விடுக்கும் வேண்டுகோள்.

RealAudioMP3








All the contents on this site are copyrighted ©.