2010-03-22 12:52:23

மார்ச் 23 தவக்கால சிந்தனை


RealAudioMP3 மகா புத்தரிடம் ஒருமுறை அவர் சீடர்கள், கேள்வி ஒன்று கேட்டார்கள். அந்தக் கேள்வி நீர் யார்? என்பது. புத்தர் அதற்கு உடன் பதில் சொல்லவில்லை. எனவே சீடர்களில் ஒருவர் நீர் கடவுளா? என்றார். இல்லை என்றார் புத்தர். நீர் கடவுளுக்குத் துணை நிற்கும் கடவுளர்களில் ஒருவரா? என்றார் மற்றவர். இல்லை என்றார் புத்தர். நீர் கடவுளுக்குப் பணி செய்யும் தேவர்களில் ஒருவரா? என்றார் வேறொருவர். இல்லை என்ற பதிலே புத்தரிடமிருந்து வந்தது. சரி. நீர் மனிதரா? என்றார் இன்னுமொருவர். அதற்கும் இல்லை என்ற மகா புத்தர் முடிவில் “நான் விழித்திருக்கிறேன், அவரே நான்” என்றார்.

இயேசுவிடம் நீர் யார்? என்று பரிசேயர்களால் கேள்வி எழுப்பப்படுகிறது. “இருக்கிறவர் நானே!” என்று யாவே கடவுள் மோசேயிடம் தன்னைப் பற்றிச் சொன்ன அதே பதிலை இயேசு சொல்லி, தானும் தனது தந்தையும் ஒருவரே என்பதை நியாயப்படுத்துகிறார். தான் கடவுளின் மகன் என்பதில் சந்தேகப்படும் பரிசேயர்களுக்கு “என்னை அனுப்பியவர் உண்மையானவர். நானும் அவரிடமிருந்து கேட்டவற்றையே உலகிற்கு எடுத்துரைத்துள்ளேன்” எனச் சொல்லி வாதிடுகிறார். தனக்கும் தனது தந்தைக்கும் இடேயே இருக்கும் ஆத்மார்த்தமான உறவு நிலையை இயேசு விளக்கிக் கூறிய போது இயேசு யார் என்பதைப் பலரும் புரிந்து அவரில் நம்பிக்கை கொண்டதாக யோவான் நற்செய்தி தெளிவுபடுத்துகிறது.

இயேசு கடவுளின் மகன் என்பதை விசுவசிக்கிறோம்! ஏற்றுக் கொள்கிறோம்!.

இயேசு கடவுளின் மகன் என்பதை நாம் எவ்வளவிற்கு வாழ்வாக்கியுள்ளோம்? (எழுதி வழங்கியவர் அ.பணி.பவுல்ராஜ் சே.ச)








All the contents on this site are copyrighted ©.