2010-03-19 15:53:42

தாய்லாந்தின் தற்போதைய அரசியல் பிரச்சனைகளில் கத்தோலிக்கர் சமநிலை காக்குமாறு ஆயர்கள் வேண்டுகோள்


மார்ச்19,2010 தாய்லாந்தின் தற்போதைய அரசியல் பிரச்சனைகளில் கத்தோலிக்கர் சமநிலை காக்குமாறு அந்நாட்டுக் கத்தோலிக்க ஆயர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தற்போதைய மிகவும் நெருடலான ஒரு சூழலில், யார் சரி, யார் தவறு என்று நியாயம் சொல்வது மேலும் மோதல்கள் உருவாகக் காரணமாக அமையக்கூடும் என்பதால், திருச்சபை எந்தப் பக்கமும் சார்ந்து நிற்கக் கூடாது என்று தாய்லந்து ஆயர் பேரவையின் உதவிச் செயலர் அருட்திரு Pipat Rungruangkanokkul கூறினார்.

தாய்லாந்து அரசு முறையான தேர்தல்களை நடத்தவில்லை எனக் குற்றம் சாட்டி அந்நாட்டின் முன்னாள் பிரதமர் Thaksin Shinawatra வின் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆங்காங்கே குண்டு வெடிப்புகளும் இடம் பெற்றுள்ளன.

இந்நிலை குறித்துப் பேசிய தாய்லந்து ஆயர் பேரவைத் தலைவர் ஆயர் John Bosco Panya Kritcharoen, நாட்டில் அமைதி ஏற்படுவதற்கு உருக்கமாகச் செபிக்கவும், சிறப்புத் திருப்பலிகளை ஒப்புக் கொடுக்கவும் தியாகங்கள் செய்யவும், அமைதியில் தியானம் செய்யவும் ஆயர்கள் கத்தோலிக்கரைக் கேட்டுக் கொண்டுள்ளதாகத் தெரிவித்தார்.

இந்த அரசியல் சூழலில் கத்தோலிக்கர் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான வழிமுறைகள் அடங்கிய கையேட்டை பேராயர் Francis Xavier Kriengsak Kovitvanit தயாரித்து வருவதாகவும் ஆயர் ஜான் போஸ்கோ கூறினார்.








All the contents on this site are copyrighted ©.