2010-03-19 15:54:42

சிலே காரித்தாஸ் அமைப்பு, நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆன்மீக உதவிகளையும் செய்து வருகிறது - ஆயர் மானுவேல்


மார்ச்19,2010 சிலே நாட்டு காரித்தாஸ் அமைப்பு, அந்நாட்டில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான பொருளாதார உதவிகளை மட்டுமல்ல, ஆன்மீக உதவிகளையும் செய்து வருவதாக அவ்வமைப்பின் தலைவர் ஆயர் Manuel Camilo Vial Risopatron கூறினார்.

காரித்தாஸின் பணிகள் ஆழமான கிறிஸ்தவ விசுவாசத்தின் அடிப்படையில் செய்யப்படுவதாக உரைத்த ஆயர் கமிலோ, நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரும் தனிப்பட்ட விதத்தில் எதிர்நோக்கும் துன்பங்களைக் களைவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

உணவுகளையும் உடுப்புகளையும் வழங்குவதோடு ஒவ்வொருவரிடமும் தனியாகப் பேசி அவர்கள் மனரீதியாக எதிர்கொள்ளும் துன்பங்களைப் போக்குவதற்கும் அவர்களுடன் சேர்ந்து செபிப்பதற்கும் காரித்தாஸ் முயற்சித்து வருகின்றது எனவும் ஆயர் கூறினார்.

இம்மக்களின் மனித மாண்பு குறித்து திருச்சபை மிகவும் அக்கறை கொண்டுள்ளது எனவும், தகுந்த மரியாதை, மகிழ்ச்சி, மாண்புடன்கூடிய உதவி ஆகிய பண்புகளுடன் காரித்தாஸ் செயல்பட்டு வருகின்றதெனவும் ஆயர் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.