2010-03-18 15:23:44

மதக் கலவரங்கள் குறித்த சட்டப் பரிந்துரையை மத்திய அரசு மீண்டும் மறு பரிசீலனை செய்ய வேண்டும் - அனைத்திந்திய கிறிஸ்தவக் குழுவினர் பிரதமர் மன் மோகன் சிங்கிற்கு கடிதம்


மார்ச்18,2010 மதக் கலவரங்கள் குறித்து இந்திய அரசு 2009ஆம் ஆண்டு வெளியிட்ட ஒரு சட்டப் பரிந்துரையை மத்திய அரசு மீண்டும் மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று அனைத்திந்திய கிறிஸ்தவக் குழுவினர் பிரதமர் மன் மோகன் சிங்கிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.
இந்தியாவில் வாழும் பல்லாயிரம் கத்தோலிக்கர்கள், கிறிஸ்தவர்கள் அனைவரும் இந்திய சமுதாயத்தை உயர்த்த பல வகைகளிலும் பாடு பட்டு வருகின்ற போதிலும், அவர்களுக்கு உரிய பாதுகாப்பு இன்னும் முழுமையாகக் கிடைக்காதது வருத்தத்திற்குரியது என்று இக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் மதக் கலவரங்களைத் தூண்டும் வகையில் வெறுப்பைப் பரப்பும் பேச்சுக்கள், துண்டு பிரசுரங்கள், சுவரொட்டிகள் ஆகியவைகளுக்கு சரியான தண்டனைகள் இந்தச் சட்டப் பரிந்துரையில் இல்லாததைச் சுட்டிக் காட்டியுள்ளனர் இக்குழுவினர்.
தொடர்ந்து குறிப்பிட்ட ஒரு பாணியில் இந்த வன்முறைகள் நடைபெறுவதை கவனத்தில் கொள்ளாமல், இது போன்ற வன்முறைகள் "ஆங்காங்கே" நடைபெறுவதாக இந்தப் பரிந்துரையில் கூறப்பட்டுள்ளது ஏற்றுக் கொள்ளப்படக் கூடியதில்லை என்று பிரதமருக்கு எழுதப்பட்டுள்ள இக்கடிதத்தில் மேலும் கூறப்பட்டுள்ளது.
கலவரங்களில் ஈடுபட்டோருக்கான நீதி விசாரணை, மற்றும் கலவரங்களால் பாதிக்கப்பட்டோருக்கான நஷ்ட ஈடு ஆகியவைகளிலும் உள்ள குறைகளை இந்த சட்டப் பரிந்துரை சரிவர கவனத்தில் கொள்ளவில்லை என்ற குறையும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.பிரதமருக்கு எழுதப்பட்டுள்ள இந்த மடலின் பிரதிகள், சட்டம் மற்றும் நீதித் துறை அமைச்சர் Veerappa Moily, உள் துறை அமைச்சர் பா.சிதம்பரம், சிறுபான்மையினருக்கான அமைச்சர் Salman Khurshid, காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.







All the contents on this site are copyrighted ©.