2010-03-16 15:02:39

மார்ச், 17 தவக்காலச் சிந்தனை


தவக்காலச் சிந்தனை – இதனை எழுதி வழங்குபவர் அருட்பணி பவுல்ராஜ், சே.ச. RealAudioMP3 சீமோன் பேதுரு ஒரு மீனவர். மீன் பிடிப்பதையே தன் தொழிலாகக் கொண்டு வாழ்ந்தவர், இயேசுவைச் சந்திப்பதற்கு முன்பு வரை. இன்றைய நற்செய்தியில் இரவு முழுவதும் பாடுபட்டு உழைத்தும் ஒன்றும் கிடைக்காமல் சோர்வாகி வலைகளை அலசிக் கொண்டிருக்கிறார். பேதுருவிற்குக் கடலைத் தெரியும்; கடலில் வீசும் காற்றைத் தெரியும்; கடலுக்குள் விரைந்தோடும் நீரோட்டம் பற்றித் தெரியும்; நீரோட்டத்திற்கு எதிராகப் பாயும் மீன்களின் தரம் பற்றித் தெரியும்; மீன் பிடிப்பது பற்றி அனைத்தும் தெரிந்த பேதுருவிடம், "ஆழத்திற்குத் தள்ளிக் கொண்டு போய், மீன் பிடிக்க வலைகளைப் போடுங்கள்" எனச் சொல்லும் இயேசுவிற்கு பேதுருவினுடைய அனுபவத்தின் வயது கூட கிடையாது என்பது உண்மை. இருந்தாலும் இயேசுவின் மீது முழு நம்பிக்கை கொண்டு, "ஐயா, உமது சொற்படியே வலைகளைப் போடுகிறேன்" என்கிறார் பேதுரு. வலை கிழியும் அளவிற்கு மீன்களைப் பிடித்து படகை நிரப்புகிறார்.
பேதுரு இயேசுவின் மீதான ஆழமான விசுவாசத்திற்கான நமது முன்னோடி.
பேதுரு இயேசுவின் மீதான முழு நம்பிக்கைக்கான நமது முன்னோடி.
பேதுரு இயேசுவின் மீதான அளப்பறிய அன்பிற்கான நமது முன்னோடி.இன்றைய தினம் பேதுருவிடம் சொன்னது போல நம் ஒவ்வொருவரிடமும் நீங்கள் என்னை, எனது வார்த்தையை முழுமையாக நம்புவீர்களாகில் "உங்களையும் இன்றைய நாள் முதல் மனிதரைப் பிடிப்பவர்கள் ஆக்குவேன்." என்கிறார். நமது முன்னோடியான பேதுருவைப் போல் நாமும் இயேசுவை முழு அகச் சுதந்திரத்தோடு பின்பற்றத் தயாராகுவோம்.







All the contents on this site are copyrighted ©.