2010-03-15 15:15:49

மார்ச் 16 தவக்கால சிந்தனை


தவக்கால சிந்தனை எழுதிவழங்குபவர் அருள்தந்தை பவுல்ராஜ், சே.ச.
RealAudioMP3
38 ஆண்டுகளாய் உடல்நலமற்றிருந்த ஒருவரை இயேசு எருசலேமிலுள்ள ஐந்து மண்டபங்களில் பார்க்கிறார். ஒருசில மாதங்கள் உடல்நலமற்றிருந்தாலே அவர்கள் நிலைமை மோசமாக இருக்கும். 38 ஆண்டுகள். அவர் என்ன நிலைமையில் இருந்திருப்பார் என்பதைச் சிறிது ஊகித்துப் பாருங்கள். இயேசு அவரை “நலம் பெற விரும்புகிறீரா” எனக் கேட்கிறார். ஆனால் அவரோ ஆம் என்று கூறாமல் நம்பிக்கையற்றவராக ஏதேதோ புலம்புகிறார். இயேசுவோ அவரது துன்பநிலையைக் கண்டு படுக்கையை எடுத்துக் கொண்டு நடந்து செல்லும் என்கிறார். 38 ஆண்டுகள் படுத்த படுக்கையாய் இருந்தவர் எழுந்து நடந்து செல்கிறார்.
இயேசுவின் இந்தப் புதுமை நமக்கு உணர்த்துவது என்ன? முதலாவதாக 38 ஆண்டுகள் உடல்நலமற்றிருந்தவர் இயேசுவின் சொல்லால் எழுந்து நடந்து சென்ற போது இயேசுவிற்கு ஒரு நன்றிகூட சொல்லவில்லை. இயேசு அதைப் பற்றிக் கவலைப்படவும் இல்லை. இரண்டாவதாக குணமடைந்தவருக்குத் தன்னைக் குணப்படுத்தியவர் யார் என்றுகூடத் தெரியவில்லை. இதனை ஆராயும் போது நம் ஒவ்வொருவருக்கும் 38 ஆண்டுகள் நோயுற்றிருந்தவர்மீது கோபம் வருவது நியாயம்தான்! ஆனால் அந்த நோயுற்றிருந்தவர் யார்? நாம் ஒவ்வொருவரும்தான்.
எவ்வளவோ வேண்டுதல்கள்! மன்றாட்டுகள்! இயேசு அதனை நிறைவேற்றுகிறார். ஒருசில நன்மைகளை நாம் கேட்பதற்கு முன்பே நிறைவேற்றுகிறார். ஒருசிலவற்றை காலம் அறிந்து நமக்குத் தாயைப் போல தருகிறார். இயேசுவிற்கு நமது பதில்தான் என்ன?
தவக்காலம் நம்மை இயேசுவின்மீது ஆழமான விசுவாசம் கொல்ள அழைக்கிறது.தவக்காலம் இயேசு நமக்குச் செய்த நன்மைத்தனங்களுக்கு நன்றி கூற அழைக்கிறது.







All the contents on this site are copyrighted ©.