2010-03-13 14:36:41

அரசுகள் சமய சுதந்திரத்தை மதிப்பதற்கு வத்திக்கான் உயர் அதிகாரி அழைப்பு


மார்ச்13,2010 மக்கள் அனைவரும் தங்கள் மதத்தைச் சுதந்திரமாகக் கடைபிடிப்பதற்கு இருக்கும் உரிமையை அனைத்து நாடுகளும் மதிப்பதற்கும் சிறுபான்மை மதச் சமூகங்களைத் துன்புறுத்துவோர் தண்டிக்கப்படுவதற்கும் உலகத் தலைவர்கள் நடவடிக்கை எடுக்குமாறு வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் வலியுறுத்தியுள்ளார்.

ஜெனீவாவிலுள்ள ஐ.நா.அலுவலகங்களுக்கானத் திருப்பீடப் பிரதிநிதி பேராயர் சில்வானோ தொமாசி, ஜெனீவாவில் சமய சுதந்திரம் குறித்து நடைபெற்ற ஐ.நா. அமர்வில் இவ்வாறு உரையாற்றினார்.

சிறுபான்மை மதச் சமூகங்களைத் துன்புறுத்தும் செயல்பாடுகள், அரசு அதிகாரிகளின் மௌனத்தினாலும், நீதித்துறையின் திறமையற்ற அல்லது பாரபட்ச நிலைப்பாட்டினாலும் ஊக்குவிக்கப்படுகின்றன என்றும் பேராயர் தொமாசி குறை கூறினார்.

உலகின் 680 கோடி மக்களில் ஏறத்தாழ 70 விழுக்காட்டினர், சமய நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்பட்ட நாடுகளில் வாழ்கின்றனர் என்று ஒரு புள்ளி விபரம் கூறுவதாகக் குறிப்பிட்ட பேராயர், சமயத்தின் அடிப்படையில் விசுவாசிகளைத் துன்புறுத்துவோரைத் தண்டிப்பதற்குக் கடுமையான சட்டங்கள் கொண்டுவரப்படுமாறும் வலியுறுத்தினார்.








All the contents on this site are copyrighted ©.