2010-03-13 14:28:31

அமைதி ஆழமாக வேரூன்றப்பட வேண்டுமானால், பதட்டநிலைகளுக்கு வித்திடும் விவகாரங்கள் களையப்பட முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும்-திருத்தந்தை


மார்ச்13,2010 அமைதி ஆழமாக வேரூன்றப்பட வேண்டுமானால், பதட்டநிலைகளுக்கு வித்திடும் விவகாரங்களை, குறிப்பாக, ஊழல், இனங்களிடையேயான பதட்டநிலைகள், பாராமுகம், தன்னலமின்மை போன்ற விவகாரங்களைக் குறைப்பதற்கு உறுதியான முயற்சிகள் எடுக்கப்பட வேண்டுமென்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.

வாய்மை, உலகளாவிய சகோதரத்துவம், நீதி, பொறுப்புணர்வு, பிறரன்பு ஆகிய பண்புகளின் அடிப்படையில் இம்முயற்சிகள் எடுக்கப்பட்டால் அவை உண்மையிலேயே நல்ல பலனைத் தரும் என்றும் திருத்தந்தை கூறினார்.

ஆயர்கள் ஐந்தாண்டுக்கு ஒருமுறை பாப்பிறையைச் சந்திக்கும் "ad Limina Apostolorum", என்ற அப்போஸ்தலிக்கச் சந்திப்பை முன்னிட்டு இச்சனிக்கிழமை, ஆப்ரிக்காவின் சூடான் நாட்டின் 13 ஆயர்களைச் சந்தித்த திருத்தந்தை இவ்வாறு கூறினார்.

பக்குவமும் நேர்மையான அறநெறியும் கொண்ட தலைமைத்துவத்தால் இம்முயற்சிகள் வழிநடத்தப்பட்டால், அமைதி குறித்த உடன்பாடுகள் எதிர்நோக்கும் தடைகளை மேற்கொள்ள முடியும் என்றும் திருத்தந்தை கூறினார்.

ஆப்ரிக்காவுக்கான சிறப்பு ஆயர் மன்றத்தால் உந்தப்பட்டவர்களாய், ஆயர்கள் ஒப்புரவு மற்றும் மன்னிப்பைத் தொடர்ந்து போதிக்குமாறும் திருத்தந்தை கேட்டுக் கொண்டார்.








All the contents on this site are copyrighted ©.