2010-03-12 16:04:04

இன்றைய உலகில் அருட்பணியாளர்கள் நற்செய்திக்கு மிகவும் சிறப்பான முறையில் சான்று பகருவதற்கு ஊக்கப்படுத்தப்பட வேண்டும் - திருத்தந்தை


மார்ச்12,2010 இன்றைய உலகில் அருட்பணியாளர்கள் நற்செய்திக்கு மிகவும் சிறப்பான முறையிலும் உறுதியாகவும் சான்று பகருவதற்கு அவர்கள் தங்களின் அகவாழ்வைப் புதுப்பிப்பதற்கான முயற்சிகளில் ஊக்கப்படுத்தப்பட வேண்டும் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.

பொது வாழ்விலிருந்து கடவுளை ஒதுக்கி வைக்கும் உலகாயுதப் போக்குப் பரவலாகக் காணப்படும் இக்காலச் சூழலில் குருக்கள், பொதுவான கூறுகளுக்கு அந்நியமாகத் தோன்றுகிறார்கள் என்றுரைத்த திருத்தந்தை, குருக்கள், இத்தகைய ஆபத்துக்களை மேற்கொள்ள வேண்டியது அவசியம் என்றும் தெரிவித்தார்.

திருப்பீட குருக்கள் பேராயம் வத்திக்கானில் நடத்திய, “கிறிஸ்துவுக்குப் பிரமாணிக்கம், குருத்துவத்துக்கு விசுவாசம்” என்ற தலைப்பிலான இரண்டு நாள் இறையியல் கருத்தரங்கில் கலந்து கொண்ட ஏறத்தாழ 700 பேரை இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை இவ்வாறு கூறினார்.

தேசிய மற்றும் மறைமாவட்ட அளவில் குருத்துவக் கல்விக்கும் உருவாக்கும் பயிற்சிக்கும் பொறுப்பானவர்கள் உட்பட ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆயர்கள், 500க்கும் மேற்பட்ட குருக்கள் எனப் பலர் இக்கருத்தரங்கில் கலந்து கொண்டது குறித்த தனது பாராட்டையும் தெரிவித்தார் பாப்பிறை.

கிறிஸ்துவின் ஒரே குருத்துவத்தில் பங்கு கொள்வதற்கு அழைக்கப்பட்டுள்ள குருக்கள், இறைவாக்குத் தனிவரத்தில் மலரவும் கேட்டுக் கொண்டார் திருத்தந்தை.

குருத்துவம் என்ற மேலான அழைப்பைக் கொடையாகப் பெற்றுள்ள குருக்கள், இதனைக் கிறிஸ்துவின் மீதானத் தங்களது ஆழமான விசுவாசத்தில் வாழ்வதன் வழியாக அவ்வழைப்பைக் காத்துக் கொள்ளுமாறு அழைப்பு விடுத்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.








All the contents on this site are copyrighted ©.