2010-03-10 15:58:07

திருத்தந்தையின் புதன் பொது மறைபோதகம்


RealAudioMP3 மார்ச். 10. திருத்தந்தையின் இப்புதன் பொது மறைபோதகம் 6ஆம் சின்னப்பர் அரங்கில் இடம் பெற்றது. மத்திய காலத்தின் கிறிஸ்தவக் கலாச்சாரம் குறித்து மறைபோதகம் வழங்கி வரும் திருத்தந்தை 16ம் பெனெடிக்ட், இவ்வாரமும் அதன் தொடர்ச்சியாக புனித  பொனவெந்தூரைப் பற்றி எடுத்தியம்பினார்.

13ஆம் நூற்றாண்டின் உயரிய பிரான்சிஸ்கன் இறையியலாளர் புனித பொனவெந்தூரின் படிப்பினைகள் குறித்து இன்று மீண்டும் நோக்குவோம். புனித பிரான்சிஸ் அசிசி,  திருச்சபை மற்றும் கிறிஸ்துவின் காலத்திற்குப் பதிலாக, தூய ஆவியின் புதிய மற்றும் இறுதியான ஒரு காலத்தைத் துவக்கி வைத்தார் என்ற தவறான எண்ணப் போக்கை மறுத்தார் புனித பொனவெந்தூர்.

 பிரான்சிஸ்கன் சபைக்குரிய தனி வரத்தின் புதிய எண்ணங்களை வலியுறுத்தும் அதே வேளை, கிறிஸ்து நிகழ்வின் முக்கியத்துவம் திருச்சபை வரலாற்றில் கொண்டுள்ள உறுதியான இடத்தையும் ஆணித்தரமாக எடுத்துரைத்து, மனித வரலாறு, முன்னேற்றம் இவை குறித்த மிகச் சிறந்த இறையியலை உருவாக்கினார் புனித பொனவெந்தூர்.

கிறிஸ்தவ வெளிப்பாட்டை மனித வரலாறு எந்த வகையிலும் மேம்படுத்த முடியாது; எதிகாலத்தில் கடவுளின் திட்டங்கள் நிறைவேறும் என்பதே கிறிஸ்தவ நம்பிக்கை என புனிதர் தன் எண்ணங்களில் வலியுறுத்தியுள்ளார்.

கடவுளே எல்லா நன்மைகளின் முதலும் முடிவும் ஆக இருக்கிறார் என்றுரைத்த Pseudo-Dionysiusன் கருத்துக்கள் புனித பொனவெந்தூரின் கருத்துக்களில் அதிகம் காணக்கிடக்கின்றன. அவர் எழுதிய "The Journey of the Mind to  God" (கடவுளை நோக்கிய அறிவின் பயணம்) என்ற நூலில்,  கண்ணுக்குப் புலனாகும் படைப்புகளிலிருந்து கண்ணுக்குப் புலப்படாத மூவொரு கடவுளின் தியானத்திற்கு ஆன்மாவை அழைத்துச் செல்கிறார் புனிதர்.

RealAudioMP3 கிறிஸ்துவை மையமாக்கும் இப்புனிதரின் இறையியல், கிறிஸ்துவை நம் உள்ளங்களில் வரவழைத்து, அதன் பயனாக கடவுளின் நித்திய அன்பை அனுபவிக்க நம்மை அழைக்கிறது.

இவ்வாறு தன் மறைபோதகத்தை வழங்கியத் திருத்தந்தை, அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசிரையும் அளித்தார் .RealAudioMP3








All the contents on this site are copyrighted ©.