2010-03-08 16:15:12

துன்பங்களைப் புரிந்து கொள்வதற்கு உண்மையான ஞானம் தேவைப்படுகின்றது - திருத்தந்தை


மார்ச்08,2010 துன்பங்களைப் புரிந்து கொள்வதற்கு உண்மையான ஞானம் தேவைப்படுகின்றது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் இஞ்ஞாயிறன்று கூறினார்.

கடவுள் எரியும் புதர் வடிவில் மோசேக்குத் தோன்றியது குறித்து சிந்திக்கும் நாம், கடவுள் நம் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் பல்வேறு வடிவங்களில் தம்மை வெளிப்படுத்துகின்றார் என்றும் தெரிவித்தார் திருத்தந்தை.

தவக்காலத்தைத் தனித்துக் காட்டும் மனமாற்றத்திற்கான அழைப்பு, மக்கள், வரலாற்றை வாசிக்கவும், துன்பங்களை, விசுவாசக் கண்கொண்டு நோக்கவும் வலியுறுத்துகின்றது எனவும் திருத்தந்தை கூறினார்.

இஞ்ஞாயிறு திருவழிபாட்டின் நற்செய்திப் பகுதியிலிருந்து இந்தப் பாடத்தையே நாம் கற்றுக் கொள்கிறோம் என்று, வத்திக்கான் தூய பேதுரு சதுக்கத்தில் ஞாயிறு நண்பகலில் கூடியிருந்த சுமார் இருபதாயிரம் திருப்பயணிகளிடம் கூறினார் திருத்தந்தை.

“சிலர் இயேசுவிடம், தீமை, இறைவன் அனுப்பும் தண்டனை என்ற கோணத்தில், பிலாத்துவின் கட்டளையின் பேரில் சில கலிலேயர்கள் ஆலயத்தினுள் கொல்லப்பட்டது, சிலோவாமில் கோபுரம் விழுந்து பதினெட்டுப் பேர் இறந்தது (லூக்.13:1-5) போன்ற சில வருத்தமான நிகழ்ச்சிகள் குறித்து கேள்வி கேட்டது பற்றிய “இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகத்தின் பகுதியை”ச் சுட்டிக்காட்டிய திருத்தந்தை, கடவுள் நல்லவர், யார்மீதும் தீமை வருவதை அவரால் விரும்ப முடியாது என்ற அம்மக்களுக்கான இயேசுவின் பதிலையும் விளக்கினார்.

ஒருவர் எதிர்கொள்ளும் துயரச் சம்பவங்கள், அவர் தனது சொந்தத் தவறுகளுக்காக உடனடியாக அனுபவிக்கும் தண்டனைகள் என்ற கருத்தை இயேசு எச்சரிக்கிறார் என்றும் திருத்தந்தை கூறினார்.

“இக்கலிலேயருக்கு இவ்வாறு நிகழ்ந்ததால் இவர்கள் மற்றெல்லாக் கலிலேயரையும் விடப் பாவிகள் என நினைக்கிறீர்களா? அப்படி அல்ல என உங்களுக்குச் சொல்கிறேன். மனம் மாறாவிட்டால் நீங்கள் அனைவரும் அவ்வாறே அழிவீர்கள்!. (லூக். 13:2-3)” என்றார் இயேசு.

“இயேசு, இந்த நிகழ்வுகளை வித்தியாசமான கண்ணோட்டத்தில் வாசிக்கவும் அவற்றை மனமாற்றத்தின் பொருளில் நோக்கவும் அழைப்பு விடுக்கிறார்” எனவும் கூறிய .திருத்தந்தை, இந்தத் துயரச் சம்பவங்களின் பின்னணியிலுள்ள குற்றவாளிகள் யார் என்று கண்டுபிடிப்பதற்கு நம்மை இட்டுச் செல்லக் கூடாது என்றார்.

இறைவன் இன்றி நாம் வாழ முடியும் என்ற மாயையை மேற்கொள்ளவும் கடவுளின் துணையோடு அது குறித்து நாம் சிந்திப்பதற்கும் இச்சம்பவங்கள் வாய்ப்பளிக்கின்றன எனவும் அவர் தெரிவித்தார்.

பாவிகள் தீமையை விட்டு விலகி அவரின் அன்பில் வளரவும் மற்றவர்கள் அருளின் மகிழ்வில் வாழ நாம் உதவவும் இறைவன் விரும்புகிறார் எனவும் திருத்தந்தை கூறினார்.

இஞ்ஞாயிறன்று தான் சென்ற உரோம் நகரின் Castel Giubileo விலுள்ள San Giovanni della Croce, என்ற பங்கில் திருப்பலி நிகழ்த்தி ஆற்றிய மறையுரையிலும் இக்கருத்துக்களையே எடுத்துச் சொன்னார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

“தனது மக்களுக்கு எப்பொழுதும் நல்லதையே விரும்பும் இறைவன், அம்மக்கள் மேலான நன்மைகளை கண்டுபிடிக்கும்வண்ணம் வேதனைகளை அனுபவிப்பது தமது அன்பின் நமது அறிவுக்கு எட்டாத திட்டத்தின் ஓர் அங்கமாக சிலவேளைகளில் அனுமதிக்கிறார்”, இத்தகைய இச்சம்பவங்கள், இறைவன் இன்றி நாம் வாழ முடியும் என்ற மாயையை மேற்கொள்ளவும் கடவுளின் துணையோடு அது குறித்து நாம் சிந்திப்பதற்கும் வாய்ப்பளிக்கின்றன எனவும் அதற்காக துன்பங்களை அவர் அனுமதிக்கிறார் என்று திருத்தந்தை கூறினார்.








All the contents on this site are copyrighted ©.