2010-03-06 15:14:14

தன்னார்வப் பணியாளர்கள் நல்ல சமாரித்தன் போன்றவர்கள்- திருத்தந்தை


மார்ச்06,2010 எப்பொழுது ஒருவர் தனது குடும்பத்திலும் தனது தொழிலிலும் மட்டும் கவனம் செலுத்தாமல் பிறருக்கும் சேவை செய்ய தன்னை அர்ப்பணிக்கிறாரோ அப்போது அவரது இதயம் விரிகிறது, அவர் நற்செய்தியின்படி வாழ்கிறார் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.

இத்தாலிய தேசிய குடிமக்கள் பாதுகாப்பு அமைப்பின் நிர்வாகிகள், உறுப்பினர்கள், தன்னார்வப் பணியாளர்கள் என ஏறத்தாழ ஏழாயிரம் பேரை இச்சனிக்கிழமை வத்திக்கானில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை இவ்வாறு கூறினார்

தன்னார்வப் பணிக்கு, சுயஅர்ப்பணமும் தன்னார்வமும் தேவைப்படுவதால் தன்னார்வப் பணியாளர்கள் சமூக வலைதளத்தில் தற்காலிகமாக வருபவர்கள் அல்ல, மாறாக அவர்கள் உண்மையிலேயே மனித மற்றும் கிறிஸ்தவ சமுதாயத்தின் முகத்தை வடிவமைப்பவர்கள் என்றும் திருத்தந்தை தெரிவித்தார்.

இந்தத் தேசிய அமைப்பின் மூவாயிரம் கிளைகளில் ஏறத்தாழ 13 இலட்சம் பேர் உறுப்பினர்களாக இருப்பதைப் பாராட்டிய பேசிய திருத்தந்தை, 2000மாம் ஆண்டில் உலக இளையோர் தினத்தின் போதும், பாப்பிறை இரண்டாம் ஜான் பவுல் இறந்த சமயத்திலும் இத்தாலிய தன்னார்வப் பணியாளர்கள் ஆற்றிய சேவையை மறக்க முடியாது என்றும் கூறினார்.

இயற்கைப் பேரிடர்கள், அவசரகாலங்கள் போன்ற வாழ்வை அச்சுறுத்தும் நேரங்களில் மனிதரையும் அவர்களது மாண்பையும் சமூகத்தின் பொதுச் சொத்துக்களையும் காப்பதில் இப்பணியாளரின் சேவை குறிப்பிடும்படியானது என்றும் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.