2010-03-06 15:32:17

ஞாயிறு சிந்தனை


RealAudioMP3
இந்தியக் கடற்கரைப் பகுதிகளைத் தாக்கிய சுனாமி நம் நினைவுகளில் இன்னும் இருக்குமென்று நினைக்கிறேன். கிறிஸ்மசுக்கு அடுத்த நாள், ஞாயிறன்று வேளாங்கண்ணியில் திருப்பலியை முடித்து விட்டு கடற்கரைக்குச் சென்றவர்களை அந்த சுனாமி கடலோடு அடித்துச் சென்றது. திருத்தலம் ஒன்றில், திருப்பலி முடித்தவர்களுக்கு ஏன் இந்தக் கொடூரம்? திருத்தலங்களுக்குப் போகும் வழியில் அல்லது திருத்தலங்களுக்குச் சென்று திரும்பும்போது, அல்லது, திருத்தலங்களில், கோவில்களில் ஏற்படும் அளவுக்கதிகமான நெரிசல்களில் உயிரிழக்கும் பலரைப் பற்றி அவ்வப்போது கேள்விப்படுகிறோம், இல்லையா? இவ்வியாழனன்று (மார்ச் 04,2010) உத்தரப் பிரதேசத்தில் நடந்த சம்பவம் ஒரு உதாரணம்.
எந்த ஒரு துன்பமுமே காரண காரியங்களோடு நடக்கும் போது, நாம் அதிகக் கேள்விகளை எழுப்புவதில்லை. வேகமாக அல்லது குடிபோதையில் வாகனம் ஓட்டி விபத்திற்குள்ளாகும் மனிதர்களின் துன்பங்களைப் பற்றி அதிகம் கேள்விகள் எழாது. ஆனால், மேலே கூறிய இந்த நிகழ்வுகளில், அதுவும் சிறப்பாக திருத்தலங்களில், கோவில்களில் ஏற்படும் துன்ப நிகழ்வுகளில் பல கேள்விகள் எழும். அந்தக் கேள்விகளின் பின்னணியில் கடவுள் கட்டாயம் இருப்பார். பல நேரங்களில் இந்தக் கேள்விகளுக்கு நாமே சில குழப்பமான, அபத்தமான விளக்கங்களும் தருவோம்.
சுனாமி முடிந்து பல மாதங்கள் ஆன பின் என் நண்பர் ஒருவர் வேளாங்கண்ணியில் அன்று நடந்ததை என்னிடம் விளக்க முயன்றார். ஞாயிற்றுக் கிழமைகளில் வேளாங்கண்ணியில் பல மொழிகளில் திருப்பலிகள் தொடர்ந்து நடந்த வண்ணம் இருக்கும். ஒரு மொழிக்கானத் திருப்பலி முடிந்தது. அந்த மொழியைச் சேர்ந்தவர்கள் கடற்கரைக்குச் சென்றனர். மற்றொரு மொழிக்கான திருப்பலி ஆரம்பமானது. அந்த நேரத்தில் சுனாமி தாக்கியது. ஒரு மொழி பேசுபவர்களைக் கோவிலுக்குள் அழைத்த இறைவன், ஏன் வேறொரு மொழி பேசுபவர்களைக் கடற்கரைக்கு அழைத்துச் சென்றார்? என் நண்பரின் இந்தக் கூற்றை, இந்தக் கேள்வியைக் கேட்டு எனக்கு கோபமும், எரிச்சலும் தான் அதிகம் வந்தன. மொழிவாரியாகக் கடவுள் பாகுபாடுகள் பார்க்கிறவரா? கடவுள் மேல் இப்படியெல்லாம் பழிகள் சுமத்த வேண்டுமா? Graham Steinஐயும் அவரது இரு குழந்தைகளையும் உயிரோடு எரித்ததால், ஒரிஸ்ஸாவில் பெரியதொரு புயலையும், வெள்ளத்தையும் இறைவன் அனுப்பினார் என்று கடவுள் மேல் பழி சொன்னவர்களும் உண்டு. நம் மனித அறிவால் புரிந்து கொள்ள முடியாத சம்பவங்களில் கடவுளைப் புகுத்தி விடுகிறோம்.

இப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சியில் இன்றைய நற்செய்தி ஆரம்பமாகிறது. சிலர் இயேசுவை அணுகி, செய்தி ஒன்றைச் சொல்கின்றனர். அந்த நற்செய்தி பகுதியைக் கேட்போம்.

லூக்கா நற்செய்தி 13: 1-5 
பலி செலுத்திக்கொண்டிருந்த ஒரு சிலரைப் பிலாத்து கொன்றான். இது செய்தி. ஆனால், இந்தச் செய்திக்குப் பின்புலத்தில் பல கேள்விகள் அவர்கள் உள்ளத்தில் இருந்தன. கோவிலில் பலி செலுத்திக் கொண்டிருந்தவர்களை பிலாத்து எதற்காக கொன்றான் என்பதற்கு அரசியல் பதில்கள் பல இருக்கலாம். ஆனால், அந்தப் பதில்களைத் தேடி இயேசுவிடம் வரத் தேவையில்லை. இந்தச் செய்தியை இயேசுவிடம் சொல்வதற்கு ஒரு முக்கிய காரணம்... இந்த நிகழ்வில் கடவுள் எங்கே இருக்கிறார் என்ற விளக்கம் பெறுவதற்கே.

அவர்கள் உள்ளத்தில் இருந்த கடவுள் சம்பந்தமான கேள்விகளை இப்படி நாம் நினைத்துப் பார்க்கலாம். கோவிலில் பலி நேரத்தில் இந்தக் கொலை நடந்திருக்கிறதே. கோவில், பலி இவைகளெல்லாம் அவர்களைக் காப்பாற்ற முடியவில்லையே. (வேளாங்கண்ணியில் ஞாயிறு திருப்பலி முடித்தவர்களை சுனாமி கொன்ற போதும் இப்படி ஒரு கேள்விதானே எழுந்தது?) கோவிலில், பலி நேரத்தில் அந்தப் புனித இடத்திற்குள் நுழைந்து பிலாத்து கொலை செய்திருக்கிறானே, அவனைக் கடவுள் ஒன்றும் செய்ய மாட்டாரா?
ஒரு சில விவிலியப் பதிப்புகளில் பிலாத்தின் செய்கை இன்னும் பயங்கரமாய் கூறப்பட்டுள்ளது. "பிலாத்து அவர்களைக் கொன்று, அவர்கள் இரத்தத்தை அந்தப் பலியின் இரத்தத்தோடு கலந்தான்" என்று கூறப்பட்டுள்ளது. எனவே, இது சாதாரண கொலை அல்ல. இஸ்ராயலரிடையே தெய்வ நிந்தனை என்று தடை செய்யப்பட்டிருந்த நர பலியை பிலாத்து யூதர்களுடைய கோவிலிலேயே நடத்தினான். இறைவனின் சந்நிதியை, இஸ்ராயலரின் வாழ்வு நெறிகளை, மோசே தந்த சட்ட நெறிகளைக் களங்கப்படுத்தும் ஒரு மாபாதகத்தைச் செய்தான் பிலாத்து. அவனைக் கடவுள் ஒன்றும் செய்ய மாட்டாரா? இந்தக் கேள்விகளையெல்லாம் மனதில் வைத்துக்கொண்டுதான் இந்த செய்தி இயேசுவிடம் சொல்லப்பட்டது.
இன்றும், நமக்கும் இது போன்ற கேள்விகள் எழாமல் இல்லை. கடவுள், புனிதம் என்று நாம் கருதி வரும் பல இடங்களில், பல விஷயங்களில் விஷம் கலந்தது போல் தீமைகள் நடக்கும் போது... நமக்கும் இது போன்ற கேள்விகள் எழுகின்றன.

இக்கேள்விகளுக்கு இயேசு நேரடியாக விடை தந்தது போல் தெரியவில்லை. சொல்லப்பட்ட செய்திக்கு, சம்பவத்திற்கு இயேசு விளக்கம் சொல்லவில்லை. மாறாக, அந்த சம்பவங்களில் பாதிக்கப்பட்டோரைக் குறித்து நாம் கொண்டிருக்கும் கண்ணோட்டத்தைச் சரி செய்வதே இயேசுவின் முக்கிய நோக்கமாய் இருந்தது. அவர்கள் சொன்ன செய்தியையும், வேறொரு செய்தியையும் இயேசு எடுத்துக் கூறி, அவர் சொல்லும் விளக்கத்திலிருந்து நாம் பாடங்கள் தெரிந்து கொள்வது நல்லது.
 கோவிலில் நடந்த இந்த கொலை, சீலோவாமில் கோபுரம் ஒன்று விழுந்ததால் நடந்த உயிரிழப்பு... என்று இரு சம்பவங்களைக் கூறுகிறார் இயேசு. மனிதர்களால் மனிதர்களுக்கு அழிவுகள் ஏற்படும் போதும், இயற்கை வழியே, அல்லது விபத்துக்கள் வழியே மனிதர்களுக்கு அழிவுகள் ஏற்படும் போதும், அந்த அழிவுகள் ஏன் நடந்தன என்ற விளக்கங்களைத் தேடுவதை விட, அந்த அழிவுகளால் பாதிக்கப்பட்டவர்களைக் குறித்து அவசர முடிவுகள், தீர்ப்புகள் வேண்டாம் என்பதைச் சொல்வதிலேயே இயேசு குறியாய் இருக்கிறார்.
அழிவுக்கு உள்ளானவர்களைப் பாவிகள் என்று அவசரத் தீர்ப்பிட வேண்டாம். அவர்களை விட நாம் பெரும் பாவிகள். எனவே இந்த சம்பவங்கள் நமக்கு எச்சரிக்கைகளாய் இருக்கட்டும் என்பதை இயேசு அழுத்தந்திருத்தமாய் சொல்கிறார்.

இயேசுவின் இந்த பதில் தப்பித்துக் கொள்ளும் முயற்சி போல, அல்லது முக்கியக் கேள்வியைத் தட்டிக் கழிக்கும் முயற்சி போலத் தோன்றலாம். ஆனால், திட்டமிட்டு மனிதர்களால் நடக்கும் தீமைகளாலோ, விபத்துக்களாலோ இறந்தவர்கள், பாதிக்கப்பட்டவர்களை இறைவன் பார்த்துக் கொள்வார். ஆனால், அந்த சம்பவங்கள் வழியே இறைவன் கொடுக்க விழையும் எச்சரிக்கைகளை நாம் ஏற்றுக் கொள்வதே நலம் என்பதை வலியுறுத்தவே இயேசு இப்படி ஒரு பதிலைச் சொல்கிறார்.
வழக்கமாகத் துன்பங்களைச் சந்திக்கும் போது கேட்கும் ‘கடவுள் எங்கே’ கேள்விகளுக்குப் பதிலாக மற்ற கேள்விகளை, எண்ணங்களை வளர்த்துக் கொள்வதால் பல தெளிவுகள் பிறக்கும். ஹெயிட்டியில் இந்த ஜனவரியில் ஏற்பட்ட நில நடுக்கத்தை மறந்திருக்க வாய்ப்பில்லை. இந்த இயற்கைப் பேரழிவால் பாதிக்கப்பட்டவர்கள் மனங்களில், நம்முடைய மனங்களில் கட்டாயம் 'கடவுள் எங்கே' என்ற கேள்வி வெகு இயல்பாக எழுந்திருக்கும். கடவுள் எங்கே என்ற கேள்விக்குப் பதில் நாம் எங்கே, மனித சமுதாயம் இந்த நிலநடுக்கத்தில் எங்கே என்ற கேள்விகளையும் எழுப்பலாம்.
நில நடுக்கமே இப்போது இயற்கையின் விபரீதமா அல்லது மனிதர்கள் இயற்கையை அளவுக்கதிகமாய் சீர்குலைத்து வருவதன் எதிரொலியா என்ற கேள்வி எழுந்துள்ளது. அப்படியே, நில நடுக்கம் ஒரு இயற்கையின் விபரீதம் என்று எடுத்துக் கொண்டாலும், ஹெயிட்டி போன்ற ஏழை நாடுகளில் நில நடுக்கம் ஏற்படும் போது பெருமளவில் உயிர்கள் பலியாவதற்கு அங்கு கட்டப்பட்டிருக்கும் தரக் குறைவான கட்டிடங்களும் ஒரு காரணம் என்று நாம் அறியும் போது, மனசாட்சியுள்ள மனிதர்கள் எங்கே என்ற கேள்வி ஓங்கி ஒலிக்கிறது. ஏழ்மை நாடுகளில் நில நடுக்கம் ஏற்படும் போது, இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் அதிகத் தாமதம் ஏற்படுவதால், இன்னும் பல ஆயிரம் உயிர்கள் பலியாவதும் நம்மைப் பற்றிய கேள்விகளையே எழுப்புகின்றன. நம்மைச் சுனாமி தாக்கிய போதும், தகுந்த நேரத்தில் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்தால், பல ஆயிரம் உயிர்களை நாம் காப்பற்றியிருக்கலாம் என்பதை நாம் அறிவோம்.

இப்படி, இயற்கைப் பேரழிவை, விபத்தை, வன்முறைகளை, கொலைகளை,  பல்வேறு துன்பங்களை மேலோட்டமாகச் சிந்தித்தால், ‘கடவுள் எங்கே’ என்ற கேள்வியை எளிதில் கேட்டு விடலாம். ஆனால், ஆழமாய் சிந்திக்கும் போது மனிதர்களாகிய நாம் எங்கே என்ற கேள்வியையே நாம் அதிகம் கேட்க வேண்டியிருக்கும். ஹெயிட்டியிலும், அண்மையில் சிலியிலும் நில நடுக்கத்தின் கோரங்கள் உலகறியத் தெரிய வந்த அதே நேரத்தில், பல இடங்களில் கொள்ளை, திருட்டு ஆகியவை நடந்ததைக் கேள்விப்படும் போது, மனித குலம் எங்கு போகின்றது? என்ற கேள்வி பதில் சொல்லத் தேவையான ஒரு கேள்வியாக மாறுகிறது.
துன்ப நேரங்களில் கடவுளை நோக்கி நாம் வழக்கமாக எழுப்பும் கேள்விகளை நம் மனதை நோக்கியும், நாம் வாழும் சமூகத்தை நோக்கியும் எழுப்பினால், அந்த வழிகளில் நம் தேடல்களைத் தொடர்ந்தால், இன்னும் பல தெளிவுகள் கிடைக்கும்.

கடவுளைப் பற்றி அடிக்கடி கேட்கப்படும் ஒரு கேள்வி: கடவுள் அநியாயங்கள் நடந்தும் ஏன் சும்மா இருக்கிறார்? என்பது. அதற்கு நம் பழமொழி வழியாய் நாம் சொல்லும் பதில்: "அரசன் அன்று கொல்வான். தெய்வம் நின்று கொல்லும்." என்று. எனக்கு பழமொழியின் இரண்டாம் பகுதியில் அதிக உடன்பாடு இல்லை. தெய்வம் நிற்கும்... காத்து நிற்கும். கொல்வதற்கல்ல, வாழவைப்பதற்கு.
வாழ வைப்பதற்காக இறைவன் காட்டும் பொறுமையை ஆழமாய் உணர்த்தவே இன்றைய நற்செய்தியில் அத்தி மர உவமையைச் சொல்கிறார் இயேசு.

லூக்கா நற்செய்தி 13: 6-9 
அத்தி மரங்கள் வெகு சீக்கிரம் பூத்து, காய்த்து, கனி தரும் வகையைச் சார்ந்தவை. அவைகளுக்கு அதிக உரம், நீர் தேவையில்லை. அப்படிப்பட்ட மரம் மூன்றாண்டுகள் ஆகியும் பலன் தரவில்லை. இருந்தும்... மற்றொரு ஆண்டு தரப்படுகிறது. தெய்வம் நின்று, நிதானமாய் செயல்படும். அதன் செயல்பாடு வாழ்விக்கும் ஒரு செயல். வாழவைக்கும் ஒரு செயல்.
கடவுளைக் குறித்து நாம் கூறும் மற்றொரு குற்றச்சாட்டு இது: அநியாயங்கள் செய்வோரைத் தண்டிக்க இறைவன் நேரம் எடுத்துக்கொள்ளட்டும், பொறுமை காட்டட்டும். அவர்கள் திருந்துவார்கள் என்று காத்திருக்கட்டும். ஆனால், காத்திருக்கும் அந்த நேரத்தில் நல்லவர்கள், அப்பாவிகள் வதை படுகிறார்களே. அதற்காகவாவது கடவுள் எதையாவது செய்யலாமே. அங்குதான் கடவுள் நம் பங்கை உணர்த்துகிறார் விடுதலைப் பயண நூல் வழியே.
இன்றைய முதல் வாசகத்தில், மோசேயிடம் எரியும் முட்புதர் வழியே கடவுள் தந்தசெய்தி அதுதான்: “எகிப்தில் என் மக்கள்படும் துன்பத்தை என் கண்களால் கண்டேன்... அவர்களின் துயரங்களை நான் அறிவேன். எனவே எகிப்தியரின் பிடியிலிருந்து அவர்களை விடுவிக்கவும், அந்நாட்டிலிருந்து பாலும் தேனும் பொழியும் நல்ல பரந்ததோர் நாட்டிற்கு அவர்களை நடத்திச் செல்லவும் இறங்கிவந்துள்ளேன்.” (விடுதலைப் பயணம் 3: 7-8) இப்படிக் கூறும் கடவுள் மோசேயை அந்த விடுதலைப் பணியை ஏற்கச் சொல்கிறார்.
மோசே தயங்குகிறார். "நான் போய் என்ன செய்ய முடியும். என்னை உயிரோடு குழிதோண்டி புதைத்துவிடுவார்களே" என்று ஒதுங்கிவிட மோசே எண்ணினார். இறைவன் அவருக்கு நம்பிக்கை தந்து, அவரது தயக்கங்களை நீக்கி, அவர் வழியாக ஆற்றிய விடுதலை வரலாறானது.
 கடவுள் எங்கே, கடவுள் ஏன் செயல்படவில்லை என்ற ஆராய்ச்சிகளை ஒதுக்கி வைத்து விட்டு, உலகில் எழும் துன்ப நிகழ்வுகள் நமக்குத் தரப்படும் எச்சரிக்கைகள் என்பதை முதலில் உணர்ந்து மனம் திருந்த முயற்சிப்போம். இந்த துன்பங்களிலிருந்து எழும் அபயக் குரல்களைக் கடவுள் கேட்டு, நம்மை விடுதலைப் பணிக்கு அழைக்கும் போது அதை ஏற்று செய்யும் ஆற்றலை இறைவன் வழங்க வேண்டுவோம்.







All the contents on this site are copyrighted ©.