2010-03-06 15:24:08

ஆப்ரிக்காவின் சில பூர்வீகஇன மக்களின் பழக்கவழக்கங்கள் திருச்சபைக்கு மிகப்பெரும் சவாலாக இருக்கின்றன- உகாண்டா ஆயர்


மார்ச்06,2010 ஆப்ரிக்காவில் நடைமுறையில் இருக்கும் பலதாரத் திருமணங்கள் உட்பட அக்கண்டத்தின் சில பூர்வீகஇன மக்களின் பழக்கவழக்கங்கள் திருச்சபைக்கு மிகப்பெரும் சவாலாக இருக்கின்றன என்று அக்கண்டத்தின் ஆயர் ஒருவர் கூறினார்.

ஆயர்கள் ஐந்தாண்டுக்கு ஒருமுறை திருத்தந்தையைச் சந்திக்கும் அட்லிமினாவை முன்னிட்டு உரோமைக்கு வந்துள்ள உகாண்டா நாட்டு ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் Matthias Ssekamanya இவ்வாறு தெரிவித்தார்.

அனைத்து மக்களும் நற்செய்திப் படிப்பினைகளை உள்வாங்கி இருக்கிறார்கள் என்று கூற முடியாது, இதற்குக் காரணம் மரபுக் கலாச்சாரங்கள் இன்னும் உறுதியாக இருப்பதே என்றுரைத்தார் பேராயர் Ssekamanya.

பிரிவினைவாதக் குழுக்கள் குறிப்பிடத்தக்க நிதிவளத்தைக் கொண்டு இளையோரைத் தம்பக்கம் இழுப்பதற்கு தீவிரமாக முயற்சித்து வருவதும் திருச்சபைக்கு சவாலாக இருக்கின்றது எனவும் உகாண்டா பேராயர் தெரிவித்தார்.

LRA புரட்சிக்குழு உகாண்டாவுக்கு ஏற்படுத்தியுள்ள கடும் சேதங்களைக் குறிப்பிட்ட அவர், இருபது முகாம்களில் வாழ்கின்ற அகதிகளுக்கு உதவி செய்ய வேண்டியிருப்பது பற்றியும் கவலை தெரிவித்தார்.

உகாண்டாவின் சுமார் 2 கோடியே 83 இலட்சம் மக்களில் 44 விழுக்காட்டினர் கத்தோலிக்கர்.








All the contents on this site are copyrighted ©.