2010-03-05 14:44:56

மலேசியாவில் திருநற்கருணையை அவமதித்ததாகக் குற்றம் சாட்டப்படும் இரண்டு முஸ்லீம் பத்திரிகையாளர்கள் பொதுப்படையாக மன்னிப்பு கேட்கத் திருச்சபை வலியுறுத்தல்


மார்ச்05,2010 மலேசியாவில் திருநற்கருணையை அவமதித்ததாகக் குற்றம் சாட்டப்படும் இரண்டு முஸ்லீம் பத்திரிகையாளர்கள் பொதுப்படையாக மன்னிப்பு கேட்டால், அவர்களுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்வதை கத்தோலிக்கத் திருச்சபை நிறுத்தும் என்று கோலாலம்பூர் பேராயர் மர்பி பாக்கியம் (Murphy Pakiam) கூறினார்.

கடந்த ஆண்டு இரண்டு முஸ்லீம் பத்திரிகையாளர்கள், கோலாலம்பூர் கத்தோலிக்க ஆலயத்தில் திருநற்கருணை அருந்தி பின்னர் அதனைத் துப்பி புகைப்படங்களும் எடுத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து அப்பத்திரிகையாளர் மீது புகார் மனுவும் தாக்கல் செய்யப்பட்டது.

எனினும், இது நடந்த ஆறு மாதங்களுக்குப் பின்னர் தற்சமயம் சட்டத்துறைத் தலைவர் அலுவலகம், இந்த முஸ்லீம் பத்திரிகையாளர்கள் மீது மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது என்று அறிவித்திருப்பது கத்தோலிக்கர் மத்தியில் கோபத்தைக் கிளறியுள்ளது.

மலேசிய கத்தோலிக்கரின் இந்நிலைப்பாடு குறித்து யூக்கா செய்தி நிறுவனத்திடம் பேசிய பேராயர் பாக்கியம், மன்னிப்பு, கத்தோலிக்கத்தின் முக்கிய கூறாக இருப்பதால், இவ்விரு முஸ்லீம் பத்திரிகையாளர்களும் பொதுப்படையாக மன்னிப்பு கேட்டால், திருச்சபை அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யாது என்று கூறினார்.

எனினும், இந்த முஸ்லீம்களின் செயல்களைக் கண்டித்து இம்மாத இறுதியில் கோலாலம்பூரில் அமைதிப் பேரணி ஒன்றை நடத்துவதற்கு கத்தோலிக்கப் பொதுநிலையினர் தீர்மானித்துள்ளனர்.

இதற்கிடையே, ஆலயத்தில் மதமாற்றம் எதுவும் நடக்கின்றதா? என்பதைக் கண்டு பிடிப்பதற்குச் சென்றதாகவும், அங்கு மதமாற்றம் எதுவும் நடக்கவில்லை எனவும் அந்தப் பத்திரிகையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மலேசிய அரசியல் அமைப்பின்படி, இசுலாம் மதத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டாலும் மற்ற மதங்கள் கடைபிடிக்கப்படுவதற்குத் தடை இல்லை.








All the contents on this site are copyrighted ©.