2010-03-04 15:10:02

பஞ்சாப் மாநிலத்தில் அடிப்படைவாத இந்துக் குழுவினர் கிறிஸ்தவர்களை உயிருடன் எரித்துக் கொல்ல முனைந்ததை காவல் துறையினர் மறைக்க முயன்றுள்ளனர் என்ற அறிக்கை


மார்ச்04,2010 இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் அடிப்படைவாத இந்துக் குழுவைச் சார்ந்தவர்களில் சிலர் ஐந்து கிறிஸ்தவர்களை உயிருடன் எரித்துக் கொல்ல முனைந்ததை காவல் துறையினர் மறைக்க முயன்றுள்ளனர் என்று அறிக்கை ஒன்று கூறுகிறது.
கடந்த பிப்ரவரி மாதம் பஞ்சாப் மாநிலத்தின் பல இடங்களில் நடந்த சம்பவங்களின் உண்மை நிலையை அறிவதற்கு நியமிக்கப்பட்ட குழு ஒன்று இச்செவ்வாயன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் பல அதிர்ச்சிக்குரிய தகவல்கள் வெளி வந்துள்ளன.
இயேசுவின் உருவப்படம் தரக் குறைவான வகையில் பிரசுரிக்கப்பட்டு வெளியிடப்பட்டதை எதிர்த்து, பஞ்சாப் மாநிலத்தின் பல இடங்களில் எழுந்த ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்து, படாலா (Batala) என்ற இடத்தில் பிப்ரவரி மாதம் 20ம் தேதி கிறிஸ்தவ ஆலயம் ஒன்று தீக்கிரையாக்கப்பட்டது. அந்த சம்பவத்தின் போது, வட இந்திய திருச்சபையைச் சார்ந்த இரு குடும்பத்தினரை உயிரோடு கொளுத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டன என்று இந்த அறிக்கை கூறுகிறது.
உண்மை கண்டறியும் குழுவின் வருகைக்கு முன்   கொளுத்தப்பட்ட கோவிலை விரைவில் புதுப்பித்து, வெள்ளை அடிக்கச் சொல்லி அந்தக் கோவிலின் நிர்வாகத்தை காவல் துறை வற்புறுத்தியதாகத் தெரிய வந்துள்ளதென அந்த அறிக்கை மேலும் கூறுகிறது.
இந்த வன்முறைகளில் ஈடுபட்டோரின் நடவடிக்கைகள் பல வகைகளிலும் 2008ஆம் ஆண்டு ஒரிஸ்ஸாவில் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளை ஒத்ததாக இருந்ததென செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.பஞ்சாபில் தற்போது மூன்று லட்சம் கிறிஸ்தவர்கள் உள்ளனர் என்பதும், இவர்கள் அம்மாநிலத்தின் மக்கள் தொகையில் 1.2 விழுக்காடு என்பதும், 2007ஆம் ஆண்டிலிருந்து அந்த மாநிலத்தில் அகாலி-பாரதீய ஜனதா கட்சிகளின் கூட்டணி பதவியில் இருக்கிறதென்பதும் குறிப்பிடத் தக்கவை.







All the contents on this site are copyrighted ©.