2010-03-04 15:11:53

கொத்து வெடிகளை எந்த நாடும் பயன்படுத்தக் கூடாது எனும் பன்னாட்டு ஒப்பந்தம் சர்வதேச சட்டமாகும் வாய்ப்பு அதிகரித்துள்ளதை கம்போடிய திருச்சபை மகிழ்வுடன் வரவேற்றுள்ளது


மார்ச்04,2010 பல இடங்களில் ஒரே நேரத்தில் வெடித்து பலத்த சேதங்களை விளைவிக்கும் கொத்து வெடிகளை (Cluster Bomb) எந்த நாடும் பயன்படுத்தக் கூடாது எனும் பன்னாட்டு ஒப்பந்தத்தில் இது வரை 30 நாடுகள் கையோப்பமிட்டுள்ளதை மேற்கு கம்போடியாவில் உள்ள தலத் திருச்சபை மகிழ்வுடன் வரவேற்றுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் Burkina Faso மற்றும் Moldavo ஆகிய நாடுகள் இந்த ஒப்பந்தத்தில் கையோப்பமிட்டதால், இதுவரை 30 நாடுகள் இந்த ஒப்பந்தத்தை ஆதரிப்பது தெரிய வந்துள்ளது. இதனால், இந்த ஒப்பந்தம் ஒரு சர்வதேச சட்டமாக வருகிற ஆகஸ்ட் மாதம் முதல் அமலுக்கு வரும் வாய்ப்பு அதிகரித்துள்ளது என்று கொத்து வெடிகளை முற்றிலும் ஒழிக்கும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ள Cluster Munition Coalition என்ற குழு அண்மையில் கம்போடியாவின் ஒரு கோவில் வளாகத்தில் இதைக் கொண்டாடினர்.
கம்போடியாவில் இந்த கொத்து வெடிகள் மற்றும் நிலக்கண்ணி வெடிகளால் உடல் ஊனமுற்ற பலரை பராமரித்து வரும் Arrupe Welcome Centre என்ற அமைப்பைச் சார்ந்தவர்கள், உடல் ஊனமுற்ற பலரோடு இந்தக் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
கம்போடியாவின் ஒரு மூலையிலிருந்து நாங்கள் அனுப்பும் இந்த நம்பிக்கைச் செய்தியால் இன்னும் உலகில் அமைதி அதிகமானால் அதுவே எங்களுக்கு மன நிறைவைத் தரும் என்று இந்த அமைப்பின் அதிகாரி ஒருவர் கூறினார்.1969 முதல் 1973 வரை கம்போடியாவில் நடைபெற்ற வியட்நாம் போரின் போது அமெரிக்கப் படையினர் அந்த நாட்டில் 17,000 முறை கொத்து வெடிகளைக் கொண்டு தாக்குதல்கள் நடத்தினரென்பதும், அங்கு நடந்த அந்த போரின் விளைவாக இன்றும் 60 லட்சத்திற்கும் மேற்பட்ட நிலக்கண்ணி வெடிகள் இன்னும் வெடிக்காமல் உள்ளன என்பதும் அதனால் அந்த நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் பலர் கை, கால்களை இழந்து உடல் ஊனமுறும் நிலைக்கு ஆளாகின்றனர் என்பதும் குறிப்பிடத் தக்கது.







All the contents on this site are copyrighted ©.