2010-03-04 15:12:15

ஈராக்கில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் கிறிஸ்தவர்கள் எந்த வகையிலும் கலந்து கொள்ளக் கூடாதென்று எச்சரிக்கை


மார்ச்04,2010 "வோட்டளிக்கப் போகாதே, கிறிஸ்தவர்களைத் தேர்ந்தெடுக்காதே, அப்படி நடந்தால் நீ கொல்லப்படுவாய்." என்ற வாசகங்களைத் தாங்கிய துண்டு பிரசுரங்கள் ஈராக்கில் மொசுல் நகரில் வாழும் கிறிஸ்தவர்கள் இல்லங்களின் கதவுகள் வழியே இப்புதனன்று திணிக்கப்பட்டிருந்தன.
வருகிற ஞாயிறன்று ஈராக்கில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் கிறிஸ்தவர்கள் எந்த வகையிலும் கலந்து கொள்ளக் கூடாதென்பதை உறுதி செய்யும் வண்ணம் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுளதென FIDES செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
இந்த செய்தி நிறுவனம் அண்மையில் மேற்கொண்ட ஒரு கள ஆய்வின் படி, ஈராக்கில் வாழும் பல கிறிஸ்தவர்கள் இன்னும் அந்த நாட்டில் தங்கி அந்த நாட்டின் சமூக, அரசியல் வாழ்வில் முழுமையாகப் பங்கேற்க விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.
வருகிற தேர்தலில், 6,200 வேட்பாளர்கள் போட்டியிடுவதாகவும், இவர்களில், 48 கிறிஸ்தவர்கள் வேட்பாளர்களாய் களத்தில் உள்ளனர் என்றும் இந்த நிறுவனத்தின் செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
சிறுபான்மையினராய் உள்ள கிறிஸ்தவர்கள் இந்தத் தேர்தலில் பங்கேற்க வில்லையெனில், அவர்களது உரிமைகள் நிலைநாட்டப்படுவதில் சிக்கல்கள் எழும் என்றும், கிறிஸ்தவர்கள் பொது வாழ்விலிருந்து விலகும் போது, பல குற்றவாளிகள் அரசியலில் நுழைந்து இன்னும் பல வழிகளில் கிறிஸ்தவர்களை பொது வாழ்விலிருந்து விலக்குவதற்கான முயற்சிகள் நடக்கும் என்றும் ஈராக்கின் பாராளுமன்ற கிறிஸ்தவ உறுப்பினர் Younadam Kanna தெரிவித்தார். ஈராக்கில் 2003 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட புள்ளிவிவரங்கள் படி 12 லட்சம் கிறிஸ்தவர்கள் இருந்தனர் என்பதும், இன்றைய நிலையில் அவ்வெண்ணிக்கை 6 லட்சமாகக் குறைந்துள்ளதென்பதும் குறிப்பிடத் தக்கது.







All the contents on this site are copyrighted ©.