2010-03-03 14:42:09

மார்ச் 4 தவக்காலச் சிந்தனை


RealAudioMP3 இலாசரும் பணக்காரரும் என்னும் இயேசுவின் உவமை இந்த நாம் வாழும் நூற்றாண்டிற்கும் நிறையவே பொருந்துகிறது. நமது வீட்டிற்கு எதிர்புறமாக அல்லது நமது வீட்டிலேயே; நமது அலுவலகத்திற்கு முன்பாக; நமது பங்கு ஆலயத்திற்கு எதிரில்; நாம் படிக்கச் செல்லும் பள்ளிக்கூட நுழைவாயிலில் நமது துறவு சபைகளின் இல்லங்களுக்கு வெளிப்புறத்தில்; நாம் தினம் நடந்து செல்லும் சாலைகளின் ஓரத்தில் அல்லது பேருந்து நிழற்குடைக்கு முன்பாக என இலாசரும் பணக்காரரும் நம் கண்களின் காட்சிக்குள்ளாகிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை. இதில் நம்மில் ஒருசிலர் இலாசராக இருக்கலாம். அவ்வாறு இலாசராக இருந்து விட்டால் பிரச்சனை இல்லை. ஆனால் நம்மில் பலர் பல வேளைகளில் பணக்காரராக அல்லவா இருக்கிறோம். அந்தப் பணம் படைத்தவரைப் போலவே சமூக ஏற்றத்தாழ்வை, சாதீயப் பாகுபாட்டை, இனவாதச் சிந்தனையை, மதவாத அடிப்படைக் கொள்கைகளை, இயற்கைப் பேரழிவை என அனைத்து அநீதச் செயல்பாடுகளையும் கண்டும் காணாமல் இருப்பதோடு தினமும் வளர்த்தெடுத்துக் கொண்டல்லவாயிருக்கிறோம். இயேசு இன்றைய தினம் நம்மைப் பார்த்து எச்சரிப்பதெல்லாம் அடிமரத்தில் கோடாரி வைக்கப்பட்டு விட்டது. நற்கனி கொடாத மரம் எல்லாம் வெட்டுண்டு அக்கினிக்கு இரையாகும் என்பது.

எனவே நாம் காலம் தாழ்த்த வேண்டாம்

மனம் திருந்தி நற்செய்தியை வாழ்வோம்.(வழங்கியவர் அ.பணி.பவுல்ராஜ் சே.ச)








All the contents on this site are copyrighted ©.