2010-03-03 15:19:27

ஈராக்கில் இடம் பெறும் இரத்தம் சிந்தும் வன்முறைகள் முடிவுக்குக் கொண்டு வரப்படுவதற்கு சிரிய ஆர்த்தாடாக்ஸ் பிதாப்பிதா கோரிக்கை


மார்ச்03,2010 ஈராக்கில் இடம் பெற்று வரும் இரத்தம் சிந்தும் வன்முறைகள் முடிவுக்குக் கொண்டு வரப்படுவதற்கு உதவுமாறு, அரபு நாடுகளின் தலைவர்கள், சர்வதேச சமுதாயம் மற்றும் ஐக்கிய நாடுகள் நிறுவனத்தைக் கோரியுள்ளார் சிரிய ஆர்த்தாடாக்ஸ் பிதாப்பிதா Ignatius Zakka I Iwas.
இவ்வாறு விண்ணப்பித்துள்ள அந்தியோக் மற்றும் அனைத்து கீழைப்பகுதிக்குத் தலைவரான பிதாப்பிதா இக்னேசியுஸ் சாக்கா, ஈராக் கிறிஸ்தவர்கள் இரத்தம் சிந்தவும், அவர்களுக்கான உரிமைகள் மீறப்படவும் காரணமாகியிருக்கின்ற பயங்கரவாதம் வேரோடு தகர்த்தெறியப்படுவதற்கு உலக அரசுகள் ஆவன செய்யுமாறு வலியுறுத்தியுள்ளார்.
ஈராக்கில் நடந்து வருவது, குறிப்பாக அடக்குமுறைகள், கடத்தல்கள், சூறையாடப்படுதல், கொலைகள், தேவநிந்தனைச் செயல்கள் போன்றவற்றுக்குக் கிறிஸ்தவர்கள் அங்குப் பலியாகி வருவது வேதனையளிக்கின்றது என்று பிதாப்பிதாவின் செய்தி கூறுகிறது.
மேலும், வடஈராக்கிலுள்ள மொசூல் நகரில் காணப்படும் பதட்டநிலைகளையொட்டி 4320 கிறிஸ்தவர்கள் இச்செவ்வாயன்று புலம் பெயர்ந்துள்ளனர் என்று ஐ.நா.மனிதாபிமான அலுவலகம் அறிவித்தது.
கிறிஸ்தவப் பல்கலைக்கழக மாணவர்கள் வகுப்புக்கும், தொழிலாளர்கள் வேலைக்கும் செல்லவில்லை என்றும் ஐ.நா. கூறியது.ஈராக்கின் இரண்டாவது பெரிய நகரமான மொசூலிலிருந்து 2008ம் ஆண்டில் 12 ஆயிரத்துக்கு மேலான கிறிஸ்தவர்கள் வெளியேறினர் என்று ஐ.நா. மேலும் கூறியது.







All the contents on this site are copyrighted ©.