2010-03-02 15:22:40

ஐரோப்பாவில் நாடோடி இனத்தவருக்கான மேய்ப்புப்பணி குறித்த தேசிய இயக்குனர்களின் கருத்தரங்கு


மார்ச்02,2010 ஐரோப்பாவில் பலகாலமாக அடக்குமுறைகளையும் புறக்கணிப்புக்களையும் எதிர்நோக்கி வரும் நாடோடி இனத்தவருக்கும் திருச்சபைக்கும் இடையேயான உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது அவசியம் என்று திருப்பீட குடியேற்றதாரர் அவைச் செயலர் பேராயர் அகுஸ்தீனோ மர்க்கெத்தோ கூறினார்.

இச்செவ்வாயன்று வத்திக்கானில் தொடங்கியுள்ள, ஐரோப்பாவில் நாடோடி இனத்தவருக்கான மேய்ப்புப்பணி குறித்த தேசிய இயக்குனர்களின் கருத்தரங்கில் தொடக்கவுரையாற்றிய பேராயர் மர்க்கெத்தோ, நாடோடி இனத்தவர் ஒதுக்கப்பட்டு ஓரங்கப்பட்டுவது சமூகப் பாவம் என்று குறிப்பிட்டார்.

நாத்சி படுகொலைகளிலும் பால்கன் பகுதியில் இடம் பெற்ற இனஅழிப்புக் கொள்கைகளிலும் நாடோடி இனத்தவர் எதிர்கொண்ட அடக்குமுறைகள் பற்றிக் குறிப்பிட்டுப் பேசிய பேராயர், தற்சமயம் பல சர்வதேச மற்றும் தேசிய நிறுவனங்கள் அவர்களுக்கான மனித, சமூக, கலாச்சார மற்றும் சமய நடவடிக்கைகளுக்குக் கவனம் செலுத்தினாலும் இன்னும் பெரும்பாலான இம்மக்கள் இத்தகைய சலுகைகளைப் பெறாமலே இருக்கின்றார்கள் என்று கூறினார்.

இந்த இனத்தவர்க்கான நலப்பணியில் ஐரோப்பாவின் அனைத்துத் திருச்சபைகளுக்குள் நேர்மையான ஒத்துழைப்பு இன்றியமையாதது என்றும் பேராயர் மர்க்கெத்தோ தெரிவித்தார்.

இந்தக் கருத்தரங்கு வருகிற வியாழனன்று நிறைவு பெறும்







All the contents on this site are copyrighted ©.