2010-03-01 15:45:38

நாம் பின்பர்ற வேண்டியவர் இயேசு ஒருவர் மட்டுமே - திருத்தந்தை


மார்ச்01,2010 வாழ்க்கையின் மகிழ்வுகள் இறுதி இலக்கு அல்ல, மாறாக அவை நமது இவ்வுலகப் பயணத்தின் நிரந்தர இலக்குக்கானப் பாதையில் ஏற்றப்பட்டுள்ள தீபங்கள் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.

இயேசுவின் உருமாற்றம் பற்றிய இத்தவக்கால இரண்டாம் ஞாயிறு நற்செய்தி வாசகத்தை அடிப்படையாக வைத்து ஞாயிறு மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை, இயேசுவின் உருமாற்றம் ஓர் அசாதரண நிகழ்வு என்றும் இது இயேசுவைப் பின்பற்றுவதற்கு ஊக்கமளிக்கின்றது என்றும் கூறினார்.

வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கானத் திருப்பயணிகளிடம், இயேசுவின் உருமாற்ற நிகழ்வுக்குச் சாட்சியாக இருந்த மூன்று சீடர்களும் அந்த உருமாற்ற நிகழ்வில் தூங்கிக் கொண்டிருந்தார்கள், இது, இறைவனின் இத்தகைய வியத்தகு மாண்பைப் புரியாதவர்களின் எண்ணத்தைப் பிரதிபலிப்பதாக இருக்கின்றது என்றும் திருத்தந்தை தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் மோசேயும் எலியாவும் இயேசுவிடமிருந்து சென்ற பின்னர் பேதுரு பேசிய பொழுது மேகம் அவரைச் சூழ்ந்து கொண்டது என்ற திருத்தந்தை, அந்நேரத்தில் இவரே நான் தேர்ந்து கொண்ட மகன், இவருக்குச் செவிகொடுங்கள் என்று மேகத்திலிருந்து வந்த குரலை மட்டுமே அவர்களது காதுகள் கேட்டன, கண்களால் எதையும் காண முடியவில்லை என்று கூறினார்.

இயேசுவின் உருமாற்ற நிகழ்வின் போது சீடர்களின் கண்களின் முன்னால் இயேசு மட்டுமே இருந்தார், அவர் ஒருவரது குரலை மட்டுமே நாமும் கேட்க வேண்டும், எருசலேமுக்குச் சென்று தமது வாழ்வை அளித்த அவரை மட்டுமே நாம் பின்செல்ல வேண்டும், அவர் ஒருநாள் துன்பம்நிறை நமது உடலை அவரது மாட்சிமிகு உடலோடு ஒத்திருக்குமாறு மாற்றுவார் என்றும் திருத்தந்தை கூறினார்.

இயேசுவே நமது வாழ்க்கைச் சட்டம் மற்றும் நமது இருப்புக்கு நாம் பின்பற்ற வேண்டியது அவரது திருவார்த்தையே என்பதை இயேசுவின் உருமாற்ற நிகழ்விலிருந்து கற்றுக் கொள்கிறோம் என்று திருத்தந்தை பெனடிக்ட் ஞாயிறு மூவேளை செப உரையில் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.