2010-03-01 15:52:21

தடுப்புக் காவலிலுள்ள போராளிகளை உடனடியாக விடுதலை செய்ய முடியாது: இலங்கை


மார்ச் 01,2010 இலங்கை படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டு, தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட முன்னாள் போராளிகளை உடனடியாக விடுதலை செய்ய முடியாது என, இலங்கை படையினர் அதிகாரப்பூர்வமாக மீண்டும் அறிவித்துள்ளனர் என்று ஊடகச் செய்தி ஒன்று கூறுகிறது.

முன்னாள் போராளிகளையும், பொதுமக்களையும் இலங்கை அரசு முழுவதுமாக விடுதலை செய்ய வேண்டும் என்ற பன்னாட்டு சமூகத்தின் அழுத்தத்திற்கு அடி்பணியாத அரசு, அவ்வப்பொழுது ஒவ்வொரு காரணங்களைக்கூறி, இவர்களின் விடுதலையை இழுத்தடிப்புச் செய்து வருகின்றது என்றும் அச்செய்தி கூறுகிறது.

கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் போராளிகள் அனைவருக்கும் புனர்வாழ்வு அளித்து, அவர்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப இன்னும் பல ஆண்டுகள் எடுக்கும் என்பதால், அவர்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய முடியாது என, இலங்கை படைகளின் புனர்வாழ்வு நடவடிக்கைக்குப் பொறுப்பான படை அதிகாரி சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார் என்றும் அச்செய்தி கூறுகிறது.

தம்மால் தடுத்து வைக்கப்பட்டுள்ள 10,732 பேரில் 1,072 பேர் 3 மாதங்களுக்கு குறைவாகவே விடுதலைப்புலிகள் அமைப்பில் அங்கம் வகித்திருப்பதாகவும், 876 பேர் 6 மாதங்கள் அங்கம் வகித்திருப்பதாகவும், மேலும் ஆயிரம் வரையிலானோர் ஒரு வருடங்கள்வரை உறுப்பினர்களாக இருந்திருப்பதாகவும், 10,732 போராளிகளில் 1,990 பேர் பெண் போராளிகள் எனவும் அவர் மேலும் கூறினார்.

கடந்த ஆண்டு ஜுன் மாத காலப் பகுதிகளில் 14,000 வரையிலான போராளிகள் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளதாக அறிவித்திருந்த இலங்கை அரசு, தற்பொழுது 10,732 பேர் மட்டுமே தடுப்புக் காவலில் இருப்பதாகக் கூறி வருவது பல்வேறு சந்தேகங்களைத் தோற்றுவித்துள்ளது.

அது மட்டுமன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள போராளிகளைப் பராமரிக்க ஒரு மாதத்திற்கு 88 மில்லியன் ரூபாய் தேவைப்படுவதாகக் கூறிவரும் இலங்கை அரசு, தமிழ் வணிகர்கள் மற்றும் தமிழ் அமைப்புகளிடம் நிதி சேகரிக்கும் காரியத்திலும் ஈடுபட்டு வருகின்றது என்றும் கூறப்பட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.