2010-03-01 16:06:02

சகிப்புத் தன்மை, அது ஒருவரை ஒருவர் ஏற்கும் தன்மை


மார்ச்01,2010 மார்ச் ஒன்று. இத்திங்கள் “ஐரோப்பாவில் 24 மணிநேரம் வெளிநாட்டவர் இல்லாத நாள்” என்று பெயரிடப்பட்டு பல நகரங்களில் “வேலைநிறுத்தப் போராட்டங்கள்” நடைபெற்றன. குறிப்பாக இந்நாளில் இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின், கிரீஸ் போன்ற நாடுகளில் வாழும் வெளிநாட்டவர் வேலைக்குச் செல்லவில்லை, அத்துடன் மாலையில் நகரங்களின் முக்கிய சாலைகளில் போராட்டங்களும் கூட்டங்களும் நடத்தினர். இவற்றுக்கு ஏற்பாடு செய்த அமைப்பைச் சேர்ந்த பிரான்சிஸ்கா தெர்சோனி, (Francesca Terzoni) எட்டா பாண்டோ (Edda Pando) ஆகிய இருவரும் ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், “இனவெறிக்கு மறுப்புத் தெரிவித்தல், குடியேற்றதாரரின் உரிமைகளை வலியுறுத்தல்” ஆகியவையே இந்தப் போராட்டத்திற்கான முக்கிய காரணங்கள் என்று விளக்கியுள்ளனர். இவ்வளவிற்கும் பிரான்சிஸ்கா, இத்தாலியர்தான்.

இத்தாலிய செய்தித்தாள் ஒன்று பிரான்செஸ்காவிடம், நீங்கள் இத்தாலியராக இருந்தும் இந்த வெளிநாட்டுக் குடியேற்றதாரர் குழுவில் சேர்ந்திருப்பதற்கு காரணம் என்ன என்று கேட்டது. அதற்கு அவர், இது பலநாட்டவரைக் கொண்ட கலப்படமான குழுவாகும். சொந்த நாட்டிற்குள்ளேயே “அந்நியராக” உணரும் மக்களும் இதில் இணைந்துள்ளார்கள். இத்தாலியில் இனவெறி இருக்கின்றது. இங்கு வாழும் வெளிநாட்டவர் இனவெறிச் சூழலை உணருகின்றனர் என்று பதில் சொல்லியுள்ளார். அந்த ஊடகப் பேட்டியில் பிரான்செஸ்காவும் எட்டாவும் (Edda) காரணங்களை மேலும் விளக்குகிறார்கள்.

இத்தாலியத் தலைநகர் உரோமையில் மட்டும், 2002ம் ஆண்டுக்கும் 2008 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் குடியேற்றதாரர் 157 விழுக்காடு அதிகரித்துள்ளனர். இத்தாலியில் தொழிற்சாலைகளிலும் விவசாயப் பண்ணைகளிலும் மற்ற இடங்களிலும் வேலைசெய்வோரில் பத்து விழுக்காட்டினர் வெளிநாட்டவர். எழுபது விழுக்காட்டு வெளிநாட்டவரைத் தொழிலாளிகளாகக் கொண்டிருக்கின்ற தொழிற்சாலைகளும் உண்டு. ஆனால் இவர்கள் எப்பொழுதும் பாதுகாப்பற்ற சூழலில் வாழவும் வேலை செய்யவும் வேண்டியிருக்கிறது. இந்தக் குடியேற்றதாரர் ஐரோப்பிய நாடுகளின் வளம். இவர்கள் பொதுநல ஒழுங்கு விதிகளுக்கு அச்சுறுத்தலாக இல்லை என்பதை உணர்த்தவே இந்த ஒருநாள் வேலை நிறுத்தம் என்று கூறினர். இன்னும், தென் அமெரிக்க நாடான கொலம்பிய நாட்டு மிரியம் என்ற பெண் சொல்கிறார்

நான் 17 வயதில் உரோமைக்கு வந்தேன். இப்பொழுது 49 வயதாகிறது. 1993ம் ஆண்டிலிருந்து உரோமையில் மாற்றங்களைப் பார்க்கிறேன். இந்த மாநகரத்தில் இனவெறி அதிகமாகத் தெரிகிறது. நான் இத்தாலிய மொழியை நன்றாகக் கற்றுக் கொண்டதால் என்னையே பாதுகாக்க முடிகின்றது. இங்கு உரோமையில் நன்றாக வாழ முடியும், பணம் கொஞ்சம் சேர்க்க முடியும் என்று கேள்விபட்டதால் வந்தேன். வீட்டு வேலையில்தான் முதலில் சேர்ந்தேன். 11 வருடங்கள் ஒரே வீட்டில் கடின வேலை செய்தேன். அப்பொழுது மொழி எனக்குத் தெரியாததால் என்னை அவ்வீட்டினர் நன்கு பயன்படுத்தினார்கள். சரியாகச் சம்பளம் கொடுக்கவில்லை. நான் கொலம்பியாவில் வாங்கின கடனை அடைக்க அது போதுமானதாக இல்லை. நான் முதன்முதலாக உரோமைக்கு வந்த பொழுது வெளிநாட்டவர் அதிகமில்லை. ஆனால் இப்பொழுது நிலைமை வேறுமாதிரி உள்ளது. அப்பொழுது எல்லாருக்கும் வேலை இருந்தது. இப்பொழுது இத்தாலியருக்கே வேலை இல்லாமல் இருக்கின்றது. இனவெறியும் அதிகமாகத் தெரிகின்றது என்று பகிர்ந்து கொண்டார்.

இத்தாலியில் இந்தப் பிப்ரவரி 19ம்தேதி ஓர் அமைப்பு ஒரு புள்ளி விபரத்தை வெளியிட்டிருந்தது. அவ்வமைப்பு, 18 வயதுக்கும் 29 வயதுக்கும் இடைபட்ட இரண்டாயிரம் இளையோரிடம் நடத்திய ஆய்வில், இத்தாலிய இளையோர் வெளிநாட்டவர் மீது சகிப்புத்தன்மை அற்றவர்களாகவும், அவர்களில் 45 விழுக்காட்டினர் வெளிநாட்டவரை விரும்பவில்லை எனவும் தெரிய வந்துள்ளது. ஏறத்தாழ இரு இளைஞர்களுக்கு ஒருவர் என வெளிநாட்டவரை நேருக்குநேர் சந்திக்க விரும்பவில்லை. நூற்றுக்குப் பத்து இளைஞர்கள் வெளிப்படையாகவே இனவெறி கொண்டுள்ளனர். இந்த இனவெறுப்பானது முக்கியமாக, ரொமானியா, அல்பேனியா மற்றும் நாடோடி இனத்தவர் மீது உள்ளது. 14.5 விழுக்காட்டு இளைஞர்கள் மட்டுமே அந்நியர் மீது வெறுப்பில்லாமல் வாழ்கின்றனர் என்று அதில் கூறப்பட்டிருந்தது. அகமது அசிஸ் என்ற 19 வயது எகிப்தியர் சங்கிலிகளால் கட்டி அடிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இது போன்ற இனவெறிக் கொலைச் செய்திகளும் அவ்வப்போது செய்தித்தாள்களில் வெளி வருகின்றன.

அதேசமயம், இத்தாலியில் ஏறத்தாழ 42 இலட்சத்து 79 ஆயிரம் குடியேற்றதாரர் வாழ்கின்றனர். இவர்கள் இத்தாலிய மக்கள் தொகையில் 7.1 விழுக்காடாகும். 2009ம் ஆண்டு ஜனவரியில் இருந்த எண்ணிக்கையைவிட இவ்வாண்டு ஜனவரியில் இவர்களின் எண்ணிக்கை மூன்று இலட்சத்து எண்பத்தெட்டாயிரம் அதிகரித்திருக்கிறது. இதே காலத்தில் வேலைவாய்ப்புக்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. இத்தாலியில் பிறப்புக்கும் இறப்புக்குமான இடைவெளி விகிதம் ஆயிரத்துக்கு 0.3 என்ற விகிதத்தில் இருப்பதால் குடியேற்றதாரரின் இருப்பு நாட்டின் மக்கள்தொகை அதிகரிப்புக்குக் காரணமாக இருக்கின்றது. அதற்காக குடியேற்றதாரருக்கு நன்றியும் தெரிவித்துள்ளது அந்தப் புள்ளிவிபர அறிக்கை.

கடந்த நவம்பரில் சுவிட்சர்லாந்து நாட்டில் நடத்தப்பட்ட பொது மக்கள் கருத்து வாக்கெடுப்பு மூலம் அந்நாட்டில் பள்ளிவாசல் தூபிகள் கட்டப்படுவது தடை செய்யப்பட்டுள்ளது. மேலும், லிபிய நாட்டில் உயர் நிலையில் இருப்பவரில் 188 பேரை கரும்பட்டியலில் (எச்சரிக்கையாய் இருக்க வேண்டியவர் பட்டியலில்) சேர்த்து அவர்கள் சுவிட்சர்லாந்தில் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. லிபிய அரசுத் தலைவர் Muammar Gaddafi யின் மகன்களில் ஒருவரான ஹனிபால் கடாபி, இரண்டு வேலையாட்களைத் தாக்கினார் என்ற குற்றசாட்டில் 2008ம் ஆண்டில் சுவிட்சர்லாந்தில் கைது செய்யப்பட்டார். இவைகளைப் பின்னணியாக வைத்து கடந்த வாரத்தில் லிபிய தலைவர் கடாபி, சுவிட்சர்லாந்துக்கு எதிரான ஜிஹாட் (Jihad) புனிதப் போருக்கு அழைப்பு விடுத்துள்ளார். Gaddafi யின் இச்செயலுக்கு ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் பணியின் பொதுச்செயலர் Sergei Ordzhonikidze கண்டனம் தெரிவித்திருப்பதோடு இது ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது என்று கூறியுள்ளார்.

அன்பர்களே, இதுவரை நாம் கூறியவை, இன்று நாடுகளில் மக்கள் ஒருவர் ஒருவரை எவ்வாறு ஏற்கின்றனர் என்பதற்கான ஒருசில எடுத்துக்காட்டுகள் மட்டுமே. இந்தியாவில் தொடர்வண்டியில் நெடுந்தூரம் பயணம் செய்யும் பொழுது இரண்டாம் வகுப்பு கழிப்பறைகள் ஓரத்தில் ஒரு காட்சியைக் காணாமல் இருக்க முடியாது. கணவன், மனைவி, பிள்ளைகள் என குறைந்தது ஒரு குடும்பமாவது, சரியாக முடிச்சிடப்படாத வெள்ளை நிற உரச்சாக்கு மூட்டையில் வாழ்க்கையின் மிச்சம் மீதிகளைப் பதுக்கி வைத்துக் கொண்டு இறுகிய முகத்துடன் உட்கார்ந்திருப்பார்கள். கழிவறைக்குச் செல்லும் பலரின் இயல்பான ஏச்சுப் பேச்சுக்களையும், முகச் சுளிப்புக்களையும் திருடர்கள் என்ற வசைமொழிகளையும் அவர்கள் கேட்டும், மௌனத்தையே பதிலாக்கிக் கொண்டு ஒதுங்கி இருப்பார்கள். காரணம் பயணச்சீட்டு வாங்க இவர்களிடம் காசு இருந்திருக்காது அல்லது இவர்கள் வாழ்ந்த இடத்தில் ஏதோ ஒன்று வாழவிடாமல் இவர்களைத் துரத்தியிருக்கும். இப்படி வாழ்க்கையின் மீது முழு நம்பிக்கையையும் இழந்தவர்கள் பெரும்பாலும் தற்கொலைக்குத் தள்ளப்படுவார்கள். ஆனால் இந்தக் குடும்பம் போன்ற பயணிகளின் வாழ்க்கையில் ஏதோ ஒரு நுனியில் மட்டும் நம்பிக்கை மெலிதாய் ஒட்டிக் கொண்டிருக்க இவர்கள் பெருநகரங்களை நோக்கிப் பயணம் செய்கிறார்கள்.

இப்படி வாழ்பவர்களைக் கண்டு “இது அவரவர் தலைவிதி” என்று ஒதுங்கி வாழும் பயணிகள், அவர்களை இந்நிலைக்கு ஆளாக்கிய சமூகச் சூழலைச் சகித்துக் கொள்ளும் பயணிகள், அவர்களை மாண்புடனாவது நடத்தலாம் அல்லவா? சுவாமி ஜகி வாசுதேவ் சொல்கிறார் – “சகிப்புத்தன்மையைவிட ஏற்றுக்கொள்ளும் தன்மை உயர்ந்தது. ஆனால் ஒருவருக்கு இந்த ஏற்றுக்கொள்ளும்தன்மை வராவிட்டால், அதன்பிறகு அவருக்குச் சகிப்புத்தன்மையைக் கற்றுத்தர வேண்டும்” என்று. பொதுவாகச் சகிப்புத்தன்மை என்பதற்குப் பொறுமை, கோபத்தை அடக்குதல், பெருந்தன்மை, விட்டுக் கொடுத்தல், பாரபட்சமின்மை, திறந்தமனம் போன்ற சொற்களைப் பயன்படுத்துகிறோம். “நீ சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஆனால், சொல்வதற்கு இருக்கும் உனது உரிமையை எனது இறப்புவரை பாதுகாப்பேன்” என்று தத்துவமேதை வால்ட்டேர் (Voltaire) சொன்னது போல, பிறரது உரிமையை ஏற்பது சகிப்புத்தன்மையாகும். சமய உரிமை, பேச்சு உரிமை, கருத்துரிமை என, எனக்கு எனது அடிப்படை மனிதாபிமான உரிமைகள் எவ்வளவு முக்கியமோ அதேபோல் மற்றவர்களின் அதே உரிமைகளும் அவர்களுக்கு அவ்வளவு முக்கியமாகும்.

திருத்தந்தை 16ம் பெனடிக்ட் இஞ்ஞாயிறு மூவேளை செப உரையில் சிறுபான்மையினரின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டுமென்று தலைவ்களுக்கு அழைப்பு விடுத்த RealAudioMP3 ார். ஈராக்கில் கிறிஸ்தவர்கள் கொலை செய்யப்படுவது குறித்து கவலை தெரிவித்து அவர்களின் உரிமைகள் காக்கப்படுமாறு வலுயுறுத்தினார்.

வாழ்க்கையில் நீங்கள் வெற்றிப்படியை எட்ட வேண்டுமெனில், நீங்கள் எந்த நாட்டில், எந்தச் சூழலில் வாழ்ந்தாலும், மற்றவர் உங்களைக் கேலி செய்யும் பொழுதும், உற்சாகத்தையும் நம்பிக்கையையும் இழக்கக்கூடிய சொல்லம்புகளை வீசும் பொழுதும், உங்களது சகிப்புத்தன்மையை இழக்காதீர்கள். கோபத்தில் உங்களையே மறந்தும்கூட அனல்வார்த்தைகளை வீசிவிடாதீர்கள். அப்படி இருந்தால் நீங்கள் வாழ்க்கையில் முன்னேறவே முடியாது. லீவன் ஷேஜை என்பவர் ஒரு கண்ணாடியை கையில் வைத்துக் கொண்டு மணிக்கணக்காக அதன் வழியாகப் பார்த்துக கொண்டிருப்பாராம். இவருக்குப் பைத்தியம் என்று பலர் இவர் காதுபடவே கேலி செய்வார்களாம். ஆனால் அவர் இவைகளைக் காதில் போட்டிருந்தால் அவரால் “மைக்ரோஸ்கோப்பை”க் கண்டுபிடித்திருக்க முடியாது. அன்று கொல்கட்டா தெருவில் அருளாளர் அன்னை தெரேசா, தன்மீது காரி உமிழ்ந்தவரைச் சகித்துக் கொண்டிருக்காவிட்டால் இன்று அவரின் அறப்பணி இவ்வளவுதூரம் பரவியிருக்காது. தலாய்லாமா சொன்னது போல, ஒருவர் சகிப்புத்தன்மையில் பழகுவதற்கு நல்ல ஆசிரியர் அவரது பகைவரே.

ஜார்ஜ் வாஷிங்டன் கார்வெர்(Carver) சொன்னார் : “நீ இளைஞர்களிடம் எவ்வளவு கனிவாக இருக்கிறாய், முதியோரிடம் எவ்வளவு பரிவோடு இருக்கிறாய், வலுவற்றவர்கள் மற்றும் வலுவுள்ளவர்களிடம் எவ்வளவு சகிப்புத் தன்மையுடன் இருக்கிறாய் என்பதை வைத்தே நீ வாழ்க்கையில் எப்படி இருக்கிறாய் என்று சொல்ல முடியும். ஏனெனில் நீயும் ஒருநாள் இவர்களில் ஒருவராய் இருக்க வேண்டும்” என்று.

எரிக் ஹோப்ஃபெர் (Eric Hoffer) என்பவர் சொல்கிறார் : “நாம் உண்மையிலேயே நம்மை அன்பு செய்வது போல் பிறரை அன்பு செய்கிறோம் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். நமக்கு நாம் என்ன செய்கிறோமோ அதையே பிறருக்கும் செய்கிறோம். பிறரை வெறுக்கும் பொழுது நம்மையே நாம் வெறுக்கிறோம். பிறர்மீது சகிப்புத்தன்மை கொள்ளும் பொழுது நம்மையே நாம் சகித்துக் கொள்கிறோம். பிறரை மன்னிக்கும் பொழுது நம்மையே நாம் மன்னிக்கிறோம்” என்று.

எனவே, அன்பர்களே, எந்த நாட்டில், என்ன வேலை செய்தாலும் நிறம் இனம் மதம் மொழி என்ற பாகுபாடு தவிர்த்து ஒருவர் ஒருவரை ஏற்று வாழ்வோம்.








All the contents on this site are copyrighted ©.