2010-03-01 15:47:31

ஈராக்கில் சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பு அளிக்கப்பட திருத்தந்தை அழைப்பு


மார்ச்01,2010 ஈராக்கில் கிறிஸ்தவர்கள் கொல்லப்படுவது நிறுத்தப்படவும் அந்நாட்டு அரசு சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பு அளிக்கவும் வேண்டுமென்று திருத்தந்தை ஞாயிறன்று அழைப்பு விடுத்தார்.

இஞ்ஞாயிறு மூவேளை செபத்திற்குப் பின்னர் இவ்வாறு கேட்டுக் கொண்ட திருத்தந்தை, இச்சனிக்கிழமை நிறைவடைந்த தியான நாட்களில், ஏற்கனவே இரத்தம் சிந்தப்பட்ட ஈராக்கில் தொடர்ந்து இடம் பெற்று வரும் வன்முறைகள் பற்றி தான் அறிந்ததாகவும், இவற்றில் பாதுகாப்பற்ற சிறுபான்மையினர் பலியாகி இருப்பதாகவும் கவலை தெரிவித்தார்.

நூற்றாண்டுகளாக ஈராக்கில் வாழ்ந்து வரும் கிறிஸ்தவர்கள் அங்கு வாழ்வதற்கு உரிமையைக் கொண்டுள்ளார்கள், அங்கு அவர்கள் தொடர்ந்து வாழ்வதில் தங்கள் உறுதியை இழக்க வேண்டாமெனவும் கிறிஸ்தவர்களைக் கேட்டுக் கொண்ட திருத்தந்தை, அவர்களுடனானத் தனது தோழமை உணர்வையும் தெரிவித்தார்.

ஈராக்கியர்களுக்கு நீதியும் ஒப்புரவும் நிறைந்த எதிர்காலத்தை அமைத்துக் கொடுப்பதற்குச் சர்வதேச சமுதாயம் தன்னால் இயன்ற அனைத்தையும் செய்யுமாறு அழைப்பு விடுத்த திருத்தந்தை, அமைதி எனும் விலைமதிப்பில்லா கொடையை அம்மக்கள் பெறத் தான் செபிப்பதாகவும் உறுதி கூறினார்.

ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளாக கிறிஸ்தவர்கள் வாழ்ந்து வரும் வட ஈராக்கிலுள்ள மொசூல் நகரில் தற்சமயம் சுமார் 15,000 கிறிஸ்தவர்களே உள்ளனர்.

மேலும், மொசூல் நகரில் ஏறத்தாழ ஒவ்வொரு நாளும் கிறிஸ்தவர்கள் கொல்லப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இஞ்ஞாயிறன்று சுமார் ஆயிரம் கிறிஸ்தவர்கள் அந்நகரில் ஊர்வலம் நடத்தினர்.

கிர்குக் நகரில் இதேமாதிரியான ஊர்வலம் இத்திங்களன்று நடைபெற்றது.








All the contents on this site are copyrighted ©.