2010-02-25 16:23:12

சூடான் நாட்டில் தேர்தலில் விழிப்புணர்வுடன் செயல் படுமாறு கூறினார் பேராயர் Paolino Lukudu Loro


பிப்.25,2010 தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களைக் குறித்த அனைத்து விவரங்களையும் அறிந்து அதன் பின் ஓட்டளிக்குமாறு பேராயர் Paolino Lukudu Loro கேட்டுக் கொண்டுள்ளார். கடந்த 24 ஆண்டுகளுக்குப் பின் சூடான் நாட்டில் நடைபெறவிருக்கும் தேர்தலையொட்டி, அந்நாட்டின் Juba உயர்மறை மாவட்டப் பேராயர் Loro அண்மையில் வெளியிட்ட ஆயர் மடலில் மக்களை விழிப்புணர்வுடன் செயல் படுமாறு கூறினார்.
வருகிற ஏப்ரல் மாதத்தில் நடைபெற விருக்கும் தேர்தல் சூடான் நாட்டின் அரசியல் மற்றும் பொது வாழ்க்கையில் மறு மலர்ச்சியை ஏற்படுத்த வேண்டுமென பேராயர் Loro அம்மடலில் குறிப்பிட்டுள்ளார். "மக்களின் உண்மையான குரலே, இறைவனின் குரல்" என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள இம்மடலில் தேர்தலுக்குத் தயாரிக்கும் இக்காலம் தவக்காலமாய் இருப்பது மிகவும் பொருத்தமானது என்று கூறும் பேராயர், தவக்காலம் நம் ஒவ்வொருவரையும் மறு மலர்ச்சி பெற அழைப்பது போல், வரும் தேர்தல் நம் நாட்டையும் மறுமலர்ச்சிக்கு இட்டுச் செல்லும் என தான் நம்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த காலங்களில் சூடானில், குறிப்பாக தென் சூடானில் இடம் பெற்ற இன மோதல்கள், கொலைகள், ஆள் கடத்தல்கள், ஊழல்கள் என அனைத்திற்கும் இத்தவக்காலத்தில் இறைவனிடம் மன்னிப்பு வேண்டுவதோடு, இவைகளைக் களைய உதவும் நல்ல தலைவர்களைத் தேர்ந்தெடுக்கவும் மக்கள் உதவ வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார் பேராயர். தென் சூடானில் வாக்காளர்களுள் 60 விழுக்காட்டினருக்கு இதுவே முதல் தேர்தல் என்பதையும் பேராயர் சுட்டிக் காட்டினார்.







All the contents on this site are copyrighted ©.