2010-02-25 16:21:15

இராக்கில் கிறிஸ்தவர்களுக்கு இன்னும் அதிக பாதுகாப்பு கொடுக்கப்படுவதைத் திருத்தந்தை மிகவும் விரும்புகிறார் 


பிப்.25,2010 இராக்கில் கிறிஸ்தவர்கள் கொலையுண்டது தனக்கு மிகுந்த மன வேதனையை அளிக்கிறது என்று திருத்தந்தை 16ம் பெனெடிக்ட் கூறினார். இச்செவ்வாயன்று இராக்கின் மொசுல் நகரில் சிரிய கத்தோலிக்க குரு ஒருவரின் தந்தையும், இரு சகோதரர்களும் கொல்லப்பட்டுள்ள செய்தி ஆண்டு தியானத்தில  ஈடுபட்டுள்ள திருத்தந்தையை அடைந்த போது, அவர் இவ்வாறு தன் வருத்தத்தை வெளியிட்டார் என்று வத்திக்கன் செய்தித்தாள் கூறியது.
திருத்தந்தையின் விருப்பத்திற்கு இணங்க இவ்வாண்டு சனவரி மாதம் இராக்கின் பிரதம மந்திரிக்கு திருப்பீடத்தின் முதன்மை செயலர் கர்தினால் Tarcisio Bertone எழுதிய கடிதமும் இச்செய்தித் தாளில் இப்புதனன்று வெளியிடப்பட்டது. இக்கடிதத்தில் கர்தினால் Bertone இராக்கில் கிறிஸ்தவர்களுக்கு இன்னும் அதிக பாதுகாப்பு கொடுக்கப்படுவதைத் திருத்தந்தை மிகவும் விரும்புகிறார் என்றும் அண்மைக் காலங்களில் அந்த நாட்டில் நடந்துள்ள வன் முறைகளால் பாதிக்கப்பட்டுள்ள கிறிஸ்தவர், முஸ்லிம் அனைவருக்கும் தன் செபங்களைத் திருத்தந்தை வழங்குகிறார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
 இச்செவ்வாயன்று நடைபெற்ற இந்த தாக்குதல்களைக் கேள்விப்பட்ட திருத்தந்தை தான் ஈடுபட்டிருக்கும் தியான நேரங்களில் துன்புறும் அனைத்து மக்களுக்காக தன் செபங்களை இறைவனிடம் சமர்பிப்பதாக கூறியுள்ளார் என இச்செய்திக் குறிப்பு மேலும் கூறுகிறது.இதற்கிடையே, இராக்கில் இச்செவ்வாய் நடைபெற்ற வன்முறைகளை கண்டித்து அனைத்து கிறிஸ்தவ சபைகளும் குரல் எழுப்பியுள்ளன. இராக் அரசு அந்த நாட்டில் வாழும் கிறிஸ்தவர்களைக் காக்க இன்னும் தீவிர முயற்சிகள் மேற்கொள்ள வேண்டுமென ஆர்மீனியன் ஆர்த்தடாக்ஸ் சபையின் பேராயர் Avak Asadourian கூறியுள்ளார். இயேசு கிறிஸ்துவை உலகுக்கு வழங்கிய மத்திய கிழக்குப் பகுதியில் கிறிஸ்தவர்களின் பிரசன்னம் தொடர்வதே உலகிற்கு நாம் காட்டக்கூடிய ஓரு சிறந்த அடையாளம் என்று பேராயர் Asadourian கூறினார்.







All the contents on this site are copyrighted ©.