2010-02-24 13:34:37

பிப்ரவரி 25. தவக்காலச்சிந்தனை


RealAudioMP3 "கேளுங்கள் உங்களுக்குக் கொடுக்கப்படும்" என்கிறார் இயேசு. சில ஆண்டுகளுக்கு முன்பு நானும், எனது நண்பர் ஒருவரும் பிச்சை எடுக்கும் அனுபவத்தில் ஈடுபட்டோம். ஒரு நாள் பழைய சோறு கிடைத்தது. அதை வைத்துக்கொண்டு உண்ண ஆரம்பித்த போது சற்று தொலைவில் அமர்ந்து பிச்சை எடுத்த தொழுநோய் தாய் தனது குழந்தையிடம் சிறு ஊறுகாய் துண்டைக் கொடுத்து எங்களிடம் தரச் சொன்னார். பிச்சைக்காரர்களாகிய எங்களுக்கு எது தேவை என்பதை அறிந்து, கேட்காமலேயே உதவிய அந்த தொழுநோய்த் தாயின் அன்பை என்னென்று சொல்வது.

நம்மில் யாராவது அப்பம் கேட்கும் நம் குழந்தைக்கு கல் கொடுப்போமா?

மீன் கேட்கும் குழந்தையிடம் பாம்பைத் தருவோமா?

சாதாரணமாக நாமே நம்மவர்களுக்கு நன்மையைச் செய்ய முயலும் போது நமது இறைத்தந்தை நமக்கு எவ்வளவு மேலான நன்மைகளைச் செய்வார் என சிந்திப்பது நல்லது.

வாழ்வு, குடும்பம், பெற்றோர், சகோதர, சகோதரியர், உற்றார், உறவினர், நண்பர்கள் எனப் பல கொடைகள் நாம் கேட்காமலேயே நமக்கு வழங்கி நம்மை அன்பு செய்யும் நமது இறைத் தந்தையிடம் நாம் வருந்தி இத்தவக்காலத்தில் கேட்டால் அவர் நமக்குத் தராமல் இருப்பாரா?

எனவே குழந்தைக்குரிய நம்பிக்கையோடு கேளுங்கள் உங்களுக்குக் கொடுக்கப்படும்.

(இயேசு சபை அருட்தந்தை பால்)








All the contents on this site are copyrighted ©.