2010-02-23 14:00:06

விவிலியத் தேடல்:


RealAudioMP3
சில ஆண்டுகளுக்கு முன் பார்த்த தமிழ் திரைப்படம் ஒன்றை நினைத்துப் பார்க்கிறேன்.  என்ன படம் என்பது தேவையில்லை. ஏறத்தாழ எல்லாத் தமிழ் திரைப்படங்களிலும் வரும் கதை தான். சமுதாயத்தில் நடக்கும் பல தீமைகளைத் தனி ஆளாய்த் தீர்க்கும் ஹீரோ; அப்படி தீமைகளை ஒழிக்க, தீமைகள் செய்யும் வில்லன்களைத் தீர்த்துக்கட்டும் ஹீரோ இந்தத் திரைப்படத்திலும் காட்டப்பட்டார். நமது நாயகர்கள் அண்மைக் காலங்களில் எதையாவது ஒரு வசனத்தை, ஏதாவது ஒரு செய்கையைத் திரைப்படம் முழுவதும் அடிக்கடிச் சொல்வார்கள், செய்வார்கள். மக்களின் கைத்தட்டலைப் பெறுவார்கள்.
அதே போல், இந்தத் திரைப்படத்திலும் நடந்தது. தீமை செய்பவர்களை ஹீரோ சந்திப்பார். அடித்து நொறுக்குவார். அவரது அடிகளைத் தாங்க முடியாமல் அவர்கள் மன்னிப்பு கேட்பார்கள். உடனே அவர், "மன்னிப்பு... எனக்குப் பிடிக்காத ஒரு வார்த்தை." என்று சொல்வார். இப்படி சொல்லி விட்டு, மன்னிப்பு கேட்ட வில்லனைத் தீர்த்து கட்டுவார். திரை அரங்கில் விசிலும், கைத்தட்டலும் ஒலிக்கும். நீதி, நியாயம் என்ற பெயரில் நம் திரைப்படங்களில் வன்முறைகளை சர்வ சாதாரணமாக செய்யும் நம் நாயகர்களுக்கு மன்னிப்பு என்ற வார்த்தை பிடிக்காது. மன்னிப்பு என்ற வார்த்தை அவர்கள் அகராதியிலேயே கிடையாது என்று ஒரு சில ஹீரோக்கள் வசனம் பேசியிருக்கிறார்கள்.
இதற்கு நேர் மாறான ஒரு நிகழ்ச்சி அன்று கல்வாரியில் நடந்தது. விடுகின்ற ஒவ்வொரு மூச்சுக்கும் சிலுவையில் மரண போராட்டம் நடத்தி வந்த இயேசு மன்னிப்பு தனக்கு மிகவும் பிடித்த ஒரு சொல், செயல் என்று நிரூபித்தார். தன்னை மூன்று நாட்களாய் பல வகையிலும் சித்தரவதை செய்தது போதாதென்று இன்னும் தன்னைச் சுற்றி நின்று கேலி செய்து கொண்டிருந்த அந்த வீரர்களை, அவர்களுக்குப் பின் இருந்து அவர்களைத் தூண்டிய அரசுத் தலைவர்களை, மதத் தலைவர்களை... அனைவரையும் மனதார மன்னித்தார். அவர்களை இறைவனும் மன்னித்து, அவர்களைக் காக்க வேண்டுமென வேண்டிக்கொண்டார். 'தந்தையே, இவர்களை மன்னியும். ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை' என்று சொன்னார்.

நமது திரைப்பட நாயகர்கள், மிருகங்களாய் மாறிய மனிதரைப் பழி வாங்க, அவர்களும் மிருகங்களாய் மாறுவர். இயேசுவோ மிருகங்களாய் மாறி தன்னை வதைத்த மனிதர்களை மீண்டும் மனிதர்களாய் மாற்ற தெய்வமாக மாறினார்.
எந்த ஒரு மனிதரும் மிருகமாகவோ, மனிதராகவோ, புனிதராக, தெய்வமாகவோ வளர அவரது பிறப்பு, வளர்ப்பு இன்னும் பல காரணங்கள் உள்ளன. சிறு வயதில் கற்றுக் கொள்ளும் பாடங்கள் இறுதி வரை ஒருவரின் வாழ்வை உருவாக்கும், மாற்றும் என்பது நமக்குத் தெரிந்த உண்மைகள். இயேசுவின் வாழ்க்கையைக் கொஞ்சம் சிந்திப்போம். அவர் சிறு வயது முதல் ரோமைய அராஜக்கத்தைப் பல வழிகளிலும் பார்த்து வந்தவர். அந்த அராஜகத்தை ஒழிக்க, அந்த அராஜகத்தை வெல்ல அவரும் ஆசைபட்டிருப்பார். ஒன்றை வெல்வதற்கு அதைக் கொல்ல வேண்டுமென்று கட்டாயம் இல்லையே. வேறு வழிகள் உள்ளன. அவற்றில் மிகவும் உன்னதமான வழி அன்பு வழி. அன்பினால் எதையும் வெல்ல முடியும் என்பதைத் தான் இயேசு தன் வாழ்வில், சிறப்பாக சிலுவை மரணத்தில் நிரூபித்தார்.
சிறு வயது முதல் இந்த அன்பு வழியை அவருக்குப் போதித்து, அவருக்கு வழிகாட்டி வாழ்ந்து வந்த மரியா, யோசேப்பு இருவரையும் நாம் நன்றியோடு நினைத்துப் பார்க்க வேண்டும். அவர்கள் சொல்லித்தந்தவைகளும், அவர்கள் வாழ்ந்த விதமும் இயேசுவை ஓரளவாகிலும் உருவாக்கியிருக்க வேண்டும். மன்னிப்பை குழந்தை இயேசுவுக்கு, சிறுவன் இயேசுவுக்கு அந்த பெற்றோர் ஊட்டி வளர்த்திருக்க வேண்டும். இப்படி ஒரு அன்புச் சூழலில் அவர் வளர்ந்து வந்ததால், அவரால் ஒரு பரந்த மனம், பரந்த பார்வை இவற்றைப் பெற முடிந்தது.
பிறந்தது முதல் பல கொடுமைகளுக்கு ஆளாகி, அதனால் மனம், உடல் அனைத்தும் கசப்பில், வெறுப்பில் தோய்ந்திருக்கும் குடும்பங்களை, சிறப்பாக, அந்தச் சூழலில் வளரும் குழந்தைகளை எண்ணிப் பார்ப்போம், அவர்களுக்காக வேண்டுவோம்.

மன்னிப்பைப் பற்றி இயேசு வாழ்ந்த ஒவ்வொரு நாளும் பேசினார். மன்னிப்பைச் செயலாக்கினார். நோயுற்றோரைக் குணமாக்கிய போது உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன என்று கூறி குணம் அளித்தார். விபச்சாரத்தில் பிடிபட்ட பெண்ணை தீர்ப்பிடாமல் மன்னித்து அனுப்பினார். (யோவான் 8) ஊதாரி பிள்ளை போன்ற அற்புதமான கதைகள் வழியே கடவுளின் நிபந்தனை அற்ற அன்பை, அதனால் வரும் மன்னிப்பை அழகாகச் சொன்னார். அன்புள்ளங்களே, இன்று நேரம் கிடைத்தால், தயவு செய்து லூக்கா 15ம் அதிகாரத்தை நிதானமாய் வாசித்துப் பாருங்கள்.
மன்னிப்பைப் பற்றி இயேசு சொன்னவைகளை, செய்தவைகளை எல்லாம் சிந்திக்க பல விவிலியத் தேடல்கள் தேவைப் படும். பின்னர் முயற்சி செய்வோம். இன்று அவர் மன்னிப்பைப் பற்றி கூறிய ஒரு கருத்தை மட்டும் சிந்திப்போம். ஒருவர் தவறு செய்யும் போது, எத்தனை முறை மன்னிப்பது? நமது சிந்தனைக்கு உறுதுணையாக இரு நற்செய்தி வாசகங்களைக் கேட்போம்.

லூக்கா நற்செய்தி 17 3-4
அக்காலத்தில் இயேசு கூறியது:உங்களுடைய சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் பாவம் செய்தால் அவரைக் கடிந்துகொள்ளுங்கள். அவர் மனம் மாறினால் அவரை மன்னியுங்கள். ஒரே நாளில் அவர் ஏழு முறை உங்களுக்கு எதிராகப் பாவம் செய்து ஏழு முறையும் உங்களிடம் திரும்பி வந்து, ‘நான் மனம் மாறிவிட்டேன்என்று சொல்வாரானால் அவரை மன்னித்து விடுங்கள்.”  
மத்தேயு நற்செய்தி 18 21-22
பேதுரு இயேசுவை அணுகி, “ஆண்டவரே, என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் எனக்கு எதிராகப் பாவம் செய்துவந்தால் நான் எத்தனை முறை அவரை மன்னிக்க வேண்டும்? ஏழு முறை மட்டுமா?” எனக் கேட்டார். அதற்கு இயேசு அவரிடம் கூறியது: ஏழுமுறை மட்டுமல்ல; எழுபது தடவை ஏழுமுறை என நான் உனக்குச் சொல்கிறேன்.” 
ஏழு முறை மன்னிக்கலாமா? இது கேள்வி. ஏழு முறை அல்ல, எழுபது தடவை ஏழுமுறை. இது பதில். தயவு செய்து கணக்கு போட ஆரம்பிக்காதீர்கள். இயேசுவுக்கும் பேதுருவுக்கும் இடையே நடந்தது கணக்குப் பாடம் அல்ல. இங்கு சொல்லப்பட்டுள்ள எண்கள் கணக்கைத் தாண்டியவை. யூதர்களுக்கு ஒரு சில எண்கள் பொருளுள்ள எண்கள். 7,12,40... இப்படி. இதில் ஏழு என்பது ஒரு நிறைவான எண். எனவே, பேதுரு ஏழு முறை மன்னிக்கலாமா? என்ற இந்தக் கேள்வியைக் கேட்ட போது, ஏதோ பெரிய ஒரு சாதனையைப் பற்றி தான் பெசிவிட்டதைப் போன்று அவர் எண்ணியிருக்கலாம். இயேசு, எண்களைத் தாண்டி, கணக்கையெல்லாம் தாண்டி எப்போதும் மன்னிக்கச் சொன்னார். அதைக் கொஞ்சம் வித்தியாசமாகச் சொன்னார்.

இயேசு சொன்னதை இப்படி நான் கற்பனை செய்து பார்க்கிறேன். “பேதுருவே, நீ கேட்கும் கேள்வி எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. எத்தனை முறை மன்னிப்பது என்று நீ கேட்பது, எத்தனை முறை சுவாசிப்பது என்று கேட்பது போல் உள்ளது. சுவாசிப்பதற்கு ஒரு கணக்கா? சுவாசிப்பதற்கு கணக்கு பார்த்தால், உடல் இறந்து விடும். அதே போல், மன்னிப்பதற்கு கணக்கு பார்த்தால்... உள்ளம் இறந்து விடும்.” இப்படி சொல்வதற்கு பதில், இயேசு "எழுபது தடவை ஏழுமுறை" என்று கூறினார்.

இயேசு தன் இறுதி மூச்சு வரை மன்னிப்பை தன் சுவாசமாக்கியது போல் கோடிக் கணக்கில் மக்கள் மன்னிப்பை வாழ்க்கையில் கடைபிடித்துள்ளனர். மனித வரலாற்றில் புனிதர்கள் மட்டுமல்ல சாதாரண மனிதர்களும் மன்னிப்பிற்கு அற்புதமான சாட்சி பகர்ந்திருக்கிறார்கள்.
அண்மைக் காலங்களில் நான் கேட்டவைகளில் என் மனதில் ஆழமாய் பதிந்து விட்ட ஒரு செய்தி இது. 2005ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ரமதான் பண்டிகை காலத்தில், Ahmed Khatib என்ற பாலஸ்தீனிய சிறுவன் ஒருவன் இஸ்ராயேல் வீரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டான். அவன் வைத்து விளையாடிக் கொண்டிருந்த பொம்மை துப்பாக்கியை உண்மைத் துப்பாக்கி என்று நினைத்த வீரர்கள் Ahmed ஐச் சுட்டனர்.
வீரர்கள் தங்கள் தவறை உணர்ந்ததும், உடனே அந்தச் சிறுவனை இஸ்ராயேல் பகுதியில் இருந்த ஒரு மருத்துவ மனைக்கு எடுத்துச் சென்றனர். அவனது பெற்றோரையும் அழைத்துச் சென்றனர். Ahmed ஐக் காப்பாற்ற முடியவில்லை. அந்த நேரத்தில் அந்தத் தாயும், தந்தையும் அற்புதம் ஒன்றைச் செய்தனர். அவனது தந்தையும், தாயும் Ahmedன் உடல் உறுப்புகளைத் தானம் செய்ய முன் வந்தனர். ஆனால், அவர்கள் ஒரு நிபந்தனை இட்டனர். Ahmed இடமிருந்து பெறப்படும் உறுப்புகள் எல்லாம் இஸ்ராயேலில் உள்ளவர்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட வேண்டும் என்பது தான் அவர்களது நிபந்தனை.
தங்கள் மகனைச் சுட்டுக் கொன்றவர்கள் இஸ்ராயேல் படையினர் என்று தெரிந்தும் Ishmael என்ற அந்தத் தந்தை செய்தது மன்னிப்பின் உச்ச கட்டம். Ishamael சாதாரண ஒரு மெக்கானிக். அந்தப் பெற்றோரின் இந்த செயலைப் பற்றி பத்திரிக்கையாளர்கள் கேட்ட போது, Ishmael சொன்னது இதுதான்: "என் மகனின் உறுப்புக்கள் வழியே வாழப்போகும் இஸ்ராயேல் மக்கள் இனிமேலாகிலும் சமாதானத்தை விரும்புவார்கள் என்ற நம்பிக்கையில் தான் இந்த உறுப்புகளை நாங்கள் தானம் செய்தோம்."
அந்தப் பெற்றோரை இஸ்ராயேல், பாலஸ்தீனிய அரசுகள் பாராட்டின. பல தீவிரவாத குழுக்களும் பாராட்டின. அரசுகளும், தீவிரவாத குழுக்களும் கொண்டு வர முயன்றும் முடியாத பாலஸ்தீனிய இஸ்ராயேல் ஒப்புரவை ஒரு எளிய மெக்கானிக் குடும்பம் ஒரு சிறிய அளவில் கொண்டு வந்தது.
 இது போன்ற ஆயிரமாயிரம் சம்பவங்கள் நடக்கின்றன. இனியும் நடக்கும். நம் வாழ்விலும் மன்னிப்பை தந்த நேரங்கள், பெற்ற நேரங்கள் அப்போது நாம் அடைந்த அந்த நிம்மதி, நிறைவு இவற்றைச் சிந்திப்போம். அவ்வப்போது நடந்து வரும் இந்த அற்புதங்களை தினம் தினம் நடத்தினால், ஒவ்வொரு நொடியும் நடத்தினால், மன்னிப்பு மழையில் இந்த உலகம் நனைந்தால்... மன்னிப்பது சுவாசிப்பதைப் போல் நம் ஒவ்வொருவருக்கும் நம் இயல்பாகவே மாறிவிட்டால்... அழகான கனவுகள் என்று சொல்லவேண்டாம். நாம் நினைத்தால் இந்தக் கனவுகளை நனவாக்க  முடியும். இறை அருளை வேண்டுவோம்.







All the contents on this site are copyrighted ©.