2010-02-23 14:43:21

இளம் சிறார்களுக்கான பாலியல் கல்வியை எதிர்க்கிறது இங்கிலாந்து தலத்திருச்சபை


பிப்.23,2010 இங்கிலாந்து பள்ளிகளில் மிக இளம் வயதிலேயே பாலியியல் கல்வியை புகுத்துவது மற்றும் பள்ளிகளிலேயே கருக்கலைத்தல்களை ஊக்குவித்தல் போன்றவைகளை உள்ளடக்கிய புதிய சட்டப்பரிந்துரை குறித்து கவலையை வெளியிட்டுள்ளது தலத்திருச்சபை.

கருக்கலைத்தல், கருத்தடை, ஒரே பாலின உறவு மற்றும் ஏனைய பாலின நடவடிக்கைகள் குறித்து சிறு வயதினருக்கு கற்பிக்க வழி செய்யும் புதிய சட்டப் பரிந்துரை, இதனை அனைத்துப் பள்ளிகளிலும் கட்டாயப் பாடமாக்க முயல்வதையும் கத்தோலிக்க அதிகாரிகள் எதிர்த்துள்ளனர்.

அரசு நிதியுதவி பெறும் அனைத்து பள்ளிகளும் இக்கல்வியை கட்டாயமாக போதிக்கவேண்டும் என்ற இச்சட்டத்தினால் பாதிக்கப்பட உள்ளது கத்தோலிக்கப் படிப்பினைகள் அல்ல, மாறாக பெற்றோர் குழந்தைகள் மற்றும் அரசுக்கு இடையேயான நல்லுறவுகளே என பல வல்லுனர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

15 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளை இத்தகைய கல்வி வகுப்புகளிலிருந்து விலக்க பெற்றோருக்கும் உரிமை இல்லை என்ற புதிய சட்டப்பரிந்துரை ஏற்றுக்கொள்ளப்படமுடியாதது எனவும் திருச்சபை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாலியியல் கல்வியை துவக்கப்பள்ளிகளில் இருந்தே, அதாவது குழந்தைகளின் 5 வயதிலிருந்தே கற்பிக்க இங்கிலாந்தின் புதிய சட்டப் பரிந்துரை வழிசெய்கிறது.








All the contents on this site are copyrighted ©.