2010-02-20 16:25:35

சிறார்ப்படைவீரர்கள் விடுதலை : இலங்கை அரசு அறிவிப்பு


பிப்.20,2010 மேலும், விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்த, சிறார்கள் அனைவரும் மே மாதத்திற்குள் விடுவிக்கப்படுவார்கள் என இலங்கை அரசு தெரிவித்துள்ளதாக ஊடகம் ஒன்று கூறியுள்ளது.
இலங்கை இராணுவத்துடனான சண்டையில் விடுதலைப்புலிகள் அமைப்பு தோற்கடிக்கப்பட்டதையடுத்து, அவ்வமைப்பில் இருந்த 18 வயதிற்கு குறைவான சிறார்ப் படைவீரர்கள் 510 பேர், கடந்த ஆண்டு மே மாதம் அரசிடம் சரண் அடைந்தனர் என்றும், சரணடைந்த அவர்களை, ஓராண்டு காலத்திற்கு மறுவாழ்வு முகாமில் வைத்து மறுவாழ்வு திட்டப் பயிற்சிகள் வழங்கிய பின்னர் அவர்களை விடுவிக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது என்றும் ஊடகச் செய்தி கூறுகிறது.
அண்மையில், 150 தமிழ்ச் சிறார்ப் படைவீரர்கள் அவர்களின் பெற்றோர் மற்றும் பாதுகாவலரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
மேலும் 273 தமிழ்ச் சிறார்ப் படைவீரர்கள், கொழும்பின் புறநகர்ப் பகுதியான ரத்மாலனாவில் உள்ள முகாமில் தங்களின் படிப்பை தொடர்ந்து வருகின்றனர். இவர்கள் உட்பட அனைத்துத் தமிழ்ச் சிறார்ப் படைவீரர்கள் மே மாதத்திற்குள் விடுவிக்கப்படுவர் என்றும் கூறப்பட்டுள்ளது.சில பெற்றோர்கள், மறுவாழ்வு முகாம்களில் உள்ள தங்களின் குழந்தைகளை ஏற்க மறுக்கின்றனர். அப்படி ஏற்க மறுக்கும் குழந்தைகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவர். அதன் பின், நீதிமன்ற உத்தரவுப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த ஊடகச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.







All the contents on this site are copyrighted ©.