2010-02-20 16:24:52

கத்தோலிக்கத் திருச்சபையில் அருட்பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது- Annuario Pontificio 2010


பிப்.20,2010 கத்தோலிக்கத் திருச்சபையில் 2007ம் ஆண்டு முதல் 2008ம் ஆண்டு வரையிலான காலத்தில் விசுவாசிகளின் எண்ணிக்கை மேலும் ஒரு கோடியே 90 இலட்சம் அதிகரித்திருந்ததாக இச்சனிக்கிழமை வெளியிடப்பட்ட வத்திக்கான் புதிய புள்ளி விபரத் தொகுப்பு ஏடு கூறிகிறது.
2007ம் ஆண்டில் 114 கோடியே 70 இலட்சமாக இருந்த கத்தோலிக்கரின் எண்ணிக்கை, 2008ல் 116 கோடியே 60 இலட்சமாக உயர்ந்தது என்றும் மொத்தத்தில் 1.7 விழுக்காடு அதிகரித்துள்ளது என்றும் அவ்வேடு தெரிவிக்கிறது.
இதே காலக் கட்டத்தில் உலகின் மக்கள் தொகையும் 662 கோடியிலிருந்து 670 கோடியாக அதிகரித்தது என்பதையும் அவ்வேடு சுட்டிக் காட்டுகிறது.
இச்சனிக்கிழமை திருத்தந்தையிடம் வழங்கப்பட்ட Annuario Pontificio 2010 என்ற வத்திக்கான் மற்றும் அகிலத் திருச்சபை பற்றிய முழு புள்ளி விபரங்களைக் கொண்ட இவ்வாண்டுக்கான ஆண்டுக் குறிப்பேடு இவ்வாறு கூறுகிறது.
உலகில் 2009ம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து கத்தோலிக்கத் திருச்சபையின் வாழ்வு குறித்த தகவல்களை உள்ளடக்கிய இந்தத் தொகுப்பைத், திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே தலைமையிலான திருப்பீடச் செயலகக் குழு திருத்தந்தையிடம் சமர்ப்பித்தது.
கடந்த ஆண்டில் எட்டு புதிய திருஆட்சி பீடங்களும் 169 புதிய ஆயர்களும் நியமிக்கப்பட்டனர் என்று இவ்வேடு கூறுகிறது.

2007ம் ஆண்டு முதல் 2008ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் அகிலத் திருச்சபையில் ஆயர்களின் எண்ணிக்கை 1.13 விழுக்காடு அதிகரித்துள்ளது, அதாவது ஆயர்களின் எண்ணிக்கை 4946 லிருந்து 5002 ஆக உயர்ந்துள்ளது.
இரண்டாயிரமாம் ஆண்டிலிருந்து 2008ம் ஆண்டு வரையிலான காலத்தில் உலகில் மறைமாவட்ட மற்றும் துறவற அருட்பணியாளர்கள், தியோக்கோன்கள் ஆகியோரின் எண்ணிக்கையும் ஏறத்தாழ ஒரு விழுக்காடு அதிகரித்துள்ளது. அதாவது இவ்வெண்ணிக்கை 405,178 லிருந்து 408,024 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் அருட்சகோதரிகளின் எண்ணிக்கை 7.8 விழுக்காடாகக் குறைந்துள்ளதாக இவ்வேடு தெரிவிக்கிறது. அதாவது 2000மாம் ஆம்டில் 801,185 ஆக இருந்த எண்ணிக்கை, 2008ல் 739.067 ஆகக் குறைந்துள்ளது.







All the contents on this site are copyrighted ©.