2010-02-20 16:25:22

இலங்கையில் சிங்களவர்கள் தமிழ் கற்கின்றனர்


பிப்.20,2010 இலங்கையின் 26 வருட உள்நாட்டுச் சண்டையின் போது சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையே ஏற்பட்ட பிளவுகளைக் குணப்படுத்தும் நோக்கத்தில் தலத்திருச்சபை சிங்களவர்களுக்குத் தமிழ் மொழியைக் கற்றுக் கொடுக்கும் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
அமலமரி தியாகிகள் சபையினர் நடத்தும் CSR என்ற, சமுதாயம் மற்றும் மதங்களுக்கான மையத்தில் இளையோர் வயது வந்தோர் அருட்சகோதரிகள் என அனைத்து தரப்பினருக்கும் தமிழ் மொழி கற்றுக் கொடுக்கப்பட்டு வருகின்றது.
இத்திட்டம் குறித்துப் பேசிய அச்சபையின் அருட்பணியாளர் ரோகன் சில்வா, நிர்வாகத்தில் தமிழ் மொழிக்கு சம அந்தஸ்து கொடுப்பதற்கு நேர்மையுடன் அர்ப்பணித்தால் அது ஒப்புரவு ஏற்பட உதவி செய்யும் என்று தெரிவித்தார்.
தமிழ் மொழி அறிவு இல்லாமை, சமூகங்களுக்குள் பிரிவினைகளை உருவாக்கி அவை போரில் கொண்டு போய் நிறுத்தின என்றும் அக்குரு கூறினார்.
மொழியானது சமூகங்களைப் பிரிக்கவும் உதவும் மற்றும் அது பயன்படுத்தப்படும் முறையை வைத்து ஒன்றிணைக்கவும் உதவும் என்றும் அருட்பணியாளர் சில்வா தெரிவித்தார்.இலங்கையில் சிங்களம் மட்டுமே அதிகாரப்பூர்வ மொழி என்று 1956ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட போது கலவரங்களும் அதிருப்தியும் வெளிப்படுத்தப்பட்டன. மேலும், 1978ம் ஆண்டின் இலங்கையின் அரசியல் அமைப்பு, சிங்களம், தமிழ் ஆகிய இரண்டு மொழிகளையும் அதிகாரப்பூர்வ மொழிகளாகவும் ஆங்கிலத்தை மூன்றாவது பொது மொழியாகவும் அங்கீகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.







All the contents on this site are copyrighted ©.